scorecardresearch

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 11 : பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சரும் பாஜக பிரமுகமருமான யஸ்வந்த் சின்கா பேச்சில் இருந்து மோடி அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

indian economy, Fee Income hike, banks profit 2020

சுப. உதயகுமாரன்

நாட்டின் ஆபத்தான பொருளாதார நிலை குறித்து முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கருத்துத் தெரிவிக்கிறார். உண்மையான சனநாயகவாதிகளாக இருந்திருந்தால், பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சின்ஹாவை அழைத்துப் பேசி, ஆலோசனைகள் பெற்று, நாட்டைப் பாதுகாப்பது எப்படி என்று செயலில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹாவை வைத்து எதிர் அறிக்கை வெளியிட வைக்கிறார்கள். நாட்டின் மிக முக்கியமானப் பிரச்சினையை ஒரு குடும்பப் பிரச்சினையாகச் சுருக்கி, விடயத்தை திசை திருப்பவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். இதுதான் பாசிச அணுகுமுறை என்பது.

ஜெயந்த் சின்ஹா நிதித்துறையிலிருந்து விமானப் போக்குவரத்துத் துறைக்கு அண்மையில் மாற்றப்பட்டிருக்கிறார். புதிய நிதித்துறை இணையமைச்சராக நியமிக்கப்படுள்ள பொன். ராதாகிருஷ்ணன் நாடு எதிர்கொண்டு நிற்கும் நெருக்கடி பற்றி இதுவரை வாய் திறக்கவேயில்லை. பெரும்பாலான பா.ஜ.க.வினர் பேச பயப்படுகிறார்கள் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியும், மன்மோகன் சிங்கின் பத்தாண்டு கால ஆட்சியும், பா.ஜ.க.வும், மோடி அரசும்தான். இவர்கள் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும், உலக வங்கிக்காரர்களும் சொல்வதுபோல ஆடினார்கள். இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ‘எள்’ என்றால் இவர்கள் ‘எண்ணெய்’ என்று குதித்தார்கள். அவர்கள் ‘குனிந்து நில்’ என்றால் இவர்கள் குப்புற விழுந்தார்கள்.

விவசாயிகள், மீனவர்கள், சில்லரை வணிகர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என எந்தத் தரப்பினரைப் பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. தங்களுக்கு நிதியுதவி அளிக்கும் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மட்டும் உண்மையாக உழைத்தார்கள்.

பத்தாண்டு கால ஊழல் ஆட்சியை அகற்றி, “பா.ஜ.க.வினர் தேசியவாதிகள் என்பதால் நல்லது செய்வார்கள்” என்ற நம்பிக்கையில் ஆட்சியை இந்திய மக்கள் அவர்கள் கைகளில் கொடுத்தனர். ‘நாட்டைக் காப்பாற்று’ என்றால், அவர்கள் மாட்டைக் காப்பாற்ற முயன்றார்கள். ‘ஏழ்மையை முடித்து வை’ என்றால், அவர்கள் ஏழைகளை முடித்து நின்றார்கள். ‘வேலை கொடு, வருமானத்தைப் பெருக்கு’ என்று கேட்டால், வாய்ப்பந்தல் போடும் வேலையை மட்டும் வகையாக நடத்தினார்கள். காங்கிரசு ஆண்டிகளும், காவி ஆண்டிகளும் கூடிக் கட்டிய மடம் மொத்தமாக இடிந்து எல்லோர் தலையிலும் விழப் போகிறது.

பொருளாதார மந்தநிலைக்கு “தொழிற்நுட்பக் காரணம்” காட்டி தப்பிக்கப் பார்க்கிறார் அமித் ஷா. பிரச்சினை ஏதுமில்லை என்று மறுப்பதும், நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்று மழுப்புவதுமாக நாட்கள் கழிகின்றன. வங்கிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத்தொகைக் கொடுப்பது அரசின் திட்டங்களுள் ஒன்றாக இருக்கிறது.

ஊக்கத்தொகைக் கொடுப்பது ஏற்றுமதியை அதிகரிக்கும், முதலீடுகளை உருவாக்கும், சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கும், கிராமப்புற கட்டமைப்புக்களை, வீட்டுவசதிகளை உருவாக்கும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த ஊக்கத்தொகையை அரசுத் திட்டங்களில் போடுவதா, அல்லது மக்களுக்குக் கொடுத்து பொது நுகர்வினை விருத்தி செய்வதா என்பது முக்கியமான கேள்வி. அரசுத் திட்டங்களில் இந்தப் பணத்தைப் போட்டால், வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம், வளர்ச்சியைக் கொண்டு வரலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் போடப்படுகிற பணம் முழுமையும் செலவு செய்வதற்கு மாதக் கணக்கில் கால அவகாசம் தேவைப்படும். அப்படியானால் எதிர்பார்க்கும் பலன்கள் வந்துசேரவும் தாமதமாகும்.

