மனோஜ் மிட்டா
அமெரிக்க தேர்தல் மீதான உற்சாகம்,இனப்பிரச்னை சார்ந்த வரலாறு போன்றவை காரணமாக கமலா ஹாரிஸ் இப்போது உலகம் முழுவதும் பரிச்சயமாகி விட்டார். இந்தியாவில் கமலாபுரம் என்ற பின்னொட்டுடன் கூடிய அதே பெயர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு செய்திகளில் வந்தது. அது சாதியுடன் தொடர்புடைய காரணங்களுக்கானதாக இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்க: The story of Kamala Harris, caste and an Indian law few know about
சென்னை மாகாணத்தில் 1938-ம் ஆண்டு கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். அதே மாகாணத்தில் கமலாபுரம் என்ற கிராமமும் இருந்தது. ஷியாமளா கோபாலன் பிறப்பதற்க்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கமலாபுரத்தைச் சேர்ந்த ஆர். வீரய்யன் அங்கு தடை செய்யப்பட்ட சாலையில் நுழைய முனைந்து அவமானத்தை அனுபவித்தார். ‘தீண்டத்தகாதவர்கள்’ பாரம்பரியமாக அந்தச் சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாதிருந்தார்கள். ஏனெனில், அது ஒரு அக்ரஹாரத்தில் அமைந்திருந்தது. அக்ரஹாரம் என்பது பிரத்யேகமாக பிராமணக் குடியேற்றத்திற்கான பொதுவான சொல். பிரிட்டீஷ் இந்திய மாகாணங்களின் மேல்சபையில் வீரய்யன் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். அவர் பொது பாதையில் நடப்பதற்கான தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டதை எதிர்த்து, சென்னை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கு ஒரு தந்தி அனுப்பினார்.
ஏப்ரல் 16, 1924 அன்று, பாம்பாயை தலைமையிடமாக கொண்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா, வீரய்யனின் நீண்ட தந்தியினை, 'ஒரு மெட்ராஸ் எம்.எல்.சி-யின் புகார்: சகிக்க முடியாத பிராமண கொடுங்கோன்மை' என்ற தலைப்பின் கீழ் முழுமையாக வெளியிட்டது. தந்தியில் அந்த சம்பவத்தைப் வீரய்யன் முழுமையாக விவரித்திருந்தார். அவர் கமலாபுரத்தில் உள்ள “அக்ரஹாரம் பொதுப் பாதை” வழியாக அங்கு அமைந்துள்ள தபால் நிலையத்தில் கடிதங்களை அனுப்புவதற்காக சென்று அருகிலுள்ள ஒரு பள்ளியை பார்க்க நினைத்தார். ஆனால், பஞ்சம மாசுபாட்டின் காரணமாக (தீண்டாமை), மோனிகர் ரங்கையர் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு பிராமண கிராம முன்சிஃப், வீரய்யன் அந்தத் தெருவுக்குள் நுழைவதைத் தடுத்தார். போஸ்ட் ஆபீஸ் அல்லது பள்ளியை அடைவதற்கு, அக்ரஹாரத்தைக் கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வீரய்யன் சொன்னது பற்றி அந்த பிராமண அதிகாரிக்கு சிறிதும் கவலையில்லை.
சென்னை சட்டமேலவையில் பொதுநுழைவை அனுமதிக்க கோரும் தீர்மானம் ஆகஸ்ட் 22, 1924 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் நிஜத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தத் தவறியதால், தீண்டாமையை குற்றமாக்கும் சட்டத்தை கொண்டு வர வீரய்யனை தூண்டியது. தீண்டாமை பற்றிய தனி நபர் மசோதாக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அறிந்த வீரய்யன் ஏற்கனவே உள்ள குடிமைச் சட்டத்தில் திருத்தங்கள் என்ற போர்வையில் தீண்டாமையை குற்றமாக்கும் விதிகளை கொண்டுவந்தார். அப்படியிருந்தும், சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் சட்டமன்றத்தில் இருந்து ஆதரவைப் பெற, நிறைய சமரசங்கள் தேவைப்பட்டது. 1925-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் முறையாக இந்த மசோதா விவாதிக்கப்பட்டபோது, வீரய்யன் தனது உரையை சமரசம் செய்யும் விதமாக தொடங்கினார். “நான் சாதி பிரச்சனையை கொண்டு வரப் போவதில்லை அல்லது சாதி தொடர்பாக தீண்டாமைப் பிரச்சனையை எழுப்பப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” அவரது முன்முயற்சியின் முக்கிய அம்சம் என்ன என்பதை அவர் மறுக்க வேண்டும் என்பது அவர் கொண்டிருந்த அழுத்தத்தின் அளவுகோலாகும்.
