ஹரீஷ் தாமோதரன்
கடந்த நவம்பர் 8 அன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து 500 மற்றும 1000 ரூபாய் கரன்சி நோட்டுக்கள் நள்ளிரவு முதல் செல்லாது என்று அறிவித்ததும் “டிமானிடைசேஷன்” மற்றும் இந்தியில் ”நோட்பந்தி” என்ற இரு வார்த்தைகள் புதிதாக நமது அகராதியில் சேர்ந்தன. அதே நேரத்தில் அவை பணம் என்றால் என்ன என்ற கேள்வியையும் நமக்குள் எழுப்பின.
சாதாரண காகிதம் எப்படி பணமாக மாறுகிறது. 15.44 லட்சம் கோடி மதிப்புள்ள 2,402.3 கோடி ரூபாய் தாள்கள், வங்கிகள் மற்றும் லாக்கர்களில் உள்ளவற்றையும் சேர்த்தால் மொத்தம் 86 சதவிகித மொத்த கரன்சிகள், ஒரே நாளில் எப்படி காகிதத் துகள்களாக மாறின. அதுவும் ஒரு நபர் எடுக்கும் முடிவால் ?
பணம் என்பதன் அடிப்படை, பொருட்களையும், சேவைகளையும் அதன் மூலமாக வாங்க முடியும் என்பதே. ஒரு விற்பனையாளராக நீங்கள் வாங்கும் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வதே பணம். இது மட்டுமல்லாமல் பிறரும் நீங்கள் ஒரு பொருள் வாங்குகையில் ஏற்றுக் கொள்வதே பணம். வாங்குதலும் விற்றலுமே வேலைகளை உருவாக்குககிறது. வருமானத்தை உருவாக்குகிறது. நாம் ஒவ்வொரு முறை வாங்கும்போதும், நமது வருமானத்தில் ஒரு பகுதி இன்னொருவரிடம் செல்கிறது. அவர் அதை செலவு செய்கிறார். அது இன்னொருவரின் வருமானமாக மாறுகிறது. பொருளாதாரத்தை சீராக நகரச் செய்யும் காரணியாக பணம் விளங்குகிறது. அதுதான் ஒட்டுமொத்த ஜிடிபியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பணம் என்பது பரிமாற்றத்துக்கான ஒரே வழி என்பதால், தொடக்க காலத்தில் இது ஒன்றுதான், உறுதியான, நம்பிக்கையான ஒரு பொருளாக இருந்திருக்கும். இது தவிர அது எளிதில் எடுத்துச் செல்லக் கூடியதாகவும், பரிமாற்றம் செய்யத் தக்கதாகவும், ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் இருக்க வேண்டும். சிறு எண்ணிக்கையில் சில்லரையாக மாற்றத்தக்கதாகவும் இருக்க வேண்டும்.
ஆகையால் தொடக்க காலத்தில் இது வெள்ளி, தாமிரம் அல்லது தங்கமாக மட்டுமே இருந்திருக்க முடியும். தொடக்க காலத்தில், கால்நடை, மதுபானம், புகையிலை, உப்பு, காய்ந்த் மீன் போன்றவை முயற்சி செய்யப்பட்டாலும், இவை பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தது. அதே நேரத்தில் விலை மதிப்புள்ள உலோகங்களை எளிதாக குறிப்பிட்ட எடை உடைய வில்லைகளாக செய்ய முடிந்தது. ஒரு உலோக வில்லையின் நேர்மைத் தன்மை மற்றும் எடை குறித்த நம்பிக்கை, அந்த வில்லையின் மீது பதிக்கப்படும் அரசு முத்திரையால் வந்தது.
உலோக முத்திரைகள், அவற்றில் உள்ள தங்கத்தையோ, வெள்ளியையோ உருக்கி எடுத்துக் கொள்வதன் மூலம் மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளதாக இருந்தது. வில்லையை உருக்கி, அதில் உள்ள தங்கத்தை குறைத்து, அதற்கு பதிலாக பித்தளை, இரும்பு போன்ற இதர உலோகங்களை உருவாக்குவதன் மூலம், பல வில்லைகளை உருவாக்க முடிந்தது. இது போன்ற வேலைகளை செய்வது அரசு நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்தான். குறிப்பாக போர் நடக்கும் சமயங்களில் அதிக அளவில் ஏற்படும் பொருளாதார தேவைகளை ஈடுகட்ட, ஏராளமாக வில்லைகளை உருவாக்கத் தொடங்கினார்கள். 3ம் நூற்றாண்டில், ரோமானிய ஆட்சியாளர் ஆரேலியன் காலத்தில் புழக்கத்தில் இருந்த வெள்ளி வில்லையில், 95 சதவிகிதம், செம்பு கலந்திருந்தது.
கிழக்கிந்திய காலத்தில்தான், 1835ம் ஆண்டில், அதன் ஆளுகைக்கு கீழ் இருந்த அத்தனை பகுதிகளுக்கும் சேர்த்து தோலா என்ற ஒரு வில்லை உருவாக்கப்பட்டது. ஒரு தோலா 0.375 அவுன்ஸ்ஸுக்கு 91.67 சதவிகித தூய்மையான வெள்ளி வில்லை உருவாக்கப்பட்டது. முதல் உலகப் போர் தொடங்கியதும், வெள்ளியின் விலை 22 பென்ஸ்சில் இருந்து 78 பென்சாக உயர்ந்தது. குறிப்பாக நவம்பர் 1914 முதல் டிசம்பர் 1919 வரையிலான காலத்தில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயம் தயாரிக்க 29.25 பென்ஸ் ஆனது. ஆனால் அதன் சந்தை மதிப்போ வெறும் 16 பென்ஸ் மட்டுமே. (ஒரு பவுன்ட் 15 ரூபாய். 240 பென்ஸ் ஒரு பவுன்ட்). அதிகாரிகள் வேறு வழியின்றி, ரூபாயின் மதிப்பை 28 பென்ஸ் அல்லது ஒரு பவுன்டுக்கு 8.57 என்ற அளவுக்கு டிசம்பர் 1919 அன்று உள்ளபடி உயர்வதற்கு அனுமதித்தனர். இப்படி செய்யத் தவறியிருந்தால், பலர், வெள்ளி நாணயங்களை உருக்கி அதில் இருக்கும் வெள்ளியை எடுத்து பயன்படுத்தக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கும்.
எந்த ஒரு அரசும், தான் வெளியிடக் கூடிய கரன்சி, தங்கம் மற்றும் வெள்ளியின் இருப்பால் தடை படுவதை, குறிப்பாக, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில், அதை விரும்பவே மாட்டார்கள். இது போன்ற சிக்கலை சந்திக்கும் ஆட்சியாளர்கள், உலோகங்களுக்கு மாற்று எது என்பதை தேடத் தொடங்கினார்கள். தங்களின் நாணயங்களை மதிப்பு குறையச் செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டார்கள். இது போன்ற ஆட்சியாளர்கள்தான், முதன் முறையாக காகிதப் பணம் குறித்தும் யோசித்தார்கள்.
காகிதப் பணம் முதன் முதலாக 11ம் நூற்றாண்டில், சீனாவில் உருவாக்கப்பட்டது என்று அறியப்படுகிறது. ஆனால், இந்த பணத்தின் புழக்கத்தை தன்னுடைய நீண்ட நெடிய மங்கோல் சாம்ராஜ்யம் முழுக்க பரப்பியது ஜெங்கிஸ் கான் (1162-1227). முல்பெர்ரி மரங்களில் இருந்து செய்யப்பட்ட அந்த ரூபாய் நோட்டுக்களால் பெரிதும் கவரப்பட்ட, சீனாவை சுற்றிப் பார்த்த வெனீசிய பயணி மார்கோ போலோ, தன்னுடைய பயணக் கட்டுரையில், “ஒரு மரத்திலிருந்து உருவாக்கிய ஒரு காகிதம் போன்ற ஒன்றை, கான் மன்னர் தன் சாம்ராஜ்யம் முழுக்க எப்படி பணமாக கருத வைத்தார்” என்று ஒரு அத்தியாயத்தையே வைத்திருந்தார்.
தொடக்க காலத்தில் காகிதப் பணம் என்பது, அதற்கு ஈடாக, அரசு கஜானாவிலிருந்து தங்கமோ வெள்ளியோ தரப்படும் என்ற உத்தரவாதத்தோடே பரவலாக்கப்பட்டது. தொடக்க காலத்தில், புழக்கத்தில் உள்ள பணத்துக்கு நிகராக கஜானாவில் தங்கம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும் கால ஓட்டத்தில், பண புழக்கம், கஜானாவிலிருந்த தங்கத்தை விட அதிகமாகியது. மக்கள் கவலைப்படவில்லை. அரசு கஜானாவில் தங்கத்தின் இருப்பு போதுமானதாக இருக்கும் வரையில், மக்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் கஜானாவுக்கு சென்று, காகிதத்துக்கு பதிலாக தங்கத்தை தர வேண்டும் என்று கேட்காத வரையில், இந்த காகிதம், பொருட்களை வாங்குவதற்கும், சேவையை பெறுவதற்கும் போதுமானதாக இருந்தது. பணம் என்றால் பொருள் மாற்றத்துக்கான ஒரு கருவி என்பதை அது நிரூபித்தது. இந்த முறை, பரஸ்பர நம்பிக்கை, மற்றும் வசதி காரணமாக புழக்கத்துக்கு வந்தது. அது தங்கமோ அல்லது காகிதமோ. நம்பிக்கை இருக்கும் வரை, இதற்கு சிக்கல் ஏதும் வரவில்லை.
