க.சந்திரகலா
திமிங்கிலங்களை எதிர்த்து ஜெல்லி மீன் ஜெயிக்குமா? ஜெயிக்கும். சுறாக்களின் கோபத்தை இறா எதிர்கொள்ளுமா? கொள்ளும். ஆழக்கடலுக்கு போகாமல் அதெப்படி நம்புவது என்கிறீர்களா? நம்புங்கள். டிராபிக் ராமசாமி வேறு எந்த வகையை சேர்ந்தவராம்??!
சொந்த பிரச்னைகளுக்காக நீதிமன்ற படியேறி இறங்கும் சுயநலமிகளுக்கு மத்தியில், பொது பிரச்னைகளுக்காக மட்டுமே நீதி அமைப்புகளின் கதவு தட்டும் கைகளுக்குச் சொந்தக்காரர் இவர். பிழைப்பு தேடி பெருநகரங்களுக்கு வருபவர்கள், தலை தலைமுறையாக இங்கேயே வசிப்பவர்கள் என இரண்டு தரப்பினரும் தங்கள் வேர்களை பரப்புவதிலேயே வெறியாக இருக்கிறார்கள். இதற்கான ஓட்டத்தில் தங்களை சுற்றி நடப்பது எதையும் கவனிக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அல்லது விரும்புவதில்லை.
டிராபிக் ராமசாமி அப்படியில்லை. மிகச்சாதாரணமாக மக்கள் கடந்து போகும் ஒரு நிகழ்வை கவனிக்கிறார். அது பொதுநலனுக்கு பேராபத்தாக அமையும் வாய்ப்பிருப்பதாக அறிந்தால் ஒற்றை ஆளாக களமிறங்குகிறார். டிராபிக் நெருக்கடியில் ஆரம்பித்த அவரது யுத்தம் பல்வேறு கட்டங்களை கடந்து, கஷ்டங்களை கடந்து பேனரில் வந்து நிற்கிறது.
சதைத் திரட்சியைக்கொண்டு பயில்வான் என அறியப்படும் அங்க இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட இந்த மூங்கில் தேகக் காரர் எந்த சூறாவளிக்கும் அஞ்சியதில்லை.
வயது கூட கூடத்தான் தேக்கு மரத்துக்கு வலு அதிகம் என நம்புகிறோம். மெலிந்த பாக்குமரம் கூட அப்படித்தான் என்று நிரூபித்த மனிதர் அவர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி ஒரு முதல்வரின் கட் அவுட்டையே கிழித்து வீசிய இவர் மாவீரனன்றி வேறு யாராம்?
சென்னை நகர சாலைகளையும் , பாதசாரிகளின் நடைபாதைகளையும் ஆக்ரமித்து பேனர்கள் வைப்பது பொதுமக்களை எரிச்சலடைய செய்கிறது. ஆனாலும், கட்சி தலைவர்கள் உள்ளுக்குள் புளகாங்கிதப்பட்டு போகிறார்கள். இல்லையென்றால் சாலை வழியெங்கிலும் இத்தனை ஆயிரம் பேனர்கள் எங்கிருந்து முளைக்கின்றன.?
அரசியலில் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவும், உள்ளூர் மக்களிடம் தங்களின் அரசியல் செல்வாக்கை நம்ப வைக்கும் முயற்சியாகவும் வைக்கப்படுகிற பேனர்கள் அரசியல் அல்லக்கைகளின் மலிவான விளம்பர உத்தி. தலைவர்கள் போகும் பாதையில் , வாசித்தால் குமட்டுகிற வசனத்துடன் கூடிய பேனர்கள் வைப்பது தமிழக அரசியல் கட்சிகளின் சாபக்கேடு.
நீதிமன்ற உத்தரவுகள் விளம்பர பேனர்களுக்கெதிராக வந்தாலும், புற்றீசல் போல இரவோடு இரவாக முளைப்பதற்கு காரணம், இன்றைக்கு தலைவர்கள் என அறியப்படும் பலரும் பேனர்களால் பேசப்பட்டவர்கள்தான். எனும் போது தொண்டன் வேறெந்த வழியை தேர்ந்தெடுப்பான்? அதுதானே நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது.!
தலைவனின் பார்வை படவேண்டும் என்ற ஒற்றை குறிக்கோள்தான் பேனர் வைப்பவனுக்கு. அதன் விளைவுகள் குறித்த கவலையில்லை. இதனை நெறிப்படுத்துவதற்காக நீதிமன்ற உத்தரவுகளை பெற்று போராடி வருகிறார் டிராபிக் ராமசாமி.
ஆனாலும், அரசியல் செல்வாக்கு என்கிற மிருக பலம் நீதிமன்ற உத்தரவுகளை தூக்கிப்போட்டு மிதிக்கும் போது ஒற்றை ஆளாக போராட்டம் நடத்துகிறார் டிராபிக் ராமசாமி. இப்படித்தான் சென்னை காமராஜர் சாலையில் சட்டவிரோத பேனருக்கெதிராக இவர் போராட்டம் நடத்தியபோது, ஒரு கும்பல் இவரை அடித்து துவைத்து ஆஸ்பத்திரியில் தள்ளியது. இதை வேடிக்கை பாரத்தபடி சென்னை நகர மக்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். அதன் விளைவுதான் நெஞ்சை பதற வைத்த ஒரு இளம் பெண்ணின் உயிரிழப்பு.
கோவையில் இன்ஜினியர் ரகுவின் மரணம் கூட இத்தகையதுதான்; ஆனாலும் அதிலிருந்து எவரும் பாடம் பெறவில்லை. அந்த கையாலாகாத்தனத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த சுபஸ்ரீ மரணத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.
டிராபிக் ராமசாமியின் பேனருக்கெதிரான போராட்ட முன்னெடுப்பை பார்த்தவர்கள் இந்த கிழவனுக்கு… இந்த கிறுக்கனுக்கு வேறு வேலையே இல்லையா என்று ஏகடியம் செய்தார்கள். இப்போது கடந்த ஒருவாரமாக சென்னை நகரத்து மக்கள் அவரின் தேவை குறித்துதான் பேசுகிறார்கள்.
சென்னை நகர வீதியில் செருப்பாலும், துடைப்பத்தாலும், ஆபாச உடல்மொழியாலும் காயப்படுத்தப்பட்டபோது டிராபிக் ராமசாமி நிச்சயம் உடைந்து போய் அழுதிருப்பார். காரணம் வலியல்ல.. பேனருக்கு பலியாகப்போகும் ஏதுமறியா அப்பாவி முகங்கள் அவர் கண்களில் வந்து போயிருக்கும். யார் கண்டது? அதில் ரகு, சுபஸ்ரீ முகங்கள் கூட இருந்திருக்கும். காரணம் அவர் வெறும் ஒரு மனிதரல்ல; தீர்க்கதரிசி!
(கட்டுரையாளர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டைச் சேர்ந்தவர். இவரது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் அதிகம் பேசப்படுபவை. தொடர்புக்கு kachandrakala@gmail.com)