ஸ்ரீவித்யா
இந்தியா – சீனா – பூட்டான் எல்லையில் அமைந்துள்ள் டோக்லாம் பகுதியில், இரண்டரை மாதங்களாக நடந்து வந்த பிரச்னைக்கு சுமுக முறையில் தீர்வு கண்டதன் மூலம், சர்வதேச அரங்கில், இந்தியாவின் பெருமை மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அமைதியை விரும்பும் நாடு, போருக்கு வலிந்து செல்லாத நாடு, அண்டை நாடுகளுடன் நட்பை விரும்பும் நாடு, மற்றவர்களுடைய எல்லையை ஆக்கிரமிக்காத நாடு என்ற, இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளுக்கு கிடைத்துள்ள மற்றொரு வெற்றி இதுவாகும்.
ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்க போக்கை கையாண்டு வரும் சீனா, டோக்லாம் பிரச்னை மூலம் மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்த முயன்றது. அதன் முயற்சிக்கு கிடைத்துள்ள சம்மட்டி அடி.
எல்லையில், சீன ராணுவத்துக்கு கடும் சவால் விடுத்து, அதன் முயற்சிகளை தடுத்து, 1965ல் இருந்த இந்தியா வேறு, தற்போதுள்ள இந்தியா வேறு என்பதை சீனாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பறைசாற்றியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானின் அத்துமீறல்களை சமாளிக்கும் அதே நேரத்தில், பாகிஸ்தானின் முகத்திரையை உலக அரங்கில் கிழித்தெறிந்தது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன், அதிரடி அதிபரான டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்தினார்.
தற்போதும், சீனா பக்கபலமாக இருக்கும் மிதப்பில், அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது பாகிஸ்தான். இது மற்ற நாடுகளுடனான தூதரக உறவுகள் மூலம் இந்தியா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலனாகும்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து, சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதையும் திடமாக பதிவு செய்யப்பட்டது.
இந்த நேரத்தில், ஆசிய பிராந்தியத்தில், இந்தியாவின் வளர்ச்சி, சீனாவுக்கு பல்லில் சிக்கிய பொருளாக இருந்தது. மிக வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவை எப்படி அடக்குவது என்பதற்காக, சீனா ரூம் போட்டு யோசித்தபோது, அதிகார போதையில் எடுத்து முடிவுதான், டோக்லாம் ஆக்கிரமிப்பு முயற்சி.
இந்தியப் படைகள் கொடுத்த பதிலடியை சீனா எதிர்பார்க்கவில்லை. 1965ல் நடத்த போரை நினைவு பார்க்க வேண்டும் என்று எச்சரித்தது. அகிம்சை மூலம் நடந்த மிகப் பெரிய போராட்டத்தில், சுதந்திரம் பெற்ற இந்தியா, எதற்கும் அசராமல் அமைதியாக செயல்பட்டது. எல்லையில் ஆக்கிரமிப்பை தடுத்த அதே நேரத்தில், சீனாவுடன் பேச்சும் நடத்தியது.
வடகொரியா நடத்திவரும் ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்த அதன் நட்பு நாடான சீனா எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.
இவ்வாறு பல முனைகளில் இருந்து தாக்குதல் வரும் என்று சீனா எதிர்பார்த்திருக்காது. உலகிலேயே, நாட்டை ஆளும் கட்சியின் கீழ் செயல்படும் ராணுவத்தை கொண்டுள்ள சீனா, போருக்கும் தயாராக இல்லை. அது சீனாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை உணர்ந்தது. ஆனாலும் எல்லையில் இருந்து படைகளை முதலில் வாபஸ் வாங்கவும் தயாராக இல்லை.
இதை உணர்ந்து, இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகளின்படியே, படைகளை இருவரும் வாபஸ் பெறுவோம் என்று அறிவிக்கப்பட்டது. இது இந்தியாவின் அமைதியான முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
ஆனால், இந்தியா தான் முதலில் படைகளை வாபஸ் பெற்றது. அதனால் நாங்களும் வாபஸ் பெறுகிறோம் என்று சீனா கூறியது. இது உண்மையில்லை என்பதை உலக நாடுகள் அறியும். டோக்லாம் பிரச்னையில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது.
