Advertisment

தினகரனின் மறுவருகையால் ஆட்டம் காணும் அரசு

தினகரனின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்கள், அவரைக் கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்ததற்கு அவர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டு மட்டும்தான் காரணம் என்றால் குழந்தைகூட நம்பாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dinakaran come back

டிடிவி தினகரன்

கண்ணன்

Advertisment

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்ட சசிகலாவின் சகோதரர் மகன் டி.டி.வி.தினகரன், ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு இப்போது பிணையில் வெளிவந்திருக்கிறார். தினகரனைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள் இதைக் கொண்டாட வேண்டுமல்லவா? ஆனால், அவர்கள் அவரது வருகையை விரும்புவதாகத் தெரியவில்லை. முதலமைச்சரும் அமைச்சர்களும் தினகரனின் மறுவருகையை வரவேற்கத் தயாராக இல்லை. நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் தினகரன் கட்சியில் மீண்டும் இணைய முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்துவருகிறார். மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனுவாசன் ஆகியோரும் தினகரனின் மறு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் தினகரனோ தன்னைக் கட்சியிலிருந்து விலக்கிவைக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் உண்டு என்று கூறிவருகிறார். பொதுச் செயலாளர் இப்போது சிறையில் இருக்கிறார்.

TTV Dinakaran comeback - Sasikala

இறுதலைக்கொள்ளி எறும்பு

இந்த முறை தினகரனை விலக்குவது அவ்வளவு எளிதல்ல. கடந்த முறைகூட அவராகத்தான் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவருக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் மேலும் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தினகரன் கட்சிக்குள் சேர்க்கப்படவில்லை என்றால். அதுவும் அவரை ஒரு அதிகாரமையமாக இருக்கவிடவில்லை என்றால் அவரது தலைமையில் மேலும் ஒரு அதிமுக பிரிவு உருவாவதைத் தடுக்க முடியாது. அவரை அனுமதித்துவிட்டாலோ பிரிந்து சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை கட்சியுடன் இணைக்க முடியாது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை முற்றிலும் நீக்கிய பிறகே இணைய முடியும் என்பதில் பன்னீர் அணி மிக உறுதியாக இருக்கிறது. தினகரன் சிறையில் இருந்தபோதே பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டது. பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் நட்பு பாராட்டுவதாக பன்னீர் அணி குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் தினகரன் உள்ளே வந்தால் பன்னீர் அணி தனியாகவே இயங்கும். அதே நேரத்தில் சட்டமன்றத்தில் 122 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் பழனிச்சாமியின் ஆட்சி, தினகரன் ஆதரிப்பதாக சொல்லப்படும் 19 எம்எல்ஏக்களால் ஆட்டம் காணும் வாய்ப்பு அதிகம். தினகரன் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறினால் பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணியுடன் இணைப்பு சாத்தியப்படலாம். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைக்கலாம். ஆனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி அரசுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது என்று முடிவெடுத்தால் ஆட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும்.

வருகிற 14ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. பழனிச்சாமி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆறு மாதம் ஆகவில்லை என்பதால் இந்தக் கூட்டத் தொடரில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது. ஆனால் எதிர்ப்பு எம்எல்ஏக்கள் வெட்டுத் தீர்மானங்கள் கொண்டுவந்து மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றவிட முடியாமல் செய்ய முடியும்.

இதன் மூலம் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அதிமுக ஆட்சி.

தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் அதிமுக ஆட்சி கவிழ அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவந்தாலும், எவ்வளவு நாளுக்கு இந்த உறுதி இருக்கும் என்று சொல்ல முடியாது.

TTV Dinakaran comeback - CM Palanisamy

யார் காரணம்?

இந்த நிலை ஏற்படுவதற்கு, அதிமுக அமைச்சர்களைத் தவிர வேறு யாரைக் காரணமாகச் சொல்ல முடியும்? ஜெயலலிதா மறைந்த பின் சசிகலாவின் பாதம் பணிந்தார்கள். அவரைப் பொதுச் செயலாளராகவும் ஆக்கினார்கள். சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பதாக அறிவித்தவுடன் அதுவரை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் விலகிச் சென்றார். அப்போதும் இவர்கள் சசிகலா பக்கமே இருந்தார்கள். சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால்தான் இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கிறார். சசிகலாவின் இடத்தில் துணைப் பொதுச்செயலாளராக அவரது உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக தினகரன் நியமிக்கப்பட்டபோது அதையும் இவர்கள் மறுப்பேதும் இன்றி ஏற்றுக்கொண்டனர். அவர் தலைமையில் சில மாதங்கள் கட்சி இயங்கியது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார் தினகரன். அதன் மூலம் அவர் முதல்வர் பதவியைப் பெற முயற்சிக்கிறார் என்று அரசியல் அரிச்சுவடி அறிந்த அனைவரும் கருதினர். அதையும் இந்த அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.

TTV Dinakaran comeback - OPS

தினகரனின் தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்கள், அவரைக் கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்ததற்கு அவர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டு மட்டும்தான் காரணம் என்றால் குழந்தைகூட நம்பாது. தினகரனுக்கு எதிரான விசாரணை நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி அதிமுக அமைச்சர்களோ எம்.எல்.ஏ.க்களோ கேள்வி எழுப்பவில்லை. அவர் லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால் அவரிடமிருந்து லஞ்சம் வாங்க முயன்றவர் யார் என்ற கேள்வியையும் எழுப்பவில்லை. அதைப் பற்றி ஒரு சிறு விமர்சனம்கூட வெளியேவரவில்லை.

பன்னீர்செல்வம் அணி மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் வலுத்துவருகையில் தாங்களும் மத்திய அரசுக்கு இணக்கமானவர்கள்தான் என்று காண்பித்துக்கொள்ளும் போட்டியிலேயே இவர்கள் தினகரனைக் கழற்றிவிட்டார்கள் என்ற சந்தேகம் ஒதுக்கத்தக்கதல்ல.

இப்போது தினகரன் பிணையில் வெளிவந்து கட்சித் தலைமையைக் கையிலெடுக்க முயலும் நிலையில் அவர் மீதான வழக்கு எப்படி நகர்கிறது என்பதைப் பொறுத்தே அதிமுகவின் எதிர்காலமும் மீதமுள்ள அதன் நான்கு ஆண்டு கால ஆட்சியின் தலையெழுத்தும் அமையும்.

Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment