Advertisment

சுஷ்மா மீதான விமர்சனத்தில் என்ன நியாயம்?

தேசத்தின் நலனிற்காக நாற்பது வருடங்களுக்கும் மேலாக உழைக்கும் ஒருவரை பாஸ்போர்ட் பிரச்சனைக்காக விமர்சிப்பது அபத்தம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sushma-Swaraj

Sushma-Swaraj

ராம் மாதவ்

Advertisment

சமூக வலைதளங்களில் மட்டும் அல்ல, பொது வெளிகளிலும் கூட வார்த்தை என்பதை மிகவும் கண்ணியத்துடன் உபயோக்கிக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வார்த்தை வாயிலிருந்து வெளிப்பட்டுவிட்டால், அல்லது சமூக வலைதளங்களில் பதியப்பட்டால், அது சொல்லப்பட்ட கருத்து தான்.

வில்லில் இருந்து வரும் அம்பினைப் போல் வெளிவந்த வார்த்தையினை திரும்பப் பெற இயலாது. ஒரு நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் அவரின் வேலையை செய்ததிற்கு வலைதளங்களில் எத்தனை வசைகள், எத்தனை தரம் தாழ்ந்த விமர்சனங்கள்?

கடந்த மாதம் தன்வி சேத் மற்றும் அனாஸ் சித்திக் என்ற புதுமணத் தம்பதியினர், தங்களுடைய பாஸ்போர்ட் தொடர்பான விசாரணை ஒன்றிற்காக லக்னோவில் இருக்கின்ற பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றிருக்கின்றார்கள். அங்கு விசாரணையை மேற்கொண்ட அதிகாரியின் பெயர் விகாஷ் மிஸ்ரா. புதுமணத் தம்பதிகள் இருவரும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர்கள். பாஸ்போர்ட்டில் கடைசி பெயரினை மாற்றுவது தொடர்பாக ஒரு மாற்றுக் கருத்து அந்த அதிகாரிக்கும், புதுமண தம்பந்திகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது.

ட்விட்டரில் தன்னை ட்ரோல் செய்த ட்வீட்களை லைக் செய்து ஷேர் செய்த மத்திய அமைச்சர்

தன்வி தான் கொடுத்த அனைத்து ஆவணங்களிலும் அவருடைய பெயர் தன்வி சேத் என்றே இருந்தது. ஆனால் அவருடைய திருமணப் பெயர் சதியா என இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்பும் தன்யா சேத் ஆகவே இருக்க விரும்பி உள்ளார் தன்யா. ஆனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி, தன்யாவின் இறுதிப் பெயரினை இஸ்லாமியப் பெயராக மாற்றக் கூறியும், இல்லாவிடில் அவருடைய கணவரை இந்துவாக மாறச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதில் தன் விருப்பத்தினை நிறைவேற்றக் கோரிய பெண் கெட்டவளாகவும், அவளின் விருப்பத்தை மீறி பேசிய அதிகாரி நல்லவராகவும் உங்களுக்கு எப்படி தோன்றியது என்பது தான் எனக்கு விளங்கவில்லை. இதைப்பற்றி முறையாக மத்திய அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதனை அடுத்து, அந்த அதிகாரி விகாஷ் மிஸ்ராவின் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பிரச்சனை சமூக வலை தளத்திற்கு வரவும், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் மீது ட்விட்டர் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இச்சம்பவம் நடைபெற்ற தருணத்தில் சுஷ்மா சுவராஜ் இந்தியாவிலேயே இல்லை என்பது தான்.

மேலும், எங்கோ இருக்கும் ஒரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஜூனியர் நிலையில் இருக்கும் ஒருவரை பணி மாற்றம் செய்ய மத்திய அமைச்சர் தான் வருவார் என்று எப்படி யோசிக்க முடிகின்றது உங்களால்?

வெரிஃபிக்கேஷன் ரீதியான பிரச்சனைகள் வரும் போதும் சுஷ்மா சுவராஜ்ஜினையே தாக்குகின்றீர்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மீது ஏதாவது வழக்கு இருக்கிறதா என்பதனை அறிய காவல் துறை சரிபார்ப்பார்கள். அதில், நிரந்தர முகவரியில் விண்ணப்பதாரர்கள் வசிக்கவில்லை எனில் ’நில்’ போடுவதும் வழக்கத்தில் இருப்பது தான். தற்போது இருக்கும் வேலை வாய்ப்பு சூழல்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடியமர்த்தப்படுகிறார்கள். ஆனால் இதையும் தற்போது வந்திருக்கும் புதிய பாஸ்போர்ட் கொள்கைகள் ஏற்றுக் கொள்கிறது.

ஒரு பிரச்சனை என்று வரும் போது, அதை ஏன் மத ரீதியான பிரச்சனைகளாக மட்டும் பார்க்கின்றீர்கள். அலுவலகம் மற்றும் இதர பிரச்சனைகளின் காரணமாகக் கூட இந்த பிரச்சனை எழுந்திருக்கலாம்.

என்ன நடந்தது என்றும் தெரியாமல் ஒருவரை சமூக வலைதளத்தில் தரக்குறைவாக பேசுவதில் என்ன லாபம் அடையப் போகின்றீர்கள். ஆனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விமர்சனத்தையும் தைரியமாக எதிர் கொள்கிறார் சுஷ்மா.

ஒரு கருத்திற்கு மாற்றுக் கருத்து அனைவராலும் வைக்கப்படும். அதில் சரி தவறுகள் என இரண்டையும் கருத்தில் கொள்வதும் மிக முக்கியம்.

ஆனால் கருத்து சுதந்திரம் என்று பேகம் சுஷ்மா என்று அழைப்பதும், இறக்க வேண்டும் என்று சபிப்பதும், கெட்ட வார்த்தை பேசுவதும் மிகவும் மோசமான செயல்பாடு.

இதையெல்லாம் விட அவரின் உடல் நிலையையும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ததையும் கூட விமர்சிப்பது மிகவும் தாழ்வான செயல்.

ஆனால், இதையெல்லாம் மிகவும் சாதாரணமாக கடந்து செல்கின்றார் சுஷ்மா. அவர் மீது வைத்திருக்கும் விமர்சனங்களுக்கு மரியாதையான பதிலையே அவர் தருகின்றார்.

பனானி என்ற ஒரு புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் “சரியாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு வார்த்தை, சரியான இடத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை இந்த உலகத்திற்கும், சொர்க்கத்திற்கும் நல்லதை செய்யும்” என்று கூறுவார். அதை உணர்ந்து விமர்சனங்களை வைப்பது நலம்.

ராம் மாதவ் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

தமிழில் நித்யா பாண்டியன்

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment