/indian-express-tamil/media/media_files/2025/04/28/KMFSHEsbNAdF9bysqmbi.jpg)
சர்வதேச செப்பு சங்க இந்திய அறிக்கையின்படி, உள்நாட்டு சுத்திகரிக்கப்பட்ட செப்பு திறனில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக 23-ம் ஆண்டின் நிதியாண்டில் தாமிர தகட்டின் இறக்குமதி 180 சதவீதம் அதிகரித்துள்ளது.
கருத்து: சந்திர மௌலி
கௌதமபுத்தர், “மூன்று விடயங்களை நீண்ட காலம் மறைக்க முடியாது; அது சூரியன், சந்திரன் மற்றும் உண்மை” என்கிறார். தற்போது தூத்துக்குடி எதிர்கொண்டிருக்கும் சூழல் இதுதான். ஸ்டெர்லைட் காப்பர் விடயத்தில் உண்மை என்ன? பொய் என்ன? என்று கடந்த 10 ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த போராட்டங்களில் இந்தக் கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டன. இந்த முறை வித்தியாசம் என்னவென்றால், ஸ்டெர்லைட்டை மீண்டும் செயல்படுத்தவேண்டும், அதன் கதவுகள் திறக்கப்பட வேண்டுமென்பதே, போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாக இருந்தது. டிசம்பர் 20, 2024 அன்று, இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியின் மையப்பகுதியில் ஒன்றிணைந்த ஒரு அமைதிப் பேரணியை நடத்தினர்.
இந்த முறை ஒலித்த கோரிக்கைகள்: இழந்த பொருளாதாரத்தையும்,வாழ்வாதாரத்தையும் மீட்டெடுங்கள்; சிறு-குறு மற்றும் துணை தொழில்களுக்கு கைக்கொடுங்கள், மேற்கூறிய கோரிக்கைகளை அடைவதற்கான திறவுகோல் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதே ஆகும். நாமக்கல் போராட்ட சம்பவம் வேறுபட்டதா? நிச்சயமாக இல்லை. ஜனவரி, 06, 2025 அன்று ஸ்டெர்லைட் காப்பர் மூடப்பட்டதின் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இரண்டு வர்த்தக அமைப்புகளின் உறுப்பினர்கள், அருகிலுள்ள நாமக்கல்லில் மூடப்பட்ட ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை முன் வைத்து, வீதிகளில் இறங்கி போராடினர். நாமக்கல்மாவட்டம் பல்வேறு வகையான கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் லாரி தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி ஆப்ரேட்டர்களின் வர்த்தக மையமாகும்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் செயல்படுத்தக் கோரி, நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நாமக்கல் டிரைலர் உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரிகள் மற்றும் டிரைலர்களுடன் முழு வீச்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதின் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான. லாரிகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், லாரி போக்குவரத்தில் 600 க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாகவும், சில லாரி உரிமையாளர்கள் தற்போது லாரி ஓட்டுனர்களாக பணியாற்றி வருவதாகவும் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆலையின் செயல்பாட்டிற்காக சுமார் 6500 லாரிகள் இயங்கி வந்த நிலையில் ஆலை மூடியதின் எதிரொலியாக லாரித்தொழில் முடங்கி, லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இயந்திர செயல்பாட்டாளர்கள், பழுது பார்க்கும் பட்டறைகள் போன்ற துணை சேவைத்தொழில்களும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாமல், டிசம்பர் 12, 2024 அன்று தூத்துக்குடியை சேர்ந்த மீனவ மற்றும் கிராம மக்கள் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனுவினை அளித்தனர். தூத்துக்குடி நாட்டுப்படகு, இறால் மீனவர் நலச்சங்கம் மற்றும் தென்பாகம் மீனவர் சங்கம்
உள்ளிட்ட பல்வேறு மீனவ நலச்சங்கங்களின் சார்பாக இந்தக் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 20 ஆண்டுகளுக்கு மேலாக செயலபட்டதாகவும், கடலோர கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அதாவது கல்வி, மருத்துவம், குடிநீர், பெண்கள் நலன் போன்றவை ஆலை நிர்வாகத்தின் சேவைகளால் பயனடைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்தனர். இந்த ஆலை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது என்பது இம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது நிலவும் வேலை இழப்பு மற்றும் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்றவை விடை காணமுடியாத கேள்வியாக, பெரும் கவலையென தொடர்வதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஒரு வல்லுநர் குழுவினை அமைக்குமாறு போராட்டக் குழுவினர் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். குமரெட்டியாபுரம் மற்றும் மீளவிட்டானை சேர்ந்த கிராம மக்களும் இதேபோல் ஒரு மனுவினை சமர்ப்பித்தனர். .
