உதயநிதி ஸ்டாலின் திடீர் அரசியல் மூவ் : ஏன் வருகிறார்? எப்போது வருவார்?

உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியல் என்ட்ரி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் இப்போது வர வேண்டிய தேவை திமுக.வில் இருக்கிறதா? என்பது தொடர்பான அலசல் இது!

By: January 23, 2018, 7:59:22 PM

ச.செல்வராஜ்

உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியல் என்ட்ரி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் இப்போது வர வேண்டிய தேவை திமுக.வில் இருக்கிறதா? என்பது தொடர்பான அலசல் இது!

உதயநிதி ஸ்டாலின், அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘எப்போதும் நான் அரசியலில் இருந்தே வந்திருக்கிறேன். கடந்த 6 ஆண்டுகளாக எனது படத்திற்கு தொல்லைகள் வருகிறது என்றால், நான் அரசியலில் இருக்கிறேன் என்றுதானே அர்த்தம்?’ என கேட்டிருக்கிறார். இன்னொரு கேள்விக்கு, ‘ரஜினி, கமல் வருகிறார்கள். நானும் அரசியலுக்கு வரும் நேரம் வந்துருச்சு’ என்கிறார். தவிர, ‘எனது தந்தை அழைத்தால், உடனே வருவேன். ஆனால் அவர் அழைக்க மாட்டார்’ என்கிறார்.

ஆனாலும் திமுக உடன்பிறப்புகள் மத்தியில், உதயநிதியின் பேட்டி பரவலாக ‘டாக்’ ஆகியிருக்கிறது. தமிழ்நாடு அரசியலுக்கு எதிர்பார்க்கப்பட்ட முகம்தான் உதயநிதி! ஏன் அவரது மகன் இன்பாவையும்கூட உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் உதயநிதிக்கு அரசியல் ஆசையே இல்லை என ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும்.

Udhayanidhi Stalin Political Entry, When and Why திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்

திமுக.வில் கருணாநிதியின் ஆளுமை ஓங்கியிருந்த தருணம் அது! அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் என ஸ்டாலினைத் தவிர்த்தும் திமுக.வின் பெரிய குடும்பத்தில் மட்டுமே அரை டஜனுக்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் இருந்தன. அப்போது ஸ்டாலின் நினைத்த விஷயங்களையே திமுக.வில் அமல்படுத்த முடியவில்லை.

அந்தத் தருணத்தில்தான், ‘40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் எங்க அப்பாவாலேயே இன்னும் தலைமைப் பொறுப்புக்கு வர முடியவில்லை. நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்?’ என உதயநிதி விரக்தி ப்ளஸ் வெறுப்பில் இருப்பதாக பேசப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய மாநாடுகளில் கருணாநிதியின் மொத்த குடும்பத்தினரும் பங்கேற்றாலும்கூட, உதயநிதி மட்டும் எங்காவது வெளிநாட்டில் சினிமா டூயட் பாடிக்கொண்டிருந்தார். இதுவும் அவருக்கு அரசியல் ஆர்வம் இல்லை என பேசப்பட காரணம்!

2011-க்கு பிறகும் இளைஞர் அணி நிர்வாகியாக (60 வயதைக் கடந்து) ஸ்டாலின் தொடர்ந்தது சர்ச்சை ஆனது. அப்போதாவது உதயநிதியை அந்தப் பொறுப்புக்கு ஸ்டாலின் கொண்டு வருவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்டாலினை உரிமையுடன் ‘அப்பா’ என அழைக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞரணி மாநில துணைச் செயலாளராக கட்சிக்குள் நுழைந்தார்.

அன்பில் மகேஷ், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் மட்டுமல்ல, உதயநிதியின் நண்பரும்கூட! 2016 சட்டமன்றத் தேர்தலிலும் மகேஷ் நின்று ஜெயித்தார். உதயநிதி அரசியலை விரும்பாத காரணத்தாலேயே, அவரது நண்பருக்கு முக்கியத்துவம் கிடைப்பதாகவும் அப்போது பேசப்பட்டது.

Kanimozhi, Udhayanidhi Stalin Political Entry கனிமொழி, நிகழ்ச்சி ஒன்றில்!

ஆனால் உதயநிதி இப்போதைய பேட்டி உணர்த்துவது, அன்பில் மகேஷ் ‘நைட் வாட்ச்மேன்’ ரோலையே மேற்கொள்கிறார் என்பது! (நைட் வாட்ச்மேன் என்பது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அன்றைய ஆட்டம் முடிகிற வேளையில் விக்கெட் விழுந்தால் சில ஓவர்களை கடத்திவிட்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்படும் கடைசிநிலை பேட்ஸ்மேன்).

ஓ.கே! இப்போது அடுத்த கேள்வி, அன்பில் மகேஷின் நைட் வாட்ச்மேன் ரோல் முடிகிறதா? அதனால்தான், ‘அரசியலுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டதாக’ வெளிப்படையாக உதயநிதி பேட்டி கொடுத்திருக்கிறாரா? அந்த அளவுக்கு உதயநிதிக்கான தேவை இப்போது என்ன? ரஜினியும், கமலும் வருவதையும் தனது பேட்டியில் உதயநிதி கோடிட்டுக் காட்டுவதை இங்கு கவனிக்க வேண்டும்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதால், திமுக தனது வாக்கு வங்கியை சற்றே இழக்க வேண்டியிருக்கும். அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு நடிகராக தனது பங்களிப்பு திமுக.வுக்கு இப்போது உதவும் என உதயநிதி கணித்திருக்கலாம். தவிர, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெப்பாசிட் இழந்து, திமுக முன்னணியினரே சோர்ந்து போயிருக்கும் வேளை இது!

மு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்ட, ‘நமக்கு நாமே’ பயணத்தை கிடப்பில் போட்டுவிட்டு, கட்சி நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அழைத்து பேச முன் வந்திருப்பது அந்த சோர்வை போக்கவே! ஆனால் ஸ்டாலினைப் பொறுத்தவரை, இன்னமும் திமுக.வில் தனக்கு பிடித்தமானவர்களிடம் மட்டுமே நெருக்கமானவராக இருக்கிறார். இன்னும் புரியும்படி சொல்வதானால், கட்சிக்கு தலைவர் என்பதைவிட கோஷ்டி தலைவர் இமேஜ் தூக்கலாக இருக்கிறது.

முன்பெல்லாம் திமுக.வில் ஸ்டாலினால் கண்டு கொள்ளப்படாதவர்கள், அழகிரி பக்கம் ஒதுங்கினார்கள். இப்போது அந்த ஆப்ஷன் இல்லை. எனவே அவர்கள் ரஜினி, கமல் என கழன்றுவிட வாய்ப்பு உண்டு. அவர்களை இழுத்துப் பிடிக்க இப்போது உள்ளே நுழைய வேண்டிய அவசியம் இருப்பதாக உதயநிதி கருதியிருக்கலாம்.

இவற்றையெல்லாம்விட, உதயநிதி வட்டாரம் மிரட்சியுடன் பார்ப்பது கனிமொழியை! 2ஜி வழக்கில் விடுதலை ஆனபிறகு கனிமொழிக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. வழக்கில் விடுதலை ஆனது மட்டும் அந்த வரவேற்புக்கு காரணம் அல்ல. ஸ்டாலினின் பலவீனமான சில செயல்பாடுகள், கனிமொழிக்கு பிளஸ் ஆகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக ஆட்சியில் வரலாறு காணாத குழப்பங்கள் அரங்கேறினாலும், ஆட்சிக்கு இன்று வரை ஆபத்து நேரவில்லை. 89 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தும் ஸ்டாலின் இதில் கையறு நிலையில் நிற்பதாக விமர்சனங்கள் வருகின்றன.

சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் இது தொடர்பாக திமுக எடுத்த முயற்சிகள் ஜெயிக்கவில்லை. ஆர்.கே.நகரில் முழு உத்வேகத்தை காட்டியிருந்தால், மக்கள் மன்றத்திலாவது பலத்தை நிரூபித்ததுபோல ஆகியிருக்கும். அதையும் திமுக செய்யவில்லை. இதெல்லாம் ஸ்டாலின் மீது திமுக.வினரே கடும் விமர்சனங்களை வைக்க காரணம் ஆகியிருக்கின்றன.

அண்மையில் ஸ்டாலின் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘தளபதி, நீங்க நிர்வாகிகள் கூட்டம் முடிந்து போகும்போது செல்போனை பார்த்துக் கொண்டிராமல், கூட்டத்தைப் பார்த்து கை காட்டுங்க’ என்றார் தென் மாவட்ட நிர்வாகி ஒருவர்! வட மாவட்ட நிர்வாகி ஒருவரோ, ‘எப்போதும் உங்களைச் சுற்றியிருக்கும் 4 பேரை மட்டுமே காரில் ஏற்றிக்கொண்டு செல்வதை நிப்பாட்டுங்க. 300 கி.மீ தூரத்தில் இருந்து உங்களைப் பார்க்க வருகிற நிர்வாகியையும் ஒருநாளாவது உங்க காரில் ஏற்றுங்க’ என்றார். ஆர்.கே.நகரில் சிம்லா முத்துச்சோழனை வேட்பாளராக நிறுத்தாததையும் கடுமையாகவே சுட்டிக் காட்டினர்.

ஒரு வகையில் இதை ஜனநாயகம் என மெச்சிக் கொண்டாலும், ஸ்டாலினின் செயல்பாடுகள் மீது நிர்வாகிகள் பலருக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்தக் குமுறல்கள் அமைந்தன. கருணாநிதியின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் அவர் எதிர்கொள்ளாத தோல்விகள் இல்லை. ஆனால் எந்தத் தோல்விக்கும் அவரை ஒரு காரணமாக யாரும் சுட்டிக்காட்டியது இல்லை என்பது மட்டுமல்ல, அப்படியொரு எண்ணமே யாருக்கும் வந்தது இல்லை. ஸ்டாலினின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே இந்த நிகழ்வுகளை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள். ஸ்டாலினின் அடுத்தடுத்த தோல்விகள், திமுக.விலேயே மாற்றுத் தலைமை குறித்த விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. அப்படி மாற்று தேடுகிறவர்களின் இயல்பான சாய்ஸ், கனிமொழி!

கனிமொழியின் சி.ஐ.டி. காலனி இல்லம் அதிகார மையமாக மாறுவதை சித்தரஞ்சன் சாலை இல்லம் அவ்வளவு சவுகர்யமாக உணராது என்பது எதார்த்தமே! இந்தப் பின்னணிதான் உதயநிதியை அரசியலை நோக்கி அவசரமாக தள்ளுவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஸ்டாலினின் அரசியலை வடிவமைத்துக் கொண்டிருக்கும் பலரே, உதயநிதியின் இந்த அவசர ‘என்ட்ரி’யை விரும்பவில்லை என்பதுதான் இன்னொரு வேடிக்கை! காரணம், உதயநிதி முழுநேர அரசியலுக்கு வந்து அதிகார மையமாக உருவானால், ஸ்டாலினை சுற்றியிருக்கும் இப்போதைய அதிகார மையத்திற்கு நெருடல்கள் ஏற்படலாம் என்பதே அதற்கு காரணம்.

ஆனால் என்னதான் உதயநிதி தயாராக இருந்தாலும், ஸ்டாலின் இந்தத் தருணத்தில் உதயநிதியை அனுமதிக்க மாட்டார் என்பதே அறிவாலய வட்டாரம் கூறும் தகவல்! காரணம், ஸ்டாலினே கட்சிக்குள் விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணம் இது! இப்போது தனது வாரிசையும் உள்ளே நுழைத்தால், கட்சிக்கு வெளியேயிருந்து வரும் விமர்சனங்கள் கட்சியின் இமேஜை இன்னும் ஆழமாக அசைத்துப் பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது.

இதை தெரிந்தேதான் உதயநிதியும், ‘எனது தந்தை அழைத்தால் வருவேன். ஆனால் அவர் அழைக்க மாட்டார்’ என கூறுகிறார். அதேசமயம் தனது தாயார் துர்கா, ‘நீ ஏன் சினிமா, சினிமான்னு சுத்துற. அப்பாகூட இரு’ என சொல்வதாக உதயநிதி பேட்டியில் கூறுகிறார். துர்காவின் விருப்பம் அதுவாக இருக்கலாம். இன்னொரு வெற்றியை திமுக பெறுவதற்கு முன்பு உதயநிதியை நுழைப்பது, பொதுத்தளத்தில் திமுக.வுக்கு மேலும் பின்னடைவை உருவாக்கவே செய்யும். இதை ஸ்டாலின் உணர்ந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Udhayanidhi stalin political entry when and why

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X