அரவிந்தன்
தமிழகத்தில் ஒரு சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இத்தனை பரபரப்பை உண்டு பண்ணியது, இதற்கு முன் தமிழக அரசியல் காணாத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குக் காரணம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு, அச்சமயத்தில் இதே ஆர்.கே. நகர். தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற ‘வரலாறு காணாத’ பண வினியோகம் (ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம்!) அதன் எதிரொலியாக ஒரு அமைச்சர் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை, அதைத் தொடர்ந்து தேர்தல் ஒத்தி வைப்பு என, தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பிய இடைத் தேர்தல் என்பதுதான்.
ஒத்தி வைக்கப்பட்ட அந்த இடைத் தேர்தல் சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 21 அன்று நடத்தப்பட்டது. தேர்தல் கமிஷன் ஆறு அப்சர்வர்களை நியமித்து, பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து, பல வீதிகளில் துணை இராணுவப் படையைக் கொண்டு வந்து நிறுத்தி, என்னென்னவோ செய்து பார்த்தும், இந்த முறையும் பணப் பட்டுவாடா கனஜோராக நடந்தேறியது.
சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில், பிரச்சாரத்தின்போது வேட்பாளருடன் 2 மணி நேரம் சுற்றி வந்தாலே 300 ரூபாய் தரப்படும் என்பது, ‘சுலபமான நல்ல வருமானம்’ என்று மக்கள் குறிப்பாக பெண்கள் கருதியதில் வியப்பில்லை. இந்த வகையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 1000 ரூபாய் வரை ஊதியமாகக் கிடைத்தது என்றுதொகுதி வாசிகள் பலர் கூறியதைக் கேட்க முடிந்தது.
அமைச்சர்கள் அத்தனை பேரும் டேரா போட்டு, வாக்குப் பதிவுக்கு மூன்று நாட்கள் முன்னதாக காவல்துறையினரின் ஒத்துழைப்போடு, 75 சதவிகித வாக்காளர்களுக்குத் தலா ஆறாயிரம் ரூபாய் என அதிரடியாக வினியோகித்தும், இரட்டை இலைச் சின்னத்துடன் ஆளும் அ.இ.அ.தி.மு.க. சந்தித்த இந்த இடைத்தேர்தலில் மிகப்பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
அதுவும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒரு பிரிவாக அங்கீரிக்கப்படாமல், ‘ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான குடும்பத்தைச் சார்ந்தவர்’ என்ற குற்றச்சாட்டை சுமந்து கொண்டு சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கிய டி.டி.வி. தினகரனிடம் தோற்றிருப்பது அ.இ.அ.தி.மு.க.வின் இன்றைய பலவீனமான நிலையைப் பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது. தவிர, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் கட்சி ஒரு இடைத் தேர்தலில் தோற்றிருப்பது இந்த முறைதான்.
டி.டி.வி. தினகரன் தரப்பு, சென்ற முறை நிறுத்தப்பட்ட இடைத்தேர்தலின்போது வாக்காளருக்குக் கொடுத்த ரூ.4000த்தை நினைவுப்படுத்திவிட்டு, இந்த முறை கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட முடியாததால், புதிய டெக்னிக்கை கையாண்டது. புத்தம் புதிய 20 ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களிடம் விநியோகித்து, தினகரனுக்கு ஓட்டளித்துவிட்டு, தேர்தல் முடிந்ததும் அந்த 20 ரூபாயைத் திரும்பக் கொடுத்தால், ‘உங்களை நல்ல முறையில் கவனிக்கிறோம்’ (ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை) என்று உறுதியளித்து ஆதரவு திரட்டினார்கள்.
ஏற்கனவே ஒருமுறை ரூ.4 ஆயிரம் தந்தவர் என்பது அவர் மீது மக்களுக்கு ‘நம்பிக்கை’ ஏற்படுத்தியிருக்கலாம். கை மேல் 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த ஆளும் கட்சிக்கு வெற்றிக் கிட்டாமல், 20 ரூபாயை டோக்கன் அட்வான்ஸாகக் கொடுத்தவருக்கு வெற்றி கிட்டியிருப்பது ஒரு வகையில் விந்தைதான்.
இந்தத் தேர்தல் முடிவில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தும் அம்சம் - தி.மு.க., அதன் ஒரிஜினல் வாக்கு வங்கியைக்கூடத் தக்க வைக்காமல் இழந்திருப்பதுதான். இதற்கு முன் சில முறை, இடைத் தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் தரும் உற்சவத்தில் பங்கேற்ற தி.மு.க., இந்த முறை பணம் தருவதில்லை என்று முடிவெடுத்திருந்தது. இந்தத் தேர்தல் முடிவைக் கொண்டு இதுதான் தி.மு.க.வின் இன்றைய பலம் என மதிப்பிடுவது சரியாக இருக்காது.
இந்த இடைத் தேர்தல் முடிவு, ஆளும் கட்சிக்குள் புகைச்சலைத் தோற்றுவிக்கலாம். அ.தி.மு.க.வையும் அதன் ஆட்சியையும் அரவணைத்து, பாதுகாத்துக் கொண்டுள்ள பா.ஜ.க., அந்த நிலைப்பாட்டில் மறுபரிசீலனை மேற்கொள்ளலாம். ஆட்சி கவிழ்ந்தால் அ.தி.மு.க. தன் கைக்குள் வரும் என்ற நம்பிக்கையை தினகரனுக்கு ஊட்டலாம். தமிழக அரசியலில் காட்சி மாற்றங்கள் காத்திருக்கின்றன.