Advertisment

நேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான உறவை மிகக் கவனமாக நேரு நெய்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நேரு : இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பியவர்

சுஷாந்த் சிங்

Advertisment

இந்தியாவின் பிரதமராக மகத்தான செயல்களைப் புரிந்த ஜவகர்லால் நேருவின் சாதனை பக்கங்களில் சறுக்கல்களாகக் காஷ்மீர், சீனா ஆகியவை திகழ்கின்றன. தற்போது எல்லாம் வரலாற்றை மறுவாசிப்பு செய்கிற பல்வேறு புத்தகங்கள் வெளிவருகின்றன. இந்த நூல்கள் இந்திய ராணுவத்துக்கு போதுமான மரியாதையை நேரு தராமல் போனதாலே காஷ்மீர், சீனப்போர்களில் தோல்வியைத் தழுவினார் என்று குற்றம் சுமத்துகின்றன. அதிகாரப்பூர்வ வரலாறுகளில் நேரு இறுக்கம் வாய்ந்த அமைதி விரும்பியாகச் சித்தரிக்கப்படுகிறார். இது பெருமளவில் உண்மைக்குப் புறம்பானதாகும். இதனால் தான் மறுவாசிப்பு வரலாறுகள் நம்பகத்தன்மையைப் பெறுகின்றன. நேரு எப்படி ராணுவ தளத்திலும் புவி-அரசியலின் ஆழ, அகலங்களை உணர்ந்த ராஜதந்திரியாக இருந்தார் என வரலாற்று ஆசிரியர்கள் சிலாகிக்கிறார்கள். அதைப் பிறகொரு நாள் விரிவாகப் பேச வேண்டும். அது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை.

சீன, காஷ்மீர் சிக்கல்களைத் தாண்டி இந்தியாவில் எழுபது ஆண்டுகளைக் கடந்தும் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பதற்குக் காரணமான வலிமையான அடித்தளத்தை எப்படி நேரு அமைத்துக் கொடுத்தார் என்பதை ஆராய்வோம்.

இந்த வரலாறு விடுதலைக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. ஆங்கிலேய முடியாட்சியிடம் இருந்து இந்திய, பாகிஸ்தானின் சுதந்திர டொமினியன்களுக்கு அதிகாரத்தைக் கைமாற்றும் நடவடிக்கையின் பகுதியாக இடைக்கால அரசு ஒன்று காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்களோடு செப்டம்பர் 1946-ல் அமைக்கப்பட்டது. இதில் வைஸ்ராயின் செயற்குழுவில் (பிரதமருக்கு இணையான) துணைத் தலைவராக நேரு பதவியேற்றுக் கொண்டார். பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு இணையான பொறுப்பான பாதுகாப்பு உறுப்பினராக இருந்து வந்த ராணுவத் தளபதியின் இடத்திற்கு அரசியல் தலைவரான சர்தார் பல்தேவ் சிங்கை நேரு நியமித்தார். இது எதோ போகிற போக்கில் முடிவு அல்ல. இந்திய தேசியவாதிகள், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் நெடுங்காலக் கோரிக்கையின் கூட்டு வெளிப்பாடே அது. 1928-ல் வெளிவந்த மோதிலால் நேரு குழு அறிக்கை வைஸ்ராய் செயற்குழுவின் பாதுகாப்பு உறுப்பினர் ராணுவ பின்புலம் இல்லாத மக்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதன் நோக்கம் ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இரும்புப் பிடிக்குள் வைத்திருப்பதே ஆகும்.

ஜவகர்லால் நேரு பல்தேவ் சிங்கை பாதுகாப்பு உறுப்பினராக நியமித்ததோடு விட்டுவிடவில்லை. இந்திய ராணுவத்தை தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு ராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டார். அதோடு நில்லாமல், மோதிலால் நேரு குழுவின் பரிந்துரையான ராணுவத்தில் சேர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு சமூகக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும் என்பதும் செயல்வடிவம் பெற்றது. காலனிய அரசுக்குச் சேவகம் செய்து கொண்டிருந்த ராணுவத்தைப் புதிதாக எழப்போகும் தேசத்தின் மதிப்பீடுகள், கனவுகளுக்கு தோள்கொடுக்கும் ஒன்றாக மாற்றும் முன்னெடுப்பாக அது அமைந்தது. ராணுவத்தை உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் ஈடுபடுத்தினால் அது ராணுவத்தை அரசியலுக்குள் மூக்கை நுழைக்க அனுமதிப்பதோடு, ராணுவம் அரசியல்மயமாகவும் வழிகோலும் என இடைக்கால அரசு உணர்ந்தது. இதனால் உள்நாட்டுப் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளத் துணை ராணுவப்படைகளை ஏற்படுத்த இடைக்கால அரசு பரிந்துரைத்தது. நேரு முதலமைச்சர்களுக்கு எழுதிய தொடர்ச்சியான கடிதங்களின் வாயிலாக ஐரோப்பா, ஜப்பான் ஆகியவற்றில் ராணுவமயம் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்டது என்கிற புரிதலால் நேருவின் பார்வை எப்படிச் செதுக்கப்பட்டது என வெளிப்படுகிறது.

நேருவின் சிந்தனைத் தெளிவு, அவரின் கட்டளைகளில் இன்னமும் தெளிவாக வெளிப்பட்டது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்த ராப் லாக்ஹார்ட் கொடியேற்றும் விழாவில் பொதுமக்கள் பங்குகொள்ளக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்துச் செய்து ஆணை பிறப்பித்த நேரு இப்படித் தளபதிக்கு மறுமொழி அனுப்பினார், "ராணுவம் எடுக்கும் எந்தக் கொள்கை முடிவுகளையும் இந்திய அரசின் கருத்துக்கள், அது உருவாக்கும் கொள்கைகளே வழிநடத்தும். அரசின் கொள்கைகளோடு ஒத்துப்போய் அதன்படி செயல்படமுடியாத அதிகாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் இடமில்லை."

ராணுவத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நிறுவனமயப்படுத்தும் செயலில் நேரு மட்டும் தனி ஒருவராக ஈடுபடவில்லை. பாகிஸ்தானோடு இணைவதாக ஜுனாகாத் அறிவித்த பின்பு அக்டோபர் 1947-ல் அங்கே படைகளை அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவெடுத்தது. அதைப் படைகளின் தளபதிகளாக இருந்த ஆங்கிலேயர்கள் ஆட்சேபித்தார்கள். இது துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலை நேருவை விட அதிகமாகக் கோபப்படுத்தியது. நேரு, படேல் இருவரும் தங்களுடைய ஆணையைப் படைத்தளபதிகள் ஏற்க மறுத்தால், படைத்தளபதிகளோடு மோதிப்பார்க்கவும் தயார் என்று முஷ்டி முறுக்கினார்கள். இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சரவை மட்டத்திலான பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழு அரசு-ராணுவம் ஆகியவற்றுக்கு இடையே தேசப்பாதுகாப்பு குறித்த உரையாடலுக்கான அமைப்பாக மாறியது.

1955-ல் ஒருங்கிணைந்து இருந்த ராணுவப்படைகளை மூன்று தனித்தனி பிரிவுகளாக ராணுவம், வான்படை, கப்பற்படை என நேரு பிரித்தார். ஒவ்வொன்றுக்கும் சரிநிகர் தகுதி கொண்ட தளபதிகளையும் நியமித்தார். இதை யேல் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஸ்டீவ் வில்கின்சன் நேருவின் மகத்தான தருணம் என்று வர்ணிக்கிறார். நேருவே பிப்ரவரி 1963-ல் ஒப்புக்கொண்டது போல இதன் மூலம் 'இந்திய சூழலில் ராணுவத்தின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.' என்று வில்கின்சன் வாதிடுகிறார்.

ஐம்பதுகளின் இறுதியில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கிருஷ்ண மேனனின் செயல்பாடுகள் நேரு ராணுவத்தைக் கையாண்ட விதம் குறித்த நியாயமான கேள்விகளை எழுப்பின. அவற்றில் மிகவும் சர்ச்சைக்கு உரியது செப்டம்பர் 1959 -ல் ராணுவ தலைமைத் தளபதி திம்மையாவின் பதவி விலகலை நேரு கையாண்ட விதம். நேருவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு-ராணுவம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவின் மிக மோசமான தருணம் என்று வில்கின்சன் இந்த நிகழ்வை குறிப்பிடுகிறார். திம்மையா மூத்த ராணுவ அதிகாரிகளின் பதவி உயர்வு சார்ந்து கிருஷ்ண மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார் என்கிறார் வில்கின்சன்.

வரலாற்று ஆசிரியர் ஸ்ரீநாத் ராகவன் பதவி விலகலுக்கான காரணங்கள் இன்னமும் ஆழமானவை என்கிறார். இந்தியாவின் கிழக்கு பகுதி எல்லையில் இந்திய -சீனப்படைகள் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்துக்கு பின்னால் திம்மையா அயூப் கானின் திட்டத்தை இந்திய அரசியல் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பினார். அது என்ன திட்டம்? இந்தியாவும்-பாகிஸ்தானும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே அது. நேருவும், கிருஷ்ண மேனனும் இந்தப் பரிந்துரையை எதிர்த்தார்கள். திம்மையா இதுகுறித்து நேருவிடம் தனியாகப் பேசினார். இந்தக் கூட்டு செயல்பாடு சாத்தியமா எனக் கிருஷ்ண மேனனிடம் கலந்து பேசுவதாக நேரு உறுதியளித்தார். நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக்கண்ட திம்மையா தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நேருவுக்கு அனுப்பினார். எந்த உறுதிமொழியையும் தராமல் நேரு திம்மையாவை பதவி விலகலை திரும்பப் பெற வைத்தார். நேரு இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகையில், இயல்பான கருத்து முரண்பாடுகள் என்று மழுப்பினார். அதே சமயம், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரமே உச்சமானதாக இருக்கிறது, இருக்கும்.' என்று அழுத்தந்திருத்தமாக முழங்கினார்.

"திம்மையாவுடன் நேருவுக்கு ஏற்பட்ட முரண்பாட்டை ராணுவ விவகாரங்களில் அரசின் தலையீடு என்று பொதுவாக நம்பப்படுவதற்கு உண்மையில் அடிப்படை எதுவுமில்லை. ராணுவம் இறுதி முடிவை எடுக்கக் கூடாத ஒரு பிரச்சினை தொடர்பானது அது." என்கிறார் ஸ்ரீநாத் ராகவன். ராணுவத்தின் மீது நேரு கொண்டிருந்த கட்டுப்பாட்டைச் சீனப்போரின் தோல்வி பலவீனப்படுத்தியது. சீனப்போரின் தோல்விக்குப் பிறகு ராணுவம் குறித்து மக்களிடையே அதிருப்தி நிலவினாலும், ராணுவத்தின் களச்செயல்பாடு சார்ந்த முடிவுகளில் அரசு தலைமை இனிமேல் தலையிடக்கூடாது என்கிற ராணுவத்தின் நிபந்தனையை அரசு ஏற்றுக்கொண்டது. 1962 போரால் அரசியல்வாதிகளின் முன்னால் நிமிர்ந்து நிற்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ராணுவம் முக்கியமாகக் கற்றுக்கொண்டது. அப்பொழுதைய வடகிழக்கு எல்லை அமைப்பை ( North Eastern Frontier Agency) நோக்கி படைகளை நகர்த்துமாறு 1963-ல் நேரு உத்தரவிட்டும் ராணுவ தலைமை தளபதி ஜெயந்தோ நாத் சௌத்ரி, அப்பகுதி படைத்தலைவர் சாம் மானெக்ஷா ஆகியோர் கீழ்படிய மறுத்தார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான உறவை மிகக் கவனமாக நேரு நெய்திருந்தார். எனினும், அந்த நெசவில் சில கிழிசல்கள் அவரின் இறுதிக்காலத்தில் ஏற்பட ஆரம்பித்தது. காலனிய ஆட்சியில் இருந்து விடுபட்ட மற்ற நாடுகளில் இருந்து இந்தியா தன்னுடைய ஆரம்பக் காலங்களில் கலாசாரம், நியதிகள், நிர்வாக அமைப்புகளின் கட்டமைப்பு ஆகியவற்றில் வேறுபட்டு நின்றது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை தந்த பொழுது தெளிவான அரசு-ராணுவ உறவை உருவாக்கித் தந்துவிட்டு போகவில்லை.

1857 முதல் 1947 வரையிலான 90 வருடங்களில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசின் ஒட்டுமொத்த செலவினங்களில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம் ராணுவத்துக்கே சென்றது. வைஸ்ராயின் செயற்குழுவில் பாதுகாப்பு உறுப்பினராகத் தலைமைத் தளபதி செயல்பட்டார். 1943-ல் ராணுவ தலைமைத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆர்ச்சிபால்ட் வேவல், இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இதனால் விடுதலை இந்தியாவில் ராணுவத்தைக் கையாள்வதற்குப் புதிய வழிமுறையை வார்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நேரு ஆளானார்.

தன்னுடைய ஆய்வு நூலில் இறுதியாக வில்கின்சன், "நேரு 1946-ன் ஆரம்பத்திலேயே இந்தியாவில் எழப்போகும் புதிய குடியரசுக்கு எப்படி ராணுவம் பலம் வாய்ந்த ஆபத்தாக மாறக்கூடும் என்று உணர்ந்துகொண்டு தொலைநோக்கோடு செயல்பட்டார். அதனால் மக்களாட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்று துரிதமாக இயங்கி ராணுவ அமைப்பை மாற்றினார், சாதுரியமாகப் பதவி உயர்வுகளை மேற்கொண்டார்." என்கிறார்.

ஸ்ரீநாத் ராகவன் இந்தக் கருத்தோடு உடன்படுகிறார்: " ராணுவம் அளவுகடந்த அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு காலனிய அரசை, தாராளவாதம் மிகுந்த ஜனநாயக நாடாக மாற்றியதே நேருவின் உண்மையான சாதனை ஆகும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சியும், அதிகாரமும் இருந்த அரசாக இருந்த காலனிய இந்தியாவை விடுதலைக்குப் பின்னால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அடிபணிந்து இயங்கும் ராணுவத்தைக் கொண்ட நாடாக மாற்றியமைத்தார். அவரின் காலத்தில் அது நம்பமுடியாத சாதனை. அதற்காக நேருவை நாம் மெச்சியே ஆகவேண்டும்."

சுஷாந்த் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸின் இணையாசிரியர்

தமிழில்: பூ.கொ.சரவணன்

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment