கண்ணன்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடைந்திருக்கும் நாளில், மாடுகளை இறைச்சிக்காக விற்பதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது மாட்டிறைச்சி உண்பதையும் மாட்டிறைச்சித் தொழிலையும் கடுமையாக பாதிக்கும் நடவடிக்கையாகும்.
இந்து மதத்தில் புனிதமான விலங்காகக் கருதப்படும் பசு மாட்டைக் காப்போம் என்பது பாஜகவின் பிரதான அரசியல் கோஷங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. 2014ல் மோடி தலைமையிலான பாஜக அரசு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்ததை அடுத்து, பசுவதையைத் தடுக்கிறோம் என்று பல்வேறு இந்துத்துவக் குழுக்கள் வன்முறைச் சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றன. பசுமாட்டு இறைச்சியை வைத்திருந்ததாகவும், விற்க முயனறதாகவும் சொல்லி வட மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளும் ஆவர்.
பசுவதைத் தடையை நோக்கிய நடவடிக்கையா?
பாஜக இந்த வன்முறையை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றாலும், பசுவதையை பாஜகவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் எதிர்த்து வருகின்றனர். பசு இறைச்சியைத் தடை செய்வதுதான் பாஜகவின் நோக்கம் என்றும் அதை நோக்கியே அதன் நடவடிக்கைகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பசு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளம் அகியவற்றிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் பசு இறைச்சிக்குத் தடை இல்லை. குறிப்பாக கேரளத்தில் பசு இறைச்சி என்பது, தலித், சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் சாதி இந்துக்களாலும் உண்ணப்படும் பிரதான உணவாகும். வட கிழக்கு மாநிலங்களிலும் அப்படியே. எனவே கேரளத்திலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பசுவதைத் தடுப்பை பாஜக முன்னிறுத்துவதில்லை. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பசு இறைச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை என்று அதிகாரப்பூர்வமாகவே அம்மாநில பாஜக அறிவித்துள்ளது.
ஆனால் இன்றைய உத்தரவு பசு இறைச்சி உண்பவர்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றே பார்க்கப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்குத்தான் தடையே தவிர பசு இறைச்சி உண்பதையே தடை செய்யவில்லை என்று பாஜக ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்த உத்தரவு பசு இறைச்சி மீதான தடையாகத்தான் இருக்கும். ஏனென்றால் விலங்குகளுக்கான சந்தைகளில் இறைச்ச்சிகாக மாடுகளை விற்கக் கூடாது என்றால் பெரும்பாலான மக்களால் குறிப்பாக ஏழை, நடுத்தர வர்க்க மக்களால் மாட்டிறைச்சியை வாங்கவே முடியாது.
மாட்டிறைச்சி சாப்பிட விரும்புவோர் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சாப்பிட வேண்டும் அல்லது தானே சொந்தமாக மாடு வளர்த்து அது முதுமை அடைந்துவிட்ட பின் கொன்று சாப்பிட வேண்டும். இது பல்வேறு அடிப்படைகளில் பிரச்சனைக்குரிய உத்தரவு.
பொதுமக்களின் உணவு உரிமை
முதலில் மாட்டிறைச்சி என்பது தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் பிரதான உணவாக இருந்து வருகிறது. மற்றவர்களும் சாப்பிடுகிறார்கள். எனவே இந்த உத்தரவு பொதுமக்களின் உணவு உரிமையில் கைவைப்பதாகும்.
இரண்டாவதாக ஒட்டுமொத்த தேசத்துக்கும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை மீறுவதாகும். கேரள கம்யூனிஸ்ட் அரசு இதற்கு மிகச் சரியான எதிரிவினை ஆற்றியுள்ளது. இந்த விதிகளைப் பின்பற்ற முடியாது என்றும், இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. கேரளத்தில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமிழகத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த உத்தரவைப் பின்வாங்க வலியுறுத்தியுள்ளார். இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று சொல்லியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
மூன்றாவதாக மாட்டிறைச்சித் தயாரிப்பு மற்றும் விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழப்பர் என்று அஞ்சப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பு ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். மேலும் மாடுகளை வாங்கவும் விற்கவும் பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட இருப்பதால் முதுமை அடைந்த பயனற்ற மாடுகளை விற்க ஏழை விவசாயிகள் எண்ணற்ற நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
நான்காவதாக, மாடுகளைப் பாதுகாப்பது என்ற நோக்கத்தில்கூட உள்ளுர் சந்தைகளில் மட்டும் இறைச்சிக்காக மாடுகளை விற்பதைத் தடை செய்துவிட்டு மாட்டிறைச்சி ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதிக்காமல் இருப்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை மட்டும் பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் தாண்டி நாட்டில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருகிறது. கிராமப்புறங்களில் விவசாயிகள் வாழ்வாதாரம் பல்வேறு காரணங்களால் சீரழிந்துவருகிறது. இவற்றை சரிசெய்வதில் பெரிதாக அக்கறை காட்டாமல் பசுமாட்டைப் பாதுகாப்பதிலேயே மத்திய பாஜக அரசு முனைப்பாக இருக்கிறது என்ற விமர்சனத்துக்கு பெரிதும் வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது இந்த உத்தரவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.