Advertisment

மயக் என்னும் மானுட பேரழிவு

60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் உலகம் பரவலாக அறியாத ஒரு வன்முறை அரங்கேறியது. வரலாற்றின் கவனம் கிடைத்திருந்தால் மயக் ஒரு மானுட துயரமாக பதிவாகியிருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mayak

மயக்கில் அணு கழிவுகள் சேமித்து வைக்கப்பட்ட கிடங்கு

கோ.சுந்தர்ராஜன்

Advertisment

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இதே நாளில் இப்போதும் உலகம் பரவலாக அறியாத ஒரு வன்முறை அரங்கேறியது. 1986ல் செர்னோபில் நடக்கும் வரை உலகின் மிக மோசமான அணு விபத்தாக மயக் விபத்து இருந்தது. வரலாற்றின் கவனம் கிடைத்திருந்தால் மயக் ஒரு மானுட துயரமாக பதிவாகியிருக்கும். இப்போதும் அது அப்படிதான்.

இரண்டாம் உலக போர் முடிந்த பிறகு, அணு ஆயுதங்களில் பின் தங்கியிருப்பதாக நினைத்த ரஷ்யா அவசர அவசரமாக அமைத்த அணுவுலை வளாகம்தான் மயக். 1945 தொடங்கி 48க்குள் இது கட்டி முடிக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு அம்சங்களோ அணு விபத்து பற்றிய விழிப்புணர்வோ இல்லாத நிலையில் மயக் ஒரு மாபெரும் வன்முறையாக உருமாற காத்துக்கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தொடக்க காலத்திலேயே கதிரியக்க கழிவுகள் அருகிலிருந்த ஏரியில்தான் வீசப்பட்டன.

அணு உலை விபத்துகளை வகைப்படுத்த INES (International Nuclear Event Scale) என்னும் அளவுகோல் உள்ளது. அதில் எண் 7 மிகப்பெரிய விபத்தையும், எண் 1 சிறிய விபத்துக்களையும் குறிக்கும். இதுவரை வெளியுலகத்திற்கு தெரிந்த அணு உலை விபத்துகள் எல்லாம் வகை 7 சார்ந்தவை. அவை, மூன்று மைல்கல் தீவு, செர்னோபில், புகுஷிமாவில் 3 உலைகள் ஆகியவற்றில் நிகழ்ந்த விபத்துகள். ஆனால் அதிகம் வெளியே தராத ஆனால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய விபத்துகள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது "மயக்" அணுசக்தி மறுசுழற்சி மய்யத்தில் நடந்த விபத்து. INES அளவுகோலில் எண் 6 வகையை சார்ந்த விபத்து. அதிகமாக அறியப்படாத ஆனால் மிகப்பெரிய அளவில் பேரழிவை இப்போதும் கொடுத்து கொண்டிருக்கும் விபத்து.

1959ல் செப்டம்பர் மாதம் 29ந் தேதி வழக்கம் போலதான் விடிந்தது. ஆனால் அந்த விடியல் அந்த பகுதியின் மீது மிகப்பெரிய இருளை பூசிவிட்டுச் செல்லும் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் கிழக்கே 1400 கி.மீ, தூரம் இருக்கும் உரால் பகுதியில் உள்ள உலகத்தின் மிகப்பெரிய அணு சக்தி வளாகத்தின் அந்த காலைப்பொழுதின் அமைதி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. வளாகத்திலிருந்து மிக அதிகமான கதிர்வீச்சு (highly radioactive) கொண்ட திரவத்தை தேக்கி வைத்திருந்த தொட்டி வெடித்தது. சுமார் 740 பெக்குரேல் (PBq) அளவிற்கு கதிர்வீச்சை வெளியேற்றியது அந்த வெடிப்பு. அதனால் சுற்றியுள்ள 217 நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழ்ந்த 2,72,000 மக்களை இந்த கதிர்வீச்சு தாக்கியது. செர்னோபில் விபத்து நடைபெறும் வரை இது தான் உலகத்தின் மிகப்பெரிய அணுசக்தி தொடர்பான விபத்தாக இருந்தது.

KURMANOVA/RUSSIA Ramzes Faisullin (16) wrote a letter to the Duma, the Russian parliament, to ask them not to give permission for the import of nuclear waste. “Every week we carry somebody to the grave in this village. If you want to store nuclear waste மயக் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரமிஸ் ஃபய்சுல்லியன்

மயக் என்பது அணுவுலை வளாகம். மிக அருகில் இருந்த (கூடங்குளம் அணுவுலைகளுக்கு இடிந்தகரை போல) கிஷ்டம் (Kyshtym disaster) என்கிற நகரத்தின் பேரில்தான் இந்த பேரழிவு இப்போதும் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பிறகு கதிர்வீச்சு 50 கி.மீ. அகலத்தில், 300 கி.மீ நீளத்தில் பரவியது. ஒரு வருடத்தில் சுமார் 1000 சதுர.கி.மீ அளவிற்கு கதிர்வீச்சின் பாதிப்பு இருந்தது. அந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் மக்கள் யாரும் வெளியேறவில்லை. விபத்து நடந்து ஒரு வாரம் கழித்து எந்த காரணமும் சொல்லாமல் பத்தாயிரம் பேர் வெளியேற்றப்பட்டார்கள்.

