கழகங்களின் ஆட்சியில் பெயர் அரசியல்

தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் கழகங்கள், மாவட்டங்கள், போக்குவரத்து கழகங்களுக்கு பெயர் வைப்பதில் எப்படியெல்லாம் விளையாடியுள்ளார்கள்.

By: Updated: October 31, 2017, 03:10:35 PM

இரா.குமார்

மாவட்டம், கட்டடம், போக்குவரத்து கழகம் போன்றவற்றுக்கு தலைவர்களின் பெயரைச் சூட்டுவதும், ஆட்சி மாறியதும் அதை மாற்றுவதும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடக்கும் ஒரு பிரச்னை. பெயர் சூட்டுவது ஒரு பெரிய அரசியல் பிரச்னையாகி தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில்.

கருணாநிதி, கடந்த 1971-76ல் முதல்வராக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நெல்லுக்கு அவருடைய பெயரையே சுருக்கி, “கருணா” என்று பெயரிட்டனர். அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பாசிப் பயறு ரகம் ஒன்றுக்கு, கருணாநிதியின் அம்மா பெயரை, “அஞ்சுகம் பாசிப் பயறு” என்று சூட்டினர்.

சில அரசுக் கலைக் கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டது. சென்னை நந்தனத்தில் வீட்டுவசதி வாரியம் கட்டிய பத்து மாடிக் கட்டடத்துக்கு கருணாநிதி மாளிகை என்று பெயர் சூட்டினர். நெருக்கடிநிலை காலத்தில் 1976ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி, திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அடுத்த நாளே, இரவோடு இரவாக, கருணாநிதி மாளிகை என்ற பெயர் அகற்றப்பட்டது.

பின்னர் எம்ஜிஆர் முதல்வர் ஆனதும், அந்தக் கட்டடத்துக்குப் பெரியார் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்தான் மாவட்டங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது. முதன் முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர். நெல்லை மாவட்டத்தை பிரித்து, தூத்துக்குடியை தலைநகராகக்கொண்டு வ.உ.சிதம்பரனார் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டத்துக்கு, கட்டபொம்மன் மாவட்டம் என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர். ஆனாலும் நெல்லை மீது பற்றுகொண்ட அந்த ஊர் மக்கள், நெல்லை என்ற பெயரை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, “நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார் எம்ஜிஆர்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குதான் அண்ணா பெயர் சூட்ட வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் ஏற்கவில்லை.

சங்கர மடம் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாத்திகரான அண்ணா பெயரை வைக்க வேண்டாம் என்று சங்கராச்சாரியார் கேட்டுக்கொண்டதாலேயே, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அண்ணா பெயரை எம்ஜிஆர் சூட்டவில்லை என்ற பேச்சும் அப்போது இருந்தது. 1989ல் கருணாநிதி முதல்வர் ஆனதும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று இருந்ததை நீக்கினார். செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் என்று அண்ணா பெயரை சூட்டினார்.

அரசுக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ சொந்தமான எந்த ஒரு கட்டடத்துக்கோ, நிறுவனத்துக்கோ உயிரோடு இருப்பவர்களின் பெயரை சூட்டக் கூடது என்று சட்டம் கொண்டுவந்தார் எம்ஜிஆர். இதையடுத்து, கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லலூரிகளில் கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது., அந்தப் பல்கலைக்கழகத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட முடிவு செய்தனர். இதற்காக, உயிரோடு இருப்பவர்கள் பெயரை சூட்டக் கூடாது என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தனர்.

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தொடக்கவிழா 1987ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் வந்து, பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைக்க இருந்தார். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, விடிந்தால், 25ஆம் தேதி காலையில் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் திறப்புவிழா. 24ம் தேதி இரவு, எம்ஜிஆர் மரணமடைந்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு, அவர் பெயராலேயே மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 1989ல் கருணாநிதி முதல்வர் ஆனார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்பதை தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பலகலைக்கழகம் என்று மாற்றினார். எனினும் எதிலும் எம்ஜிஆர் என்று வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு காந்தி பெயரை சூட்டினார் கருணாநிதி. பொதுவாக மகாத்மா கந்தி சாலை என்றுதான் பெயர் சூட்டுவார்கள். அப்படி பெயர் சூட்டினால், ஆங்கிலத்தில், Mhaathmaa Gaandhi Road என்பதன் சுருக்கம் MGR என்று வரும். இதை விரும்பாத கருணாநிதி, உத்தமர் காந்தி சாலை என்று பெயர் சூட்டினார்.

1991ல் ஜெயலலிதா முதல்வர் ஆனார். சென்னையில் உள்ள முகப்பேர் பகுதிக்கு ஜே.ஜே. நகர் என்று ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது. (பேருந்துகளில் அதிமுக ஆட்சியின்போது ஜே.ஜே. நகர் என்றும், திமுக ஆட்சியின்போது முகப்பேர் என்றும் போர்டு வைப்பது வழக்கமாயிற்று. இதே நிலைமைக்கு கலைஞர் கருணாநி நகரும் ஆளானது. திமுக ஆட்சியில் கலைஞர் நகர் என்றும் அதிமுக ஆட்சியில் கே.கே. நகர் என்றும் நகர பேருந்துகளில் பெயர்ப்பலகை வைக்கின்றனர்.)

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது. இதில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தனி போக்குவரத்துக்கழகத்தின் கீழ் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜெ.ஜெயலலிதா போக்குவரத்துக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டது. இது பலவித விமர்சனங்களுக்கு ஆளானது. 1996ல் திமுக ஆட்சி அமைந்து, கருணாநிதி முதல்வர் ஆனதும், ஜே.ஜே. போக்குவரத்துக் கழகத்தின் பெயர் மாற்றப்பட்டு, ராஜிவ் காந்தி போக்குவரத்துக் கழகம் ஆனது.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது குழந்தைகளுக்கு சத்துணவுத்திட்டத்தை 1982ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அப்போது இந்த திட்டத்துக்கு 150 கோடி ரூபாய் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. இது சாத்தியமில்லாத திட்டம் என்றும், குழந்தைகளை எம்ஜிஆர் பிச்சை எடுக்க வைத்துவிட்டார் என்றும் கருணாநிதி விமர்சனம் செய்தார். ஆனால், இந்த திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பாராட்டு பெற்றது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வர் ஆனார். சத்துணவுடன் முட்டை போட உத்தரவிட்டார். ஜெயலலிதா முதல்வர் ஆனதும், எம்ஜிஆர் குழந்தைகள் சத்துணவுத் திட்டம் என்று இதற்குப் பெயரிட்டார். மீண்டும், கருணாநிதி முதல்வர் ஆனதும், முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவுத் திட்டம் என்று பெயர் மாற்றினார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தரமணியில் தொடங்கப்பட்ட திரைப்பட நகரத்துக்கு தன்னுடைய பெயரையே சூட்ட்டினார். ஜேஜே திரைப்பட நகரம் என்று அழைக்கப்பட்டது. 1996ல் கருணாநிதி முதல்வர் ஆனதும், ஜேஜே திரைப்பட நகரின் பெயரை எம்ஜிஆர் திரைப்பட நகரம் என்று மாற்றினார்.

திமுக ஆட்சியின்போது 1972ல் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டன. பின்னர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் பலவாகப் பிரிக்கப்பட்டு, பல்லவன், சோழன், பாண்டியன், சேரன் என பல பெயர்களில் போக்குவரத்துக்கழகங்கள் வந்தன. அடுத்தடுத்து வந்த, அதிமுக, திமுக ஆட்சிகளில் மாவட்டங்களும் போக்குவரத்துக் கழகங்களும் பிரிக்கப்பட்டு பல சாதி தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன். சாதிக்கு ஒரு மாவட்டம். சாதிக்கு ஒரு போக்குவரத்துக் கழகம் என்று ஆனது. இதன் மூலம், சுதந்திரத்துக்கு போராடிய வ.உ.சி., காமராஜர் போன்ற தலைவர்களுக்கும் சாதி சாயம் பூசப்பட்டது.

1996ல் திமுக ஆட்சி அமைத்தது. கருணாநிதி முதல்வர் ஆனார். ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு சாதித் தலைவர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இன்னொரு சாதியினர், அந்தப் பேருந்தை ஊருக்குள் விடமாட்டோம் என்று தடுத்தனர். பேருந்துகளை அடித்து நொறுக்கினர். இதனால் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்தது. இதையடுத்து, போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாவட்டங்களுக்கும் சூட்டப்பட்டுள்ள தலைவர்கள் பெயரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், திமுக கூட்டணியில் இருந்த அப்போதைய தமா.கா தலைவர் மூப்பனார். இதை ஏற்று மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் சூட்டப்பட்ட தலைவர்களின் பெயர்களை நீக்கி உத்தரவிட்டார் கருணாநிதி. ஆனாலும், பெரியார், அண்ணா பெயரை நீக்க வழி செய்யும் இந்த உத்தரவில் கண்ணீரோடுதான் கையெழுத்திடுகிறேன்” என்று கருணாநிதி அப்போது சொன்னார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாவட்டங்களுக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கும் மீண்டும் தலைவர்கள் பெயர் சூட்டப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்புக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை. 2001ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனார். நல்ல வேளையாக தலைவர்கள் பெயரை மீண்டும் வைக்கும் வேலையை அவர் செய்யவில்லை.

மாவட்டங்களின் பெயர்களை அடிக்கடி மாற்றியதால், அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகையை மாற்ற வேண்டியதாயிற்று. அரசு அலுவலக் கோப்புகளில் மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று. அது மட்டுமில்லாமல், எதிர் காலத்தில் தமிழக வரலாற்றை எழுதுவோருக்குக் குழம்ப்பம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கழகங்களின் ஆட்சியில் பெயர்கள் மாற்றப்பட்டன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:The politics of name in the rule of the kazhakam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X