இந்த சட்டத்தை ஆய்வு செய்த தெரிவுக்குழு, அனைத்து வகுப்பினருக்கும் பொது நீர் ஆதாரங்களை அணுகுவதற்கு அதிகாரமளிக்கும் மசோதாவின் பகுதியை நீக்கியது. தலித்துகளுக்கு பொது சாலைகள் மற்றும் சந்தைகளில் நுழைவதை தடுக்க கூடாது என்ற ஒப்பீட்டளவில் சிறிய பிரச்சினைகள் மட்டும் மசோதாவில் இருக்கும்படி குழு செய்தது. ஆகஸ்ட் 31, 1926-ல் சென்னை சட்டமன்றம் தீண்டாமைக்கு எதிராக முதன்முதலில் மசோதாவை நிறைவேற்றியபோது, அதில் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு வீரய்யன் முக்கியப் பங்காற்றினார். உண்மையில், மெட்ராஸ் லோக்கல் போர்டுகள் திருத்தச் சட்டம் 1926 ஒரு நாகரீக முன்னேற்றத்தைக் குறித்தது. சாதி இந்துக்கள் தங்கள் தூய்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு புனிதமான கடமையாக தலைமுறை தலைமுறையாகக் கருதப்பட்ட விலக்கு நடைமுறைகளை இச்சட்டம் தடை செய்தது. தீண்டாமையைக் குற்றமாக்குவதுடன் அபராதங்களையும் விதித்தது.மெட்ராஸ் மாகாணத்தின் கிராமப்புறங்களில் இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை சமகாலத்தில் பத்திரிகைகள் கவனித்தன. உயர் சாதியினரின் சமூகக் கொடுங்கோன்மையை விரட்டியடித்ததற்காக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு,இந்த விவகாரத்தில் கவனத்தை ஈர்த்ததற்காக வீரய்யனை வாழ்த்தியதுடன் இந்த சட்டம் அவரது ஆதி திராவிட சகோதரர்களின் பல சமூக குறைபாடுகளை நீக்க வழிசெய்யும் என்று நம்பிக்கையையும் அளித்தது.
மெட்ராஸ் மாகாணத்தில் தீண்டப்படாதவர்களின் சமூக குறைபாடுகளை நீக்குவதற்கான 1926 சட்டம் காரணமாக இருந்தாலும், இவற்றில் வீரய்யனின் முன்னோடி பங்களிப்பு வரலாற்றில் கவனிக்கப்படாமல் போனது. இந்த மசோதா மத்திய மாகாணத்திலுள்ள மற்றொரு தலித் சட்டமன்ற உறுப்பினரான (இன்றைய மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது) ஜி.ஏ. கவாயை இதேபோன்ற சட்டத்தை இயற்றுவதற்கு 1933-ல் தூண்டியது. ஆனால். இதன் வெற்றியாளர்களால் தீண்டாமையின் அடித்தளத்தை உடைத்த பெருமை பிராமண சமூகத்தைச் சேர்ந்த தலைவரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அல்லது மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற கூட்டாளியான ராஜாஜிக்கு வழங்கப்பட்டது. வீரய்யன் முயற்சியால் சட்டம் இயற்றப்பட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1938-ல் மெட்ராஸ் மாகாணத்தின் பிரதமராக ராஜாஜி இருந்தபோது அவர் கொண்டு வந்த சட்டம் முன்னோடி சட்டம் என்று பாரட்டப்பட்டு வீரய்யன் மற்றும் கவாய் ஆகியோரின் முன்னுதாரணங்கள் அழிக்கப்பட்டன.
வீரய்யன் மற்றும் கவாய் இருவரும் மறக்கடிக்கப்பட்டமை ராஜாஜியின் சட்டத்தில் ஒரு பெரிய குறைபாட்டை மறைக்க வரலாற்றாசிரியர்களுக்கு உதவியது. வீரய்யன் மற்றும் கவாய் சட்டங்கள் தீண்டாமையை குற்றமாக்கினாலும், ராஜாஜி சட்டத்தில் அது வெறும் பிரகடனமாக இருந்தது, அதில் இருந்து எந்த தண்டனைகளும் இல்லை. ராஜாஜியின் சட்டம், தீண்டாமையை நிலைநிறுத்தும் எந்த வழக்கத்தையும் அல்லது பயன்பாட்டையும் எந்த நீதிமன்றமும் அங்கீகரிக்காது என்று அறிவித்தது. எனினும், அது எந்த குற்றத்தையும் வரையறுக்கவில்லை என்பதால், எந்த தண்டனையும் இல்லை. எனவே, அதிகம் அறியப்படாத தலித்துகள் உருவாக்கிய முன்னுதாரணங்களைக் காட்டாமல், வரலாற்றாசிரியர்களால் மதிப்பிடப்பட்ட 1938 ஆம் ஆண்டு சட்டம், கருத்தியல் ரீதியாக பிற்போக்குத்தனமானது. அதற்குள் மெட்ராஸ் பிரசிடென்சியில் இருசபை முறைக்கு ஒரே மாகாண சட்டமன்றம் வழிவகுத்தது. ஆகஸ்ட் 17, 1938-ல் சட்டப் பேரவை மசோதாவை நிறைவேற்றிய பிறகு, 1938 டிசம்பர் 12 அன்று, ஒரு வியத்தகு விவாதத்திற்குப் பிறகு, ஜே.ஏ. சல்தான்ஹா என்கிற உறுப்பினர் வீரய்யனை நினைவுக்கூர்ந்தார். வீரய்யனால் கொண்டு வரப்பட்ட மசோதாவில், வழங்கப்பட்ட உரிமைகளை மீறுவதற்கு அபராதம் விதிக்கும் ஒரு ஷரத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு நேர்மாறாக, ராஜாஜி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவில், “இந்தச் சலுகைகள் எதையும் அனுபவிப்பதைத் தடுக்கும் ஒரு மனிதனைத் தண்டிக்க எந்த ஏற்பாடும் இல்லை” என்று அவர் சுட்டிக்காடினார். தற்செயலாக, இந்த விவாதத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, ஷியாமளா கோபாலன் மெட்ராஸ் நகரத்தில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தின் அருகே பிறந்தார்.
கட்டுரையை எழுதியவர் மனோஜ் மிட்டா, ‘சாதிப் பெருமை: இந்து இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்’ என்ற நூலின் ஆசிரியர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.