இவ்வாறு ஆலையை திறக்கக்கோரும் பலதரப்பட்ட முறையீடுகள், போராட்டங்கள், அமைதிப் பேரணிகள் போன்றவை சமூக ஊடகங்களின் வாயிலாக தெளிவாகத் தெரிகின்றன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி முன்ணனி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. மேலும், ஆலை மூடப்பட்டதின் விளைவாக தூத்துக்குடி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உரங்களின் விலை 5 மடங்கு உயர்வு, வாழ்வாதார இழப்பு, வருமான அளவில் 40 சதவீதம் சரிவு, நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் இழப்பு போன்றவை நிகழ்ந்துள்ளன என்பதை விளம்பரத்தில் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்து வணிகர் சங்கம், தாமிரபரணி பாசன விவசாய சங்கம், ஆதிதிராவிடர்கள் நலச்சங்கம், தூத்துக்குடி ஒப்பந்தாரர்கள் சங்கம், தமிழக முன்னேற்றக்கழகம் போன்ற அமைப்புகள் பத்திரிக்கைகள் மூலம் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க வலியுறுத்தி விளம்பரங்களை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியிலும், நாமக்கல்லிலும் ஏன் பேரணி நடந்தது என்பதை புரிந்து கொள்ள, கிராமவாசிகள் ஏன் மீண்டும் ஆலை திறக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள் என்பதை உணர, முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு நிகழ்வுகள்: ஒன்று, உருக்காலை ஏன் மூடப்பட்டது. இரண்டு, அதை மீண்டும் ஏன் திறக்க விரும்புகிறார்கள் என்பது. நடந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்போம். ஸ்டெர்லைட் காப்பரின் தோற்றம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை 1997-ம் ஆண்டு தனது பணியை தொடங்கியது. இதன் தாய் நிறுவனம் வேதாந்த ரிசோர்சஸ் ஆகும். இது உலகளவில் உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறையில் புகழ்பெற்ற நிறுவனமாகும். ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் சுமார் 76,000- க்கும் மேற்பட்ட தொழிற்சார் நிபுணர்களை கொண்ட ஒரு மாபெரும் தொழில் நிறுவனமாகும். நிர்வாகத்தின் கூற்றுப்படி, 1990-களின் மத்தியில் தூத்துக்குடியில் உருக்காலை மற்றும் தாமிர சுத்திகரிப்பு நிலையம் துவங்க திட்டமிட்டபோது,அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு நிறுவப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் “க்ளென்கோர்” நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட “ISAMELT” என்ற செயல்முறை, உருக்காலையின் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை உறுதி செய்கிறது. சல்பூரிக் அமிலம் மற்றும் பாஸ்போரிக் அமில ஆலை, தாமிர உருக்காலை, ஆக்சிஸன் ஆலை,சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுகாதாரமான காற்றோட்டம் ஆகிவற்றிற்கான உபகரணங்களை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரிலேயா, இத்தாலி மற்றும் பிரேசிலிருந்து வாங்கப்பட்டன.
2017-ம் ஆண்டில், ஆலை மூடுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு பிரிட்டீஸ் பாதுகாப்பு கவுன்சில் ஸ்டெர்லைட் காப்பருக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செயல்முறைகளில் சிறந்து விளங்குவதற்காக “SWORD OF HONOUR” எனும் விருதினை வழங்கி சிறப்பித்தது.
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் காற்றின் தரத்தை 24x7 என்ற முறையில் கண்காணித்தல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கை ஆகும். ஆலையில் மாசுக்கட்டுப்பாடு அமைப்புகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் ஆன்லைனில் இணைக்கப்பட்டன. மேலும், அனுமதிக்கப்பட்ட மாசு அளவின் எந்தவொரு அதிகரிப்பையும் அதிகாரிகளால் நிகழ்நேரத்தில் கவனிக்க முடியும்.
தூத்துக்குடியில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு, மழைபொழிவு குறைவு, நிலத்தடி நீர் குறைப்பு ஆகியவற்றிற்கும், ஆலையின் செயல்பாடுகளுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை, அதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதற்கு பல்வேறு அமைப்புகள் நடத்திய ஆய்வுகள் தெளிவாக சுட்டி
காட்டுகின்றன.
உலகளாவிய தாமிர உருக்காலைகளின் செயல்திறனை மதிப்பிடும் “பரூக் ஹண்ட்” அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள 167 தாமிர உருக்காலைகளின் ஆற்றல் திறன், தாமிர சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றின் சிறந்த செயல்திறன் அடிப்படையில் ஸ்டெர்லைட் காப்பர் முதல் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவின் தாமிரத் தேவையில் ஸ்டெர்லைட் காப்பர் அதன் உச்சத்தில் கிட்டதட்ட 40 சதவீதம் பங்களிப்பை வழங்கியதால் தேசிய அளவில் தாமிரம் மற்றும் அதன் கூட்டுப்பொருட்களின் நிகர ஏற்றுமதியாளராக இருந்தது. ஸ்டெர்லைட் காப்பர் மூடப்பட்ட ஒருவருடத்திற்குள் நாம் நிகர இறக்குமதியாளாராக ஆகிவிட்டோம். மேலும், காப்பரின் விலை இரட்டிப்பாகியது.
தாமிர உற்பத்தில் நமது ஆதிக்கத்தை சீர்குலைத்து வெளிநாடுகள் வெற்றி பெற்றதை சில குறிப்புகள் மூலம் காணலாம்.
2023-ம் ஆண்டில் சீனாவிடமிருந்து 334.16 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தாமிரத்தை இந்தியா இறக்குமதி செய்ததாக சர்வதேச வர்த்தகம் குறித்த ஐக்கியநாடுகளின் COMTRADE தரவுதளம் தெரிவித்துள்ளது.
சர்வதேச செப்பு சங்க இந்திய அறிக்கையின்படி, உள்நாட்டு சுத்திகரிக்கப்பட்ட செப்பு திறனில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக 23-ம் ஆண்டின் நிதியாண்டில் தாமிர தகட்டின் இறக்குமதி 180 சதவீதம் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பதால், 2024-ம் நிதியாண்டில் நமது நாடு தாமிரத்தின் நிகர இறக்குமதியாளராக இருக்கும் என்றும், பசுமை மற்றும் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு சிக்கல்கள் உருவாககூடும் என்றும், “இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” தெரிவித்துள்ளது.
சமூக உரிமம் வழங்குதல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறக்க மூன்று உறுதிமொழிகள் அவசியம். முதலாவதாக, ஸ்டெர்லைட் காப்பர் ஒரு சீராய்வு மனுவினை (Curative Petition) சமர்ப்பிக்கும்போது தேசிய நலனுக்காக உச்சநீதிமன்றம் அதற்கான காரணங்களை கருத்தில் கொள்ளலாம். உச்சநீதிமன்றம் விரும்பினால் இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவினை பயன்படுத்தி ஸ்டெர்லைட் காப்பர் விஷயத்தில் மக்கள் நலனுக்கேற்ப ஓர் ஆணையை பிறப்பிக்கலாம்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், ஆலையை மூடுவதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. அதை தொடர்ந்து அக்டோபரில் ஸ்டெர்லைட் காப்பரின் மறு ஆய்வு மனுவினை (Review Petition) தள்ளுபடி செய்தது. வரவிருக்கும் சீரமைப்பு மனுதான் இறுதி சட்டப்பூர்வ தீர்வு.
இரண்டாவதாக, தமிழ்நாடு அரசு, சமூகம், மாநிலம் மற்றும் தேசத்தின் நலனை கருத்தில்கொண்டு, பாதுகாப்பு நடைமுறைகளை மறு பரிசீலனை செய்ய தொழில்நுட்ப நிபுணர்கள் குழு அமைப்பதின் மூலம் ஆலையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியமான வழிகளைப் பார்க்கலாம். இந்தக் குழு சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்ள அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
மூன்றவாது முக்கியமானதாகும். ஏனெனில், ஒரு கொள்கை ஆவணத்திலோ அல்லது சான்றிதழிலோ கையெழுத்திட்டு உறுதி செய்வது அல்ல. சுருக்கமாகசொன்னால் முதல் மற்றும் இறுதி ஒப்புதல் என்பது தூத்துக்குடி மக்களிடமிருந்து வரவேண்டும். ஏனெனில் இந்த ஆலை மூடப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்டது அவர்களின் வாழ்வாதாரம் தான். மேலும், இந்த பகுதியில் வணிகம், தொழில் மற்றும் வர்த்தகம் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய சிந்தனையுடன் செயல்பட்டால், காற்றின் திசை மாறினால், முத்துநகரத்தில் ஒரு புதிய பிரகாசத்தை கொண்டுவரலாம்.
(இந்தக் கட்டுரையை எழுதிய எழுத்தாளர் சந்திர மௌலி ஒரு முன்னாள் பத்திரிகையாளர் மற்றும் விளம்பர நிபுணர் ஆவார். தற்போது அவர் தகவல் தொடர்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அவருடையவை ஆகும்)
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்தின் உறுதிபூர்வ நிலைப்பாடு அல்லது கொள்கையைப் பிரதிபலிக்காது. அனுமதியின்றி இந்தக் கட்டுரையை மீண்டும் உருவாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.