எனவே ஊக்கத்தொகைக் கொடுக்கும் திட்டத்தை சற்றேத் தள்ளிவைத்துவிட்டு, அரசின் பல்வேறுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதிகளை உடனடியாக செலவு செய்வது என்று அரசு முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. செய்வதறியாது திகைத்து அரசு கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது, தவறான அறிவுரைகளை சிலர் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

“பொருளாதாரச் சரிவிலிருந்து மீள உறுதியான நடவடிக்கை தேவை” என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதிய ஒரு தமிழ் நாளிதழ் பிரச்சினைக்குத் தீர்வாக ஒருசில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. “நிலம், தொழிலாளர்களுக்கான சந்தை ஆகியவற்றில் இருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாகவே பொருளாதார வளர்ச்சியைப் பின்னுக்கிழுத்து வருகின்றன.” அதாவது, எந்தவிதமானக் கட்டுப்பாடும் இல்லாமல் நிலத்தையும், தொழிலாளர்களையும் சுரண்ட அனுமதிக்க வேண்டும் என்பதைத்தான் இப்படி மறைமுகமாகச் சொல்கிறார்கள்.

பொருளாதாரம் மேலும் மேலும் மோசமாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில், … “கடுமையான கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொள்ள வேண்டும்!” அதாவது தற்போது செய்யப்பட்டிருக்கும் மக்கள் விரோத, முதலாளி ஆதரவு கட்டமைப்பு மாற்றங்களும், நிலைநிறுத்தும் செயல்பாடுகளும் (structural adjustments and stabilization programs) போதாது, மக்களை இன்னும் வாட்டி வதக்குங்கள் என்பதை முதலாளிகள் மொழியில் நாசூக்காகச் சொல்கிறார்கள்.

உண்மையில் ஊக்கத்தொகையோ, துறைசார்ந்த செலவுகளோ, கூடுதல் கட்டமைப்பு சீர்திருத்தங்களோ எல்லாமே வெறும் மேம்போக்கானத் தீர்வுகள்தான். “நோய் நாடி, நோய் முதல் நாடி” அதற்கேற்ற மருந்து கொடுப்பதாக இருந்தால், எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை, கீழ்க்காணும் நடவடிக்கைகள் ஒரு நல்ல துவக்கமாக இருக்கலாம்:

· அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், உலக வங்கிக்காரர்களின் தாளத்துக்கு ஆடுவதை நமது ஆட்சியாளர்கள் முதலில் நிறுத்த வேண்டும். காலனியாதிக்க மனநிலையை, அடிமை மனோபாவத்தை, மேற்கத்திய வளர்ச்சி சித்தாந்தத்தை உதறித்தள்ளிவிட்டு மனச்சிறையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும்.

· நமது ஆட்சியாளர்கள் நம் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். நம் மக்களின் நலன்களை முன்னிறுத்தி சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்.

· தொழில்துறை உற்பத்தி மட்டுமே வேலைவாய்ப்புக்களை உருவாக்கும், வருமானத்தைப் பெருக்கும், மக்களுக்கு வளம் தரும், நலம் பயக்கும் எனும் மூடத்தனமான நம்பிக்கையை கைவிட்டு, வேளாண் உற்பத்தியையும் பெருக்குவோம். மீன்பிடித் தொழில், சில்லரை வணிகம், நெசவுத் தொழில் போன்ற பாமர மக்களின் வேலைகளை, உற்பத்திகளைப் பாதுகாப்போம், வளர்த்தெடுப்போம். இம்மாதிரியான வேலைகளுக்கு லாபமும், கண்ணியமும், பாதுகாப்பும் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவருவோம்.

· “சந்தையே கடவுள், வியாபாரமே வேதம், வெள்ளைக்காரனே தேவதூதர்” என்கிற மனநிலையை கைவிட்டு, நமது நலன்களைப் பேணிக்கொள்ளும் பொருட்டு கொஞ்சம் பாதுகாப்புவாதிகளாக (protectionists) சிந்திப்போம், செயல்படுவோம். நம்நாட்டு விவசாயிகளுக்கு மானியங்கள் கொடுக்காதீர்கள், உதவிகள் செய்யாதீர்கள் என்று நிர்ப்பந்திக்கும் அமெரிக்கா தன் நாட்டு விவசாயிகளுக்கு வகைதொகை இல்லாமல் வாரி வழங்குகிறது. மூன்றாம் உலக அடிமை நாடுகளின் தலைவர்கள் இதை கேள்வி கேட்பதில்லை.

· பொருளாதாரத்தை சீரமைத்து வெற்றிகாணும் வரை, புதிய அணுமின் நிலையங்கள், புல்லட் ரயில், பெரும் இராணுவக் கொள்முதல்கள், மற்றும் அதிகமான வீண் செலவுகளை ரத்து செய்வோம்.

· உணவுத் தன்னிறைவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, உடல்நலம், தரமான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

· அனைத்திற்கும் மேலாக, சமூக ஒற்றுமை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் பாசிசக் கொள்கைகளை, அணுகுமுறைகளைக் கைவிட்டு, நாட்டையும், நலிவடைந்த மக்களையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவோம்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: The way to recover from the economic problem

Best of Express