தமிழக பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி இழப்பை சரி செய்ய நீண்ட கால திட்டம் ஏதும் இல்லை!

மாநில ஜிடிபி டெட் ரேஷியோ என்ற வரையறைக்குள் கடன் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இது உச்சவரம்பு வரையறையின் விளிம்பில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது.

dr. gowri ramachandran
டாக்டர் கவுரி ராமசந்திரன்

தமிழக நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேரம், நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரையில் வருவாய், செலவு, கடன் விபரம் ஆகியவற்றை தெரிவித்துள்ளார். மாநில ஜிடிபி டெட் ரேஷியோ என்ற வரையறைக்குள் கடன் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இது உச்சவரம்பு வரையறையின் விளிம்பில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. ஒரு ஸ்கிம் பெயிலியர் ஆனாலோ, ஒரு கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போனாலோ, மாநில ஜிடிபி டெட் ரேஷியோவை தாண்டிவிடக் கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறது. வருவாய் பற்றாக்குறையை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்பதற்கான விளக்கத்தை நிதி அமைச்சர் சொல்லவில்லை.

வேளாண்மைத்துறை, சிறு குறு தொழில்கள், சேவைத்துறைகள் வளர்ச்சிக்கான எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்களை மீண்டும் தொடர்கிறார்கள். இதில் தவறேதும் இல்லை. ஆனால் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடினார்கள். அவர்களுடைய பிரச்னைகளை களைய எந்த ஒரு நடவடிக்கையும் இந்த பட்ஜெட்டில் இல்லை. இது வருந்த தக்கதாக உள்ளது.

விவசாயிகளின் மிக முக்கிய கோரிக்கை, விளைச்சலுக்கு உரிய விலையும் லாபமும் வேண்டும் என்பது. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி கொடுத்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், மாநில அரசு அது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. மகாராஷ்ட்ராவில், கரும்பு விவசாயிகளுக்கு ரங்கராஜன் கமிட்டி கொடுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதைவிட அதிகமாக நாங்கள் கொடுக்கப் போகிறோம் என்று மட்டுமே தமிழக பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது.

டிசாஸ்டர் மேனெஜ்மெண்ட், வெள்ளத்தடுப்பு விஷயங்களில், இதை இப்படி செய்யப் போகிறோம் என்றுகுறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை.

இவர்கள் 1.76 லட்சம் கோடி பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பளமே 76 லட்சம் கோடி போய்விடுகிறது. அது தவிர இலவச திட்டங்களுக்கு என சுமார் 25 லட்சம் கோடியை ஒதுக்கிவிடுகிறார்கள். மீதமுள்ள சுமார் 75 லட்சம் கோடியில் தான் மற்ற திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். 75 லட்சம் கோடியில் என்ன செய்துவிட முடியும் என்பது தெரியவில்லை. ஒதுக்கீடுதான் அதிகமாக இருக்கும். நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் இருக்காது.

பட்ஜெட்டில் சாதகமான அம்சங்கள் என்று பார்த்தால், தமிழகத்தை ஒன்பது மண்டலங்களாக பிரித்து, ஜெர்மன் உதவியுடன் சில திட்டங்களை கொண்டு வருவதாக சொல்லியுள்ளார்கள். இது குறித்தான விரிவான விபரங்கள் கிடைத்தால் ஒருவேளை பயனுள்ளதாக இருக்கும். சென்னை- கன்னியாகுமரி தொழில் வளர்ச்சிப் பாதை (Industrial Corridor), மதுரை – தூத்துக்குடி
தொழில் வளர்ச்சிப்பாதை, கோயம்புத்தூர் தொழில் வளர்ச்சிப் பாதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். ஏசியன் டெவலப்மெண்ட் வங்கியுடன் இணைந்து, இதை நிறைவேற்றப் போவதாக சொல்லியுள்ளனர். இதை துரிதமாக நிறைவேற்றினால் தமிழகம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதே போல நகர்புற வளர்ச்சிக்காக, உலக வங்கி ஏற்கனவே 834 கோடி கொடுத்துள்ளது. அதைக் கொண்டு சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக வங்கியிடம் கூடுதல் நிதி பெற்று, இன்னும் சில திட்டங்களைச் செய்தால் தமிழகம் வளர்ச்சியடையும்.

சிறு குறு தொழில்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு பட்ஜெட்டில் திட்டங்கள் குறைவாகவே இருக்கிறது. கடந்த முறை நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள்தான் அதிக அளவில் கையெழுத்தானது. ஆனால், அவை முதலீடாக மாறவில்லை என்பதை பட்ஜெட்டில் உள்ள புள்ளி விபரங்களைக் கொண்டு தெரிந்து கொள்ள முடிகிறது. முதலீட்டை அதிகப்படுத்துவார்களேயானால், சிறு குறு தொழில் வளரும். வேலை வாய்ப்பு பெருகும்.

இந்த பட்ஜெட் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்லும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொல்கிறார். 9 சதவிகிதம் ஜிஎஸ்டிபி வரும் என்று சொல்கிறார்கள். நிதி பற்றாக்குறை, கடன் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, அரசு குறிப்பிடும் வளர்ச்சி வருமா என்பது சந்தேகமே?

ஜி.எஸ்.டி வந்ததால், வரி வருவாய் இழப்பை சமாளிக்க நஷ்டஈடு 5 ஆண்டுகளுக்கு கொடுப்பார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் இந்த நிதி பற்றாக்குறையை எப்படி சமாளிக்க, எப்படி வருவாய் திரட்டப் போகிறோம் என்பதற்கான நீண்ட கால திட்டம் ஏதும் இல்லை.

பட்ஜெட்டில் வரவு செலவுகளை சொல்லியிருக்கிறாரே தவிர வளர்ச்சிக்கான தொலை நோக்குத்திட்டங்கள் ஏதும் இல்லை.

(கட்டுரையாளர் டாக்டர் கவுரி ராமசந்திரன், பொருளாதார நிபுணர். அழகப்பா பல்கலை கழகத்தில் கார்ப்பரேட் ஃபைனான்ஸில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்.)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close