சீனாவின் இந்த வார்த்தைகளை நாம் அசட்டை செய்யக் கூடாது. அது சரிதான். டோக்லாம் பிரச்னையில் இருந்து, இனி நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வியூகங்களை வகுக்க, பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய பாடமாகும்.
சீனா தனது நாட்டின் எல்லை வரை, சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளது. டோக்லாம் பிரச்னையில், அதன் நிலப்பரப்பு நமக்கு சாதகமாக இருந்ததால், சீனாவில் முன்னேறி வர முடியவில்லை. இல்லையென்றால் நிலைமை வேறு மாதிரியாகி இருக்க வாய்ப்பு உள்ளது.
அதனால், நமது நாட்டின் எல்லைப் பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தற்போதைக்கு அடிப்பட்ட புலியாக சீனா உள்ளது. தற்போது செய்த தவறை அடுத்த முறை செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால், முன்னெச்சரியாக, எல்லைப் பகுதி கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
அடுத்தது, தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஆக்கிரமித்தபோது, சிறு சிறு நாடுகள் அதன் ஆதிக்கத்துக்கு முன் நிற்க முடியாமல் பணிந்தன. டோக்லாம் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு, இந்த பிராந்தியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். டோக்லாம் பிரச்னை எங்களுக்கும், பூட்டானுக்கும் உள்ள பிரச்னை என்று சீனா கூறியபோது, அதை ஏற்க மறுத்த இந்தியா, பூட்டானையும் சேர்த்துக் கொண்டு, எதிர்ப்பு தெரிவித்தது.
அதனால், இனி சீனா ஆக்கிரமிக்க வந்தால், சிறு நாடுகளின் கூட்டம் எதிர்க்கும்.
இந்த நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதிதான், சீனாவின் அடுத்த இலக்காக இருக்கும். அதன் பெரும்பாலான வர்த்தகம், இந்தப் பிராந்தியத்தை நம்பியே உள்ளது. அதனால், இந்தியப் பெருங்கடல் பகுதியில், குறிப்பாக, மலாக்கா நீரிணைப்பு பகுதியில், நமது பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். அந்தமான்- நிகோபார் தீவுகளில், நமது படைத் தளத்தை உருவாக்க வேண்டும். இது சீனாவின் ஆக்கிரமிப்பு, ஆதிக்க போக்குக்கு நாம் வைக்கும் செக்காக அமையும்.
அதற்கடுத்து, மற்ற நாடுகளுடனான நட்புறவை மேலும் வலுபடுத்த வேண்டும். குறிப்பாக, ஜப்பான், வியட்நாம் போன்றவற்றுடன் நட்பை வலுப்படுத்த வேண்டும்.
தனது பொருளாதாரத்தை, வர்த்தகத்தை உயர்த்த, பாகிஸ்தானுடன், பொருளாதார பாதை திட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது. அதேபோல், இலங்கையில் துறைமுகம் அமைக்க உதவுவதாகக் கூறியது. அது இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனக்கு ஆதரவாக நாடுகளை சேர்ப்பதன் நோக்கமே.
இத்தகைய நட்பு கூட்டத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். சீனாவுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு அபிரிமிதமானது. அதில் தற்போது சீனாவின் கையே ஓங்கியுள்ளது. அந்த உறவை நமக்கு சாதகமாக்கி கொள்ளும் வகையிலான திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.
உலகின் அடுத்த பொருளாதார வல்லரசாக சீனா உருவாகி வருகிறது. அப்போது இந்தியா, மூன்றாவது இடத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், இந்தியா வளர்ந்து வருவதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் சீனா மேற்கொள்ளும். அப்போதுதான் முழு வெற்றி கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.