ஆர்.சந்திரன்
பாஜக தலைமையிலான ஆளும் மத்திய கூட்டணியில் அடுத்த விரிசல் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவுக்குப் பின் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் வெளியிட்டுள்ள தகவல்கள், இதை உறுதிசெய்வதாக உள்ளன. சமூக வலைதளமான டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்துப்படி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 19 கோரிக்கைகளை தொடர்ந்துவலியுறுத்தி வந்தும், மத்திய அரசு இதுவரை மாநிலத்துக்கு அளித்த உறுதிப்படி நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக நிதியமைச்சர் அண்மையில் கூறிய தகவல்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் சந்திரபாபு நாயுடு தானே "பிரதமரைத் தொடர்பு கொண்டு பேச முயன்றதாகவும், ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை" எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அமைச்சரவையில் தெலுகு தேசம் சார்பில் இடம் வகிக்கும் 2 அமைச்சர்கள் - அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஸ்ருஜனா சவுத்ரி ஆகியோர் இன்று மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஆந்திர அமைச்சரவையில் பாஜக சார்பில் உறுப்பினராக சிலரும் இன்று அம்மாநில தலைநகரான அமராவதி சென்று தங்களது ராஜினாமாவை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் இந்த 2 கட்சிகளுக்கு இடையே இருந்த சுமுக சூழலை மாற்றியுள்ளது.
3 வட கிழக்கு மாநில தேர்தலில் பாஜக அரசியல் ரீதியாக முன்னேற்றம் கண்ட நிலையில், நாட்டின் மறு முனையில் ஏற்பட்டு வரும் சம்பவங்கள் அதற்கு அரசியல் ரீதியான பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டாளிகளாக பாஜகவுடன் களமிறங்கி, இப்போது அந்த கூட்டணியில் இருந்து விலகும் 3வது பெரிய மாநில கட்சி தெலுகு தேசம் என்பது கவனிக்கத்தக்கது. ஏற்கனவே, பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனாவும் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளன. இதுதவிர உத்திர பிரதேசத்தில் அப்னா தள், தமிழகத்தில் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவை இந்த கூட்டணியில் இருந்து விலகி நீண்ட நாட்களாகின்றன. இவை அனைத்துக்குமே, பாஜகவின் பெரியண்ணன் மனோபாவம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஆட்சி அமைவதற்கு முன் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தேவைப்பட்ட நாங்கள், இலக்கை எட்டியபின் தேவைப்படவில்லை என்பதுதான் எங்களிடம் பாராமுகம் காட்டக் காரணம் என்பது இந்த கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டு.
தற்போதைய நிலையில் கடந்த தேர்தலின்போது கூட்டணியில் இல்லாமல், பின்னர் தனது மாநில அரசியல் சூழல் மற்றும் உட்கட்சி நெருக்கடியால் பாஜக கூட்டணிக்கு வந்த பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தவிர, வேறு எந்த முக்கிய கட்சிகளும் பாரதிய ஜனதா கூட்டணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், வரும் தேர்தலுக்கு முன்னதாகவே, என்டிஏ என குறிப்பிடப்படும் குடையின் கீழிருந்து, மேலும் சில கூட்டணிக் கட்சிகளையும் இழக்க நேரலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு ஏற்படும் எந்த இழப்பும் - எண்ணிக்கை அடிப்படையிலான, வாதத்துக்காகக் குறிப்பிடும் விஷயமாக இருக்குமேயன்றி, பாஜகவின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் அம்சமாக இருக்கப் போவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.