பணம் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க தயாரானது. இது வெறும் காகிதம். இதற்காக தனியாக மதிப்பு ஏதுமில்லை. இதற்கு முன்னால், பணத்தை கொடுத்து, கஜானாவில் தங்கம் பெற்றுக் கொள்ளலாம் என்று இருந்ததற்கு மாறாக, கஜானாவில் கொடுத்தால், அந்த பணத்துக்கு சில்லரையோ, அல்லது அதே பணத்தையோ பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. ஜெங்கிஸ் கான் அறிமுகப்படுத்திய பணம், மக்கள் மீது திணிக்கப்பட்டது. மக்களிடமிருந்த அனைத்து தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றி, தன்னுடைய அரசின் பணத்தை வாங்க மறுத்தால் தண்டனை என்று அறிவித்திருந்தார்.
ஆனால் சமீபத்திய அரசாங்கங்கள் அறிமுகப்படுத்தும் பணம், பயத்தால் பயன்படுத்தப்படுவதில்லை. அது பணத்தை வெளியிடும் அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. பணத்தை அச்சடிக்கும் அரசாங்கம், தேவைக்கு அதிகமாக அச்சிடாது, அதிகமாக அச்சிட்டு பண வீக்கத்தை உருவாக்காது என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படை. பணத்துக்கு அடிப்படையே நம்பிக்கைதான். அது அரசு மற்றும் மத்திய வங்கிகள் வெளியிடும் நோட்டுக்கள் மீதானது மட்டுமல்ல. அதை வெளியிடுபவர் நம்பிக்கைக்கு பாத்திரமானவரா என்பது மட்டுமே முக்கியம்.
வரலாற்றில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான உதாரணம் உண்டி. பல காலமாக புழக்கத்தில் உள்ள இந்த உண்டி முறை என்பது, ஒரு பொருளை வாங்குபவர், விற்றவருக்கு, அடுத்த சில நாட்களிலோ, மாதங்களிலோ ஒரு குறிப்பிட்ட தொகையை தருவதாக செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, பொருளை விற்றவர், வாங்கியவர் சொல்லும் இடத்தில், அவரது முகவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதனால் உண்டி, செக் போன்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தியது. பொருளை வாங்கியவர், மிகவும் மதிப்பு மிக்கவராக இருந்தால், அந்த உண்டியை பெற்றவர், அந்த உண்டியை வைத்து கடன் பெறுவதற்கும் வழி உண்டு. கடன் கொடுத்தவர், அந்த உண்டியின் மதிப்புக்கு சற்று குறைவாக கடன் வழங்கி, உண்டியின் மதிப்புத் தொகையை காசாக்கிக் கொள்ளலாம். இந்த முறையினால் உண்டி, பணப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவியாக மாறியது. பல கை மாறி, இறுதியாக அதை காசாக்குபவர் கைக்கு பணம் சென்று சேர்வதால், இது ஒரு வகையில் நடமாடும் பணமாக மாறியது.
வரலாற்று சான்றுகளை பார்க்கையில், தங்க நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை விடவும், இந்தியாவின் பொருளாதாரத்தை நகர்த்தும் சக்தியாக உண்டி அமைந்துள்ளதை காண முடிகிறது. இந்தியா முழுக்க இந்த உண்டி முறை பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவதற்கு பயன்பட்டுள்ளது. முல்தானி வங்கி நடத்தியவர்கள், சிந்த் நகரத்தில் உள்ள தங்கள் வங்கியின் தலை நகரிலிருந்து, தமிழ்நாட்டின் நடுவே உள்ள மதுரைக்கு பணம் பரிமாற்றம் செய்யவும், மார்வாடிகள், ராஜஸ்தானிலிருந்து பிரம்மபுத்ரா பள்ளத்தாக்குக்கு பணத்தை அனுப்பவும் உண்டி முறையே உதவி செய்தது.
உண்டிகளை வழங்குபவர்கள் தனி நபர்கள். ரிசர்வ் வங்கி அல்ல. வெறும் வாங்குவர் மற்றும் விற்பவர் இடையேயான ஒப்பந்தமாக அல்லாமல், மூன்றாம் நபர் கூட பணத்துக்காக இதை பெற்றுக் கொள்வது வழக்கமாகியது. இத்தகைய ஒப்பந்தங்கள் பணமேயன்றி வேறு அல்ல.
இறுதியாக பணம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மீண்டும் வருவோம். பணம் என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்றப்படும் கடன். ஒரு கடன்தாரர், தன் வார்த்தையை மீறாத ஒரு நேர்மையான நபராக அறியப்பட்டார் என்றால், அதன் காரணமாக அவரது உண்டி அல்லது ஒப்பந்தம், இறுதி வரை பணமாக்கப்படாமலேயே பல கைகள் மாறலாம். இது போன்ற தனி நபர் உண்டி மற்றும் அரசு வெளியிடும் கரன்சிகளுக்குமான வேறுபாடு என்னவென்றால் உண்டிகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றி பணமாக்க முடியும். ஆனால் அரசு வெளியிடும் கரன்சிகளை மாற்ற முடியாது. உதாரணத்துக்கு, ரூபாய் நோட்டில் (இதை கொண்டு வருபவருக்கு நான் 500 ரூபாய் அளிக்கிறேன்) உள்ளபடி, நீங்கள் ரிசர்வ் வங்கிக்கு சென்று, 500 ரூபாயை கொடுத்து, எனக்கு நீங்கள் வழங்க வேண்டியதை வழங்குங்கள் என்று கேளுங்கள். பதிலுக்கு இன்னொரு 500 ரூபாயை தருவார்கள்.
இந்த கட்டுரையை பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து தொடங்கினோம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாமல் ஆக்கப்பட்ட 2,402.03 கோடி கரன்சி நோட்டுக்கள் என்னவாயிற்று. இந்த நடவடிக்கையால், மாற்றத் தக்கதான 15.44 லட்சம் கோடி கடன் திடீரென்று இல்லாமல் போயிற்று. பொருளாதாரத்தை இலகுவாக செயல்படுத்தும் கரன்சி இல்லாமல் போனதால், பொருளாதாரம் மந்த நிலைய எட்டியது. அது முழுவதுமாக பொருளாதாரத்தை நிறுத்தவில்லை. ஏனென்றால் மக்கள் கரன்சியை மாற்றினார்கள். என்னிடம் உங்களுக்கு கொடுக்க பணம் இல்லை. ஆனால் கடனில் எனக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இது வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலான பரிவர்த்தனை மட்டுமே. முன்னே பின்னே தெரியாத ஒரு நபருக்கு இத்தகைய கடன் வசதியை யாரும் அளிக்க மாட்டார்கள். பண மதிப்பிழப்புக்கு முன்பு, ஒருவர் பணத்தை கொடுத்து பொருளை வாங்கினால் அவரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்தது என்னவென்றால், உங்களுக்கு முன்பே தெரிந்திருந்த ஒருவரோடு மட்டுமே நீங்கள் வியாபாரம் செய்ய முடியும் என்று கட்டுப்படுத்தியதே.
இதற்கு ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அயர்லாந்தில், ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் இது நடந்தது. 1 மே 1970 அன்று, நாட்டில் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டன. தொழிலாளர்களோடு ஊதியம் தொடர்பான ஒரு சிக்கலில் இவ்வாறு மூடப்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 17 வரை இது தொடர்ந்தது. இந்த காலகட்டத்தில் எந்த வங்கிப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. மக்கள் எப்படி சமாளித்தார்கள் ? மக்கள், காசோலைகளை பயன்படுத்தத் தொடங்கினார்கள். காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற முடியாது என்பதால், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே காசோலைகள் பெறப்பட்டன. அந்த காசோலைகள் பணமில்லாமல் திரும்ப வராது என்ற நம்பிக்கை மட்டுமே.
ஆனால் அயர்லாந்து பொருளாதாரம் சரிவை சந்திக்கவில்லை. அதே நேரத்தில் அதன் பொருளாதாரம் சந்தித்த சிக்கல் எளிதானதல்ல. ஒரு தனி நபரின் பணமதிப்பு எவ்வளவு என்பதை நம்பி மட்டுமே பொருளாதாரம் இயங்குவது எளிதல்ல. அந்த நபர் மீதான நம்பிக்கை இல்லையென்றால், அந்த காசோலை வெறும் காகிதம் மட்டுமே. வங்கிகள் மூடப்பட்டு ஒரு மாதம் ஆன பின்பு, கோழி வியாபாரிகள், தனி நபர் காசோலைகளை வாங்கப் போவதில்லை என்று அறிவித்தனர். ஏழு பன்றிகளை கடத்திச் சென்றதாக தண்டிக்கப்பட்ட ஒரு விவசாயி, அவருக்கு விதிக்கப்பட்ட 309 பவுன்டு அபராதத்தை கட்ட ரொக்கம் இல்லாமல் மாட்டிக் கொண்டார்.
இது போல பல கதைகளை கேட்டிருக்கிறோம் 8 நவம்பர் 2016க்கு பின்னால், இந்தியாவிலும்.
தமிழில் ஏ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.