திரையுலகை அச்சுறுத்தும் அரசியல்

தமிழ் சினிமாவும் அரசியலும் பிரிக்க முடியாதது. திமுக ஆட்சியில் எம்ஜிஆர் படம் எதிர்கொண்ட பிரச்னை முதல் மெர்சல் வரையிலான அரசியலை விவரிக்கிறது.

tamil cinema - politics

இரா.குமார்

தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சொல்லப் போனால், இரண்டும் பின்னிப் பிணைந்தவை. தமிழகத்தின் ஐந்து முதல்வர்கள் சினிமாவுடன் தொடர்புடையவர்கள். அதிலும் இரண்டு முதல்வர்கள் முழுக்க முழுக்க சினிமாவில் இருந்தே வந்தவர்கள். ஆனாலும், அரசியலால்தான் பல நேரங்களில் சினிமா அலைக்கழிக்கப்படுகிறது. மிரட்டப்படுகிறது.

திமுகவின் நிறுவனத் தலைவர், அண்ணா, திரைப்படத்துக்குக் கதை எழுதியவர். நாடகங்கள் எழுதியும், சில நாடகங்களில் அவரே நடித்தும் தமது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அண்ணா. ராஜா, ராணிகளும் செல்வச் சீமான்களும் மட்டுமே கதாநாயகனாக, கதாநாயகியாக அமைக்கப்பட்டு திரைப்படங்கள் வந்த நிலையில், வேலைக்காரியை கதாநாயகி ஆக்கி, வேலைக்காரி படத்தின் மூலம் புரட்சி செய்தார் அண்ணா.

கருணாநிதியின் கதை வசனத்துக்கென்றே திரைப்படம் பார்த்தவர்கள் ஏராளம், அரசையும், சமுதாயத்தையும் ஏன் நீதித்துறையையுமே கடுமையாக விமர்சிக்கும் அனல் பறக்கும் வசனங்களைக் கொண்டது, இவரது பராசக்தி படம். இந்தப்படம் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தடை நீக்கப்பட்டது. திமுகவின் கொள்கைகளைப் பரப்ப திரைப்படத்துறையை அண்ணாவும் கருணாநிதியும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். மிகப்பெரிய கதாநாயகர்களில் ஒருவரான எம்ஜிஆர், அப்போது திமுகவில் இருந்தது, மேலும் உதவியாக இருந்தது.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டபோதுதான், அவர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியிடத் தயாரான நிலையில் இருந்தது. பெரும் பொருட்செலவில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி தயாரிக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்தப் படத்தை வெளியிட விடாமல் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது திமுக அரசு. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாக விடமாட்டோம். படம் வெளியானால் தூக்குப் போட்டுக்கொள்கிறேன் என்று சவால் விட்டார், திமுகவைச் சேர்ந்த மதுரை மேயர் முத்து.
எல்லா தடைகளையும் மீறி படத்தை வெளியிட எம்ஜிஆர் தயாரானார்.

திரைப்படங்களுக்கு சுவரொட்டி ஒட்ட தடை விதித்தது திமுக அரசு. சுவரொட்டி இல்லாமல், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து படத்தை வெளியிட்டு ஓட்டுவேன் என்றார் எம்ஜிஆர். அதன்படியே செய்தார். சுவரொட்டியே ஒட்டாமல் வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன். படம் சக்கை போடு போட்டு, வெள்ளிவிழா கண்டது. இது கருணாநிதி காலத்தில் திரைப்படம் சந்தித்த தொல்லை.

கருணாநிதி, எம்ஜிஆர், ஆகியோரின் வாழ்க்கையை மையப்படுத்தி இருவர் படத்தை எடுத்தார் மணிரத்னம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு எடுக்கப்பட்ட படம் இது. படம் வெளியானபோது திமுக எதிர்க்கட்சியாக இருந்ததால், பிரச்னை இல்லாமல் படம் வெளியானது. ஆனாலும், கதையில் நிறைய சமரசம் செய்துகொண்டிருந்தார் மணிரத்னம்.

