டி.கே.எஸ்.இளங்கோவன்
நரேந்திர மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்கிற முன்னோட்டத்துடன் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மத்திய பட்ஜெட் 2018, ஏமாற்றங்களையே பரிசாக தந்திருக்கிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வாசித்து அளித்த மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பத்தினருக்கு ஹெல்த் ஸ்கீம் அறிவிக்கப்பட்டிருப்பதையே பெரிய சாதனையாக அந்தக் கட்சியினர் விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தையும்கூட எப்படி செயல்படுத்தப் போகிறார்கள்? என்பதற்கு எந்த விவரமும் பட்ஜெட்டில் இல்லை.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலமாக நடத்தப் போகிறார்களா? மாநில அரசு மூலமாக நடத்தப் போகிறார்களா? அல்லது, மத்திய அரசு மூலமாகவே நடத்துவார்களா? அந்த அளவுக்கு மத்திய அரசு மருத்துவமனைகள் நாட்டில் இருக்கின்றனவா? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். பெயரளவுக்கு மக்கள் தொகை எண்ணிக்கையையும், பெரும் தொகையையும் அறிவித்துவிட்டால் அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விடுமா? இதே மத்திய அரசு கடந்த காலங்களில் ஆரவாரமாக அறிவித்த ‘ஜன்தன் வங்கிக் கணக்கு’ உள்பட பல திட்டங்கள், அவர்களின் அறிவிப்புக்கு ஏற்ப நடக்கவில்லை.
2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவோம் என அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? என கூறவில்லை. இதென்ன ஜீபூம்பா வேலையா? விவசாயிகளின் வருமானத்தைக் கூட்டவேண்டும் என்றால், அடுத்த ஆண்டுக்குள் 20 சதவிகிதத்தை உயர்த்துவோம்; அதற்கடுத்த ஆண்டில் 30 சதவிகிதம் உயர்வை எட்டுவோ; என சாத்தியக்கூறுகளை சொல்ல வேண்டுமா, வேண்டாமா?
வெறும் ஷேர் மார்க்கெட், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வளர்ச்சி என்பது தேசத்தின் வளர்ச்சி ஆகிவிடாது. தனி மனித வருவாய் உயர வேண்டும். மக்கள் மத்தியில் மயக்கத்தை ஏற்படுத்துகிற அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட்டில் இருக்கின்றன. முறையான திட்டங்கள் இல்லை.
இன்னொன்று, கடந்த 4 ஆண்டுகளாக கூறிய எதையும் இவர்கள் செய்யவில்லை. எனவே இப்போது இவர்கள் கூறுகிற அம்சங்களை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முன்பாவது மாநில திட்டக்குழு இருந்தது. மாநில வரி வருவாயை வைத்தாவது, ஓரளவு திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. இப்போது அதுவும் இல்லை.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதை நாட்டின் வளர்ச்சியாக பாஜக.வினர் சுட்டிக் காட்டுவதைப் பார்த்தால் சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை. யாரையும் மிரட்டி, பான் கார்டு பெற வைத்து வரி செலுத்துவோர் பட்டியலில் சேர்த்துவிட முடியும். பெட்டிக்கடைக்காரரை கூட நீங்கள் மிரட்டினால், பான் கார்டு வாங்கி விடுவார்.
அதன்பிறகு அவருக்கு வருவாய் எவ்வளவு கூடுகிறது? அவரால் வரி கட்ட முடிகிறதா? என்பதை பார்க்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் நாடு வளர்ந்துவிட்டது? என்பதை யார் நம்புவார்கள்? காகித ஓடத்தை வைத்து, மக்கள் பயணிக்க முடியாது என்பதை இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசு உணர வேண்டும்.
(கட்டுரையாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக செய்தி தொடர்பு செயலாளர்; மாநிலங்களவை உறுப்பினர்.)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.