இரா.குமார்
சீர்திருத்தம், வளப்படுத்துகிறோம் என்ற பெயரால் எந்தவித திட்டமிடலும் முன்னேற்பாடும் இன்றி மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன.சரியாகச் சொன்னால் உயிர்பலி வாங்கும் அளவுக்கு மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
கறுப்புப் பணத்தை மீட்பேன்; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்ற மெகா வாக்குறுதியைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் மோடி. குஜராத்தை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டார் மோடி, அவர் பிரதமர் ஆனால் இந்தியாவே சொர்க்க பூமியாகும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் மோடி புகழ் பாடின. மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு, இந்தியாவை மீட்க வந்த இரட்சகராக மோடி காட்சியளித்தார். மோடி என்ற பிம்பத்தை மட்டுமே நம்பி மக்கள் வாக்களித்தனர்.
பாஜகவே எதிர்பராத வெற்றியை மக்கள் கொடுத்தனர். பெரும்பான்மை பலத்துடன் பிரதமரானார் மோடி. பிரதமர் ஆனதும், அவருடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. உல்லாசப் பயணம் போகும் சுற்றுலாப் பயணி போல அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வதும் செல்ஃபி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதுமாக உள்ளார்.
ஒரு நாட்டின் தலைவர் என்பவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக, எளிமையைக் கடை பிடிப்பவராக இருக்க வேண்டும். மதுரைக்கு வந்தபோது, அரை ஆடையில் இருக்கும் விவசாயத் தொழிலாளியைப் பார்த்ததும், தானும் அரையாடைக்கு மாறினார் காந்தி. அப்படிப்பட்ட இந்த காந்தி தேசத்தின் பிரதமர் மோடி, பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட் அணிகிறார்.
ஏராளமான நகை அணிந்திருந்த ஜெயலலிதாவின் போட்டொ ஒன்று ரெய்டில் சிக்கியது. உடல் முழுக்க நகையணிந்து ஜெயலலிதா வெளியில் வரவில்லை. ஒரு போட்டோதான் கிடைத்தது. நகை மோகம் என்பது, பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருப்பதுதான். ஜெயலலிதாவின் அந்தப்படத்தை வெளியிட்டு அவரை பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. அவர் இறப்பதற்கு முன்புவரையும் அந்தப் படம் பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தது. ஒரு மாநில முதல்வருக்கு இப்படி ஆடம்பர மோகம் இருக்கலாமா? என்றுதான் பத்திரிகைகள் விமர்சித்தன. ஆனால், மோடி, பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட் அணிந்ததை எந்த ஊடகமும் விமர்சிக்கவில்லை. மக்கள் நலனில் அக்கரை உள்ள எந்தத் தலைவரும் ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். மோடியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும், மக்களைப் பற்றி அவருக்கு அக்கரை இல்லை என்பதையே காட்டுகிறது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் 85% சதவீதம் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். அவை செல்லது என்று அதிரடியாக அறிவித்தார் மோடி. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, தயாராக வைக்கவில்லை. வங்கிகளில் பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் எடுக்க முடியாது என்ற கட்டுப்பாடு. ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. சரி அதையாவது எடுக்கலாம் என்றால், ஏடிஎம்களிலும் பணம் இல்லை. வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் ஏடிஎம்மில் பணம் இல்லை. வங்கிகளிலும் ஏடிம்களிலும் மக்கள் கால் கடுக்கக் காத்திருந்தனர். வரிசையில் நிற்கும்போதே சிலருக்கு உயிர் போனது. திட்டமிடலும் போதிய முன்னேற்பாடு செய்யாமலும் எடுத்த நடவடிக்கையின் விளவு இது.
அடுத்து ஜிஎஸ்டி.. கேட்டால் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவர இருந்த திட்டம்தான் இது என்று சொல்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது, “என் பிணத்தின் மீது நடந்துதான் ஜிஎஸ்டி யை அமல்படுத்த வேண்டும்” என்று சொல்லி கடுமையாக எதிர்த்தார் மோடி. அவரே பிரதமர் ஆனதும் ஜிஎஸ்டியை அமல்படுத்தினார். அமல்படுத்தியதில் தவறு இல்லை. ஜிஎஸ்டி பற்றி வியாபாரிகளுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டு ஜிஎஸ்டியை அமல்படுத்தியிருக்க வேண்டும். வியாபாரிகள் சந்தேகம் கேட்டால் விளக்கம் சொல்ல அதிகாரிகளுக்கே விவரம் தெரியவில்லை. இதனால் பெரும் குழப்பம். கடும் வரி உயர்வால் மக்கள் வதை படுகின்றனர்.
அடுத்து, மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு. நாடு முழுவதும் ஒரே கல்வித்திட்டம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்வித் திட்டம் உள்ளது. இதில் மத்திய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தியதால், மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வுக்கான பாட திட்டத்தை அறிமுகப்படுத்தி, நீட் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி, அதற்கான அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கிறோம் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் கைவிரித்தது மத்திய அரசு. இதன் விளைவு அனிதா தற்கொலை.
இப்படி, எந்தவித திட்டமிடலும் முன்னேற்பாடும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மோடி அரசு அமல்படுத்தும் திட்டங்களால் உயிர்பலி தொடர்கிறது. இன்னும் என்னென்ன திட்டங்கள் வந்து எத்தனை உயிர்களை பலி கேட்கப் போகிறதோ?