அர்ஜுன் நடித்த முதல்வன் படம் வெளியானபோது கருணாநிதி முதல்வராக இருந்தார். படத்தில் சில காட்சிகள் கருணாநிதியை விமர்சிப்பது போல இருந்தன. “முதல்வன் படம் பார்த்தீர்களா?” என்று கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டனர். “நானே முதல்வன். நான் எதற்கு முதல்வன் படம் பார்க்க வேண்டும்?” என்று கடுப்புடன் பதிலளித்தார் கருணாநிதி.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில், டி.ராஜேந்தர் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. எம்ஜிஆருக்கு பயந்து, டி.ராஜேந்தர் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாருமே முன்வரவில்லை. பின்னர், திமுக பிரமுகர் ஒருவரே, படத்தை வாங்கி வெளியிட்டார்.

2006 -2011ல் திமுக ஆட்சியில் இருந்தபோது, ஒட்டுமொத்த திரையுலகமே, திமுக குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. தயாரிப்பு, வெளியீடு, டிவி. உரிமை என்று அத்தனையையும் கருணாநிதி குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் திரைத்துறையினர் பாதிக்கப்பட்டு, திமுக மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்தக் கோபம், 2011 தேர்தலின்போது வெளிப்பட்டது.

ஜெயலலிதா ஆட்சியின்போதும் திரையுலகம் தப்பவில்லை. கமல் நடித்த படம் ஒன்றுக்கு ‘சண்டியர்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதற்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதற்கு எதிப்பு தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் கமலஹாசன். “எதற்குப் பிரச்னை? பெயரை மாற்றிவிடுங்களேன்” என்றார் ஜெயலலிதா. இதனால், சண்டியர், “விருமாண்டி” ஆனது.

கமலஹாசன் நடித்து, அவரே தயாரித்த விஸ்வரூபம் படம், வெளியிட முடியாத அளவுக்கு பெரும் பிரச்னையை சந்தித்தது. படத்துக்கு எதிராக இஸ்லாமிய தலைவர்கள் பலர் அதிகாரத்தில் இருந்தவர்களால் தூண்டிவிடப்பட்டனர். படம் வெளியிடப்பட்டால், தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் வந்ததாகக் கூறி, விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து ஒட்டுமொத்தமாக 32 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களும் உத்தரவிட்டனர். மீறி வெளியிட்டால் பாதுகாப்பு தரமுடியாது என்றும் கூறினர்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கமலஹாசன். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து, உண்மையான கலைஞனுக்கு மரியாதை இல்லை என்றால், நாட்டை விட்டே போகிறேன்” என்றார் கமலஹாசன்.
மக்கள் ஆதரவு, கமலஹாசனுக்குப் பெருகியது. இந்த நிலை தொடர்ந்தால், அரசின் பெயர் கெட்டுவிடும் என்ற நிலை உருவானது. இதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, இதற்கென்றே பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டினார். “கமலஹாசன் என்னை சந்தித்து பிரச்னையை சொல்லியிருந்தால், நான் தீர்த்து வைத்திருப்பேன்” என்றார்.

இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் கமலஹாசன். பின்னர், சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு விஸ்வரூபம் படம் வெளியானது.

இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில், மெர்சல் படம் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளது. மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி விஜய் பேசும் வசனத்தால் பாஜகவினர் மெர்சலாகியுள்ளனர். ஜிஎஸ்டி, டிஜிடல் இந்தியா ஆகியவற்றை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையேல் வழக்குத் தொடர்வோம் என்று மிரட்டுகிறார் தமிழக பாஜ தலைவர். “ஜோசப் விஜய்” என்று சொல்லி பாய்கிறார் ஹெச்.ராஜா.
இப்படி காலந்தோறும் ஆட்சியாளர்களின் மிரட்டலுக்கு ஆளாகி வருகிறது தமிழ்த் திரைப்பட உலகம். இப்படிப்பட்ட நிலை தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The film is threatening politics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express