தி.மு.க.வில் மூன்றாம் தலைமுறை - தொடரும் வாரிசு அரசியல்!

எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்பட்ட போது, கருணாநிதியின் மகன் மு.க.முத்து, சினிமாவில் நடித்தார். உதயநிதி, இன்னொரு மு.க. முத்துவா என்பதற்கு காலம்தான் விடை கூறும்.

அரவிந்தன்

‘தி.மு.க. ஒன்றும் சங்கர மடம் அல்ல’ – என்பது, ‘வாரிசு அரசியல்’ நடப்பதாக தி.மு.க. மீது வெளிப்பட்ட விமர்சனத்துக்கு ஒரு முறை கலைஞர் கருணாநிதி அளித்த பதில். செய்தியாளர் சந்திப்பில் அவரது கோபம் வெளிப்பட்ட தருணங்களில் அதுவும் ஒன்று. அப்போது அவரது அந்தக் கூற்றில் இருந்த ஒரு பிழையை மறைந்த பத்திரிகையாளர் சோ சுட்டிக் காட்டினார். ‘சங்கர மடத்தில் வாரிசு முறையில் பீடாதிபதிகள் நியமனம் நடப்பதில்லை; இதை முதலில் கலைஞர் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்பது சோ அளித்த பதில்.

இப்போது தி.மு.க.வின் மீதான அந்த விமர்சனம் மீண்டும் ஒரு முறை வலுவாக எதிரொலிப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய புதல்வரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், இரு தினங்களுக்கு முன் தென்சென்னை மாவட்ட தி.மு.க. நடத்திய ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதோடு நில்லாமல், ‘நான் பிறக்கும்போதே தி.மு.க.’ என்று முழங்கி, அரசியல் அவதாரத்துக்குத் தயாராகி இருப்பதை உணர்த்தியிருக்கிறார். இதை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை.

அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் நேசத்திற்குரிய சென்னை மாநகர முன்னாள் மேயர், இப்போதைய சைதைத் தொகுதி எம்.எல்.ஏ.வான மா.சுப்பிரமணியன். அவர் முன்னின்று இந்நிகழ்ச்சியை நடத்தியதோடு, ‘இந்த மேடையைவிட்டு இறங்கும் முன் ஒரு முடிவை அறிவியுங்கள்’ என்ற பீடிகையோடு உதயநிதி ஸ்டாலினை வரவேற்க, பின்னர் பேசிய உதயநிதியோ, ‘முடிவெடுத்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன்’ என்று கூற, பேசி வைத்ததுபோல எல்லாம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தையே இது ஊடகத்தினருக்கு மட்டுமின்றி, கழகக் கண்மணிகளுக்கும் தோற்றுவித்துள்ளது.

இதற்குமுன் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யின் நிர்வாக இயக்குனர் பதவியில் உதயநிதி அமர்த்தப்பட்டார். அப்போது அந்த முடிவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. உதயநிதியைப்போல, தனது மகன் துரை தயாநிதிக்கும் ஒரு பொறுப்பு வேண்டும் என்று மு.க. அழகிரி கருதியதும்கூட, கட்சித் தலைமையுடன் அவருக்கு கசப்பு ஏற்பட ஒரு காரணம் என்று பேச்சு உண்டு.

‘கட்சித் தலைமை எந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவேன்’ என்பது புதிதாக அரசியலுக்கு (ஒரு கட்சிக்கு) வரும் பிரபலங்கள் வழக்கமாக உதிர்க்கும் முத்து. ’தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதும், உதயநிதியும் இதே பதிலைத் தெரிவித்துவிட்டார். ஆனால் ‘உடன்பிறப்புகள்’ இதனால் பரவசம் அடைந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. ஓய்ந்து வந்த ‘குடும்ப அரசியல்’ என்ற விமர்சனத்தை திரும்பவும் கிண்டிக் கிளற இது வாய்ப்பளிக்குமே என்பதும் கட்சிக்குள் சிலரது கவலையாக உள்ளது. ஏற்கனவே முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் மு.க.ஸ்டாலின், மருமகன் சபரீசனை கலந்தாலோசிக்கிறார் என்று ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இப்போது உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.கவில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதா? ஏன் திடீரென்று அவர் பொதுவெளிக்கு வருகிறார்? என்று தி.மு.க. பிரபலங்கள் சிலரிடம் கேட்டபோது, அனுமானமாக ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். “ரஜினியும், கமலும் சினிமா புகழ் வெளிச்சத்துடன் அரசியல் களத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு ஓரளவு ஈடு கொடுக்க உதயநிதியின் பிரச்சார சுற்றுப்பயணம் உதவக் கூடும் என்று ‘தளபதி’ (ஸ்டாலின்) கணக்குப் போடுகிறாரோ, என்னவோ?” என்கிறார், வடமாவட்ட தி.மு.க. புள்ளி ஒருவர்.

ஆனால், தி.மு.க. தலைமையின் நோக்கம் இதுவாக இருந்தால், இது கடந்த காலப் படிப்பினையை மறந்துவிட்டு மேற்கொள்ளும் முடிவாகவே கருதப்படும். எம்.ஜி.ஆருடன் பிணக்கு ஏற்படத் துவங்கியபோதுதான், கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து, திரைத்துறையில் ஈடுபடுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து தி.மு.க. மேடைகளிலும் பயன்படுத்தப்பட்டார். ஆனால் அவரால் இரு துறைகளிலுமே சோபிக்க முடியவில்லை. உதயநிதி, இன்னொரு மு.க. முத்துவா என்பதற்கு காலம்தான் விடை கூறும்.

×Close
×Close