தூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாஸ்மாக் கடைகளால் தினம் சாகிற குடும்பங்கள் எத்தனை?

கமல.செல்வராஜ்

தூத்துக்குடி துயரத்தின் வடுக்கள் இன்னும் நீங்கவில்லை. அரசியல், சமூக தளங்களில் தூத்துக்குடி நிகழ்வுகளின் தாக்கம் மறைய இன்னும் காலம் பிடிக்கும்! ஸ்டெர்லைட் ஆலையை முடுவதற்காக நடந்த நீண்ட நெடியப் போராட்டம் 13 பேரின் உயிரைப் பறித்த ரத்தக்கறையோடு முடிவுக்கு வந்துள்ளது. ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

13 உயிர்களைப் பறிகொடுத்த உறவுகளுக்கு என்றும் தீராத துக்கம்… உயிரிழந்த குடும்பத்திற்கு பல லட்சம் கொடுத்து சமாளித்ததாக ஆளும் அரசிற்கு நிம்மதி… மேலும் ஆலையை இழுத்து மூடியதால் அடுத்தத் தேர்தலிலும் தங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற இரட்டிப்பு நம்பிக்கை அரசிற்கு… ஆலைக்குச் சீல் வைத்ததை அறிந்தவுடன் தங்களுக்கு வெற்றி கிடைத்தது என போராட்டக்காரர்களுக்கு மகிழ்ச்சி!

மக்களை தூண்டிவிட்டு, அமைதியான போராட்டக்களத்தை ஆர்பரிக்க வைத்து இன்னுயிர்கள் போனால் என்ன? வெற்றி (?) கிடைத்து விட்டதாக இறுமாப்பில் அரசியல் கட்சிகள் சில! யார் உத்தரவிட்டார்களோ இல்லையோ நாம் சுட்டுவிட்டோம், செத்தவர்கள் செத்துவிட்டார்கள், இனி போராட்டமும் இல்லை- பாதுகாப்பும் வேண்டாம்… என்ற நிம்மதியில் போலீசார். இது தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் முடிவு.

ஆர்ப்பாட்டங்கள் அடங்கி விட்டன. ஆனால் எதிர் விளைவுகள் சுலபத்தில் அடங்கிவிடாது. ஸ்டெர்லைட்டை நம்பி நாடு முழுவதும் சிறியதும் பெரியதுமாக 800 தொழிற்சாலைகள் இயங்கின. இவற்றை நம்பி பணிபுரிந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர்!

இந்தியாவின் தாமிர தேவையில் 40 சதவிகிதத்தை ஸ்டெர்லைட் ஈடு கட்டியிருக்கிறது. இனி தாமிர தேவைக்கு இறக்குமதியை அதிகம் நம்ப வேண்டிய தேவை எழலாம். அதனால் ஏற்படும் அன்னிய செலாவணி இழப்பு, பொருளாதாரத்தை நிச்சயம் தாக்கும்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டால் சுற்றுச் சூழல் பாதிப்பு உண்டு என்றால், அதை சரி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தால் பாதிப்பு இல்லையா? இந்தியாவில் அனல் மின் நிலையங்களே வேண்டாம் என முடிவெடுத்துவிட முடியுமா? இன்று நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் சுமார் 90 சதவிகித மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலமாக கிடைப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது.

சரி போகட்டும்! நேரடியாக ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பயன் பெற்ற தொழிலாளர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு? “தண்ணீருக்குள் மீன் அழுதால் அதை யார் அறிவார்…? என்பது போல் அந்த ஆலையில் பணிபுரிந்த சுமார் 5000 (ஐயாயிரம்) குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி கண்ணீரில் கரைந்து நடுத்தெருவில் நிற்கிறதே இவர்களின் கண்ணீருக்கு யார் தீர்வு காண்பார்? இவர்களின் மறுவாழ்விற்கு யார் துணை நிற்பார்? ஐயாயிரம் பேர் என்பது வெறும் ஐயாயிரம் தனிமனிதர்கள் அல்ல ஐயாயிரம் குடும்பங்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஐயாயிரம் குடும்பங்கள் என்றால் ஒரு குடும்பத்திற்கு நான்கு பேர் என்ற சராசரி விகிதாசாரத்தில் பார்த்தால்கூட இருபதாயிரம் பேருடைய வாழ்க்கை ஒரே நாளில் நடுவீதிக்கு வந்திருப்பது வேதனையிலும் வேதனை. இன்று முதல் இவர்களின் வாழ்வாதாரம் என்ன? இந்தக் குடும்பங்களிலிருந்து பள்ளிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் படிப்பிற்கு என்ன உத்தரவாதம்? இவற்றையெல்லாம் யார் சிந்தித்துப் பார்த்தார்கள்?

மக்கள், போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அந்த போராட்டத்தின் அனைத்து நன்மை தீமைகளையும் அதற்கான அதிகாரிகள் மற்றும் நவீன தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு அலசி ஆராய்ந்த பின்பு, அதன் அடிப்படையில் குறைகளைக் களைந்து, மக்களின் பாதுகாப்புக்கு எவ்வித குந்தகமும் விளையாத விதத்தில் உத்தரவாதம் கொடுத்து, அந்த ஆலையைத் தொடர்ந்து செயல்பட வழிவகைச் செய்வதுதான் ஓர் அறிவு சார்ந்த அரசின் தலையாயக் கடமை.

அதைத் தவிர்த்து மக்கள் எதற்காகவோ உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதற்காக, ஆளும் அரசு அவசரப்பட்டுத் தொழிற்சாலைகளை இழுத்து மூடுவதற்கு முன் வந்தால் அது எந்த வகையில் நியாயமானது? இப்படிப் போராட்டங்களுக்குப் பயந்து ஆலைகளை பூட்டுப்போடுவதற்குத் தொடங்கினால், எத்தனை ஆலைகளுக்குப் பூட்டுப் போடுவார்கள்?

மக்கள் போராட்டத்திற்கு பயந்து, தொழிற்சாலைக்குப் பூட்டுப் போட்ட இந்த அரசால் ஒரு சிறு தொழிற்சாலையையாவது தொடங்கி பத்து இளைஞர்களுக்காவது வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியுமா? அல்லது இவ்வாலையை மூடுவதற்கு பின்னணியிலிருந்து செயல்படும் அரசியல்வாதிகளால் தமிழகத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி அதில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியுமா?

ஒரு வேளை மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் நல்லெண்ணம் கொண்ட அரசாக இந்த அரசு இருந்தால் ஏன் தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுடுகாடாக்கிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தினம் தினம் எத்தனையோ போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்தேறிக் கொண்டிருகிறதே அதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு ஏன் இன்னும் பூட்டுப் போடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு?

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் ஆளும் அரசே நடத்தும் டாஸ்மாக் சரக்கைக் குடித்து உடல்நலம் கெட்டு சின்னாபின்னமாகி தினம் தினம் எத்தனை பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குடும்பத் தலைவனை இழந்தும், இளம் வாலிப பிள்ளைகளை அநியாயமாக இழந்தும் நிற்கதியற்று அனாதைகளாக மாறியிருக்கிறார்கள் என்பதும் இந்த அரசிற்குத் தெரியாத ஒன்றா? அதன்பிறகும் ஏன் அவற்றை நாளுக்கு நாள் புதிது புதிதாக நீதிமன்ற உத்தரவையும் மீறி தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள்?

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பின்னணியிலிருந்தும் முன்னணியிலிருந்தும் மக்களை இயக்கிய அரசியல்வாதிகளால் ஏன் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் ஒருங்கிணைத்து அத்தனை டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு போராட்டம் நடத்தி அவற்றை மூடவைக்க முடியவில்லை?

மக்கள் வாழாதப் பகுதியில் இப்படிப்பட்டத் தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டியதுதானே? என சில அதிபுத்திசாலிகள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் ஒன்றைப் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவுதான் மக்கள் வாழாத காட்டிலோ, பாலைவனத்திலோ தொழிற்சாலைத் தொடங்கினாலும், அங்கு இந்த தொழிற்சாலையின் வளத்தைப் பயன்படுத்தி அப்பகுதிகளில், மக்கள் பல்வேறு சிறுசிறு வியாபாரங்களிலிருந்து, சிறு தொழில்கள் வரைத் தொடங்கி, அப்புறம் அங்கேயே குடியேறி பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையினாலே அவ்விடம் பெரும் நகரமாக மாறிய வரலாற்றைதானே நாடு முழுவதும் நாம் பார்க்க முடிகிறது. இதுதானே தூத்துக்குடியிலும் நடந்துள்ளது.

இதோடு இன்னொரு விவாதத்தையும் இதுபோன்ற அதிபுத்திசாலிகள் முன் வைக்கின்றனர். அது, இதுபோன்ற தொழிற்சாலைகளினால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் பரவுகிறது என்ற பீதியை பீத்துகின்றனர். அப்படியென்றால் ஆண்டாண்டு காலமாக அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களில் எத்தனைபேர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? அப்படியென்றால் நாடுமுழுவதும் உள்ள புற்று நோய்க்கு இந்த ஓர் ஆலை தான் காரணமா? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தல்லவா பிதற்ற வேண்டும்.

எது எப்படியோ போராட்டம் முடிந்தது. ஆலையும் மூடியாகிவிட்டது. இனி அங்குப் பணியாற்றிய, குறைந்தப் பட்சம் நிரந்தரப் பணியாளர்களுக்காவது அரசு மாற்று நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும். ஒருவேளை அங்கு பணியாற்றியப் பணியாளர்கள் அரசு பணிக்குத் தகுதியற்றவர்களாக இருந்தால், அவர்களின் குடும்பத்திலுள்ள தகுதியான ஒருவருக்காவது வேலை வழங்க வேண்டும்.

வேலையிழந்துள்ளவர்களின் குடும்பத்திலுள்ள குழந்தைகள் பள்ளி கல்லூரிகளில் கல்வி கற்கிறார்கள் என்றால் அவர்களின் படிப்பு செலவு அனைத்தையும் அரசே ஏற்றெடுக்க வேண்டும். அரசு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காவிட்டால், வேலையில் அமர்த்தும் வரை அவர்களின் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மட்டுமின்றி இந்த ஆலையை நிரந்தரமாக மூடாமல் அப்பகுதி மக்கள் அச்சப்படும் விதத்தில் அவ்வாலையில் இருக்கும் குறைகளைக் களைந்து மக்களின் ஐயப்பாட்டிற்கு போதிய உத்தரவாதமளித்து மீண்டும் அந்த ஆலையைத் தொடர்ந்து நடத்துவதற்கு, அந்த ஆலை நிர்வாகத்திற்கு அனுமதியளிக்க வேண்டும். அதுதான் தொழில் வளத்தை பேண விரும்பும் ஒரு அரசின் நடவடிக்கையாக இருக்க முடியும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close