60 வருடங்களை கடந்துவிட்ட நிலையில் மயக் தான் இன்று உலகத்தின் அதிக கதிர்வீச்சு கொண்ட பகுதியாக இருக்கிறது. அந்த பகுதியில் பல்லாயிர கணக்கான மக்கள் இன்னமும் கதிர்வீச்சு பாதிப்பினால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுளார்கள். மயக் பகுதியில் புற்று நோயின் அளவும், மரபணு குறைபாடுகளுடன் உள்ளவர்களின் அளவும் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வரலாற்றின் தவறுகளிருந்து ரஷ்யா பாடம் கற்றுக்கொள்ளாமல், வெளி நாடுகளிலிருந்து அணு கழிவுகளை (spent fuel) இறக்குமதி செய்து மயக் அணுசக்தி மய்யத்தில் மறுசுழற்சி செய்கிறது. மறுசுழற்சி செய்யும் போது உற்பத்தியாகும் கழிவுகள் மயக் வளாகத்தில் சேமித்து வைக்கப்படுகின்றன. அது சேர்த்துவைப்பது கழிவுகளை அல்ல பேரழிவை என்று ரஷ்யா உணர்ந்தாலும் அதற்காக எந்த மெனக்கெடலும் இருக்காது. அப்படியே விபத்து நிகழ்ந்தாலும் பாதிக்கப்பட போவது எளிய மக்கள்தானே?

இன்றும் கதிர்விச்சு நிலத்திலும் அருகில் கதிரியக்க நீர் கொண்ட டெக்கா நதியிலும் சுமார் 7000 பேர் நேரடியாக புழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் போது மஸ்லிமவவொ பகுதியில் வாழும் மக்கள் கேன்சரால் அதிகமாக பாதிக்கப்படுவதாக க்ரீன்பீஸ் அமைப்பொன்றின் ஆய்வு சொல்கிறது. விபத்து நடந்து ஐம்பது வருடங்கள் கழித்து 2007ல் இந்த பகுதி மக்களை மறு குடியமர்த்தலாம் என்று அதிகார வர்க்கத்துக்கு தோன்றியிருக்கிறது. ரஷ்ய அணுவுலை அமைப்பான ரொசோட்டம் (இவர்கள்தான் கூடங்குளம் அணுவுலைக்கு துருப்பிடித்த பாகங்களை வழங்கியவர்கள்) அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது. ஆனால் ‘நிதி நெருக்கடி’ காரணமாக நதிக்கு மிக அருகில் இருப்பவர்கள் மட்டுமே மறு குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதுவும் அதே ஊரில் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஏதோவொன்று என்று மனம் சமாதானமடைய முடியாது. காரணம் இந்த புதிய குடியிருப்பில் உள்ள குடி நீரில் ரஷ்ய பாதுகாப்பு நிர்ணயம் சொல்லும் பாதுகாப்பு அளவுகளை விட கதிரியக்கம் இரண்டு மூன்று மடங்கு அதிகமிருக்கிறது.

”என் பெயர் ரமிஸ் ஃபய்சுல்லியன். நான் பிறக்கும் போதே உடல் ஊனத்துடன் பிறந்திருக்கிறேன். இப்போது எனக்கு 16 வயது. என் வயதையொத்தவர்கள், பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். எனக்கும் ஆசைதான். ஆனால் பள்ளிக்கு சென்றால் கூட படிப்பவர்கள் கிண்டல் செய்கிறார்கள். எனக்கு அடிக்கடி நோய்வாய்ப்பட்டு போவேன். நான் மற்றவர்களை போல இல்லை. இது எனக்கு மிக துயரமான விசயம். நான் அவர்களைப் போல இருக்க விரும்பிகிறேன். அவர்களைப் போல அழகாக இருக்க வேண்டும். அவர்களைப் போல பெண்களுடன் பழக வேண்டும். ஆனால் என்னைப் பார்த்தாலே பெண்கள் ஓடிவிடுகிறார்கள். என்னைப் போல இருக்கும் குழந்தைகள் எனக்கு பிறக்க கூடாது. அதனாலேயே கதிரியிக்க கழிவு இறக்குமதியை நான் எதிர்க்கிறேன். அமைச்சர்களுக்கும் மற்றவர்களுக்கும் பணம்தான் முக்கியம் என்றால் அவர்கள் மாஸ்கோவில் அணுவுலைகளை நிறுவிக்கொள்ளட்டும்? எங்கள் சின்ன கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் யாராவது ஒருவர் கேன்சரில் இறக்கும் அளவுக்கு நாங்கள் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாட்டுக்குள் கதிரியக்க கழிவை அனுமதிக்கும் முன்பு எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். கொஞ்சம் எங்களுடைய எதிர்காலம் பற்றியும் யோசியுங்கள்.”

மயக் அணுவுலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு 16 வயது சிறுவன் ரஷ்ய அதிபருக்கு எழுதிய கடிதம் இது. அவனது கவலைகளும் கேள்விகளும் அவனுடையது மட்டுமல்ல. பிறகு அது செர்னோபில் குழந்தைகளின் கவலைகளாகவும் கேள்விகளாகவும் மாறியது. நேற்று அந்த கேள்விகளும் கவலைகளும் புகுஷிமா குழந்தைகளிடமிருந்து வந்தன. நாளை நம் கூடங்குளத்து குழந்தைகளிடமிருந்தும் அது வரலாம்.

G Sundarrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment