பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு பற்றி உ.பி. முதல்வருக்கு அக்கறையா?

கைரனா இடைத்தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் இஸ்லாம் மற்றும் தலித்கள் மத்தியில் இருக்கும் நல்லுறவினை சீர்குலைக்கும் வகையில் யோகி பேச்சு....

ஃபைஜான் முஸ்தபா 

இந்திய வரலாற்றில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை எதிர்த்தவர்கள் யார் என்றால் இந்த இந்துத்துவ அமைப்பில் இருந்தவர்கள் தான். அவர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினையும், அதனால் கிடைக்கப்பெறுகின்ற சமூக மாற்றத்தையும், தாழ்த்தப்பட்ட மக்கள் அடைகின்ற நன்மையையும் அவர்கள் என்றுமே விரும்பியதில்லை என்பது அப்பட்டமான உண்மை. 2015 பிகார் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ் தலைமை மோகன் பகவத்  “இடஒதுக்கீட்டு திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்” என்று கூறினார். ஆனால் அதிக அளவு தலித் சமூகத்தினர் வாழும் பகுதியிலும் பாஜக போட்டியிட்ட காரணத்தால், மோகன் கூறிய கருத்தில் இருந்து விலகி நின்றது பாஜக.

நடைபெற்று முடிந்த கைரானா இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலிகார் பல்கலைக்கழகம் மற்றும் ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு தருதல் தொடர்பாக சர்ச்சையான வகையில் பேசியிருக்கின்றார். மோடி ஆட்சியின் கீழ், ராம் விலாஸ் பஸ்வானைக் கொண்டு மாயாஜாலமான திட்டங்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பதோடு சரி. ஆனால் எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றியோ, பல்கலைக்கழங்கள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டினை அதிகரிப்பது குறித்தோ இது நாள் வரை யாரும் பேசியதே இல்லை. குஜராத் போன்ற, பாஜகவின் ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களில் தலித்துகள் மீது எக்கச்சக்க தாக்குதல்கள் நடைபெற்று வருவதையெல்லாம் யோகி அறிந்திருக்கின்றாரா என்பதெல்லாம் வெறும் கேள்விகள் தான்.

இந்திய அரசியல் சாசனப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15% இட ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 7%மும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  ஆனால் 100 கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களில் 7 பேராசிரியர்கள் மட்டுமே எஸ்சி/எஸ்டி வகுப்புகளில் இருந்து வந்தவர்கள். 1,02,000 அல்லது 7.22%வினர் மட்டுமே 1.4 மில்லியன் ஆசிரியர்களில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். தலித் பற்றிய அக்கறையோடு யோகி பேசியிருப்பாரானால், அவர் இந்நேரம், அவருடைய ஆட்சிப்பகுதிக்கு கீழ் இருக்கும் பல்கலைக்கழங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப உத்தரவிட்டிருக்க வேண்டும். அலிகார் மற்றும் ஜமியா கல்வி நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. வாரணாசி இந்து பல்கலைக்கழகமோ இடஒதுக்கீட்டினை அரசு வரம்புகளுக்கு உட்பட்டு ஒரு போதும் தலித்துகளுக்கு இடம் ஒதுக்கியது கிடையாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 30ன் படி, மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மை அமைப்புகள் அவர்களின் விருப்பம் போல், அவர்களுடைய கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொள்ளலாம். அதன்படி பார்த்தால் இந்தியும் கூட சிறுபான்மையினர் பேசும் மொழி என இந்திய அரசியலமைப்புச் சட்டம் 30 தெரிவிக்கின்றது. உத்திரப் பிரதேச இந்துக்கள் தமிழகத்தில் ஆரம்பித்த இந்தி கல்வி நிறுவனமும் கூட சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனம் தான். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் இந்தியும் இந்துக்களும் மைனாரிட்டிகள் என்பதை யோகி உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 15(S)ன் படி, சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டு முறைக்கு விலக்கு அறிவிக்கப்பட்டதாக கூறுகின்றது. அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அச்சமயம் எந்த ஒரு பாஜக உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 381 பேர் இருந்த லோக்சபையில் 379 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இது தொடர்பாக ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், இந்திய அரசியல் அமைப்புப் படி, சிறுபான்மையினர் தங்களுடைய கல்வி நிறுவனங்களை தங்களுக்கு தக்கவாறு வடிவமைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றம், சிறுபான்மையினரின் உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அங்கமாக திகழ்கின்றது அதனால் அவர்களின் உரிமையினை எக்காரணம் கொண்டும் பறிக்க இயலாது என்று குறிப்பிட்டிருக்கின்றது. 1968ல் அஜிஸ் பாஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் “கல்வி நிறுவனங்கள் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரும் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களாகவும் இருக்கலாம், அது சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனமாகவும் இருக்கலாம். சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனம் என்றால், அவர்களுக்குத்தான் அங்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்கள் இயங்கிக் கொண்டுதான் வருகின்றன.

அலிகார் மற்றும் ஜமியா போன்ற கல்வி நிறுவனங்கள் யாவும் அரசு உதவியுடன் இயக்கப்படும் கல்வி நிறுவனங்கள் தான். அக்காரணத்திற்காக அதன் இயல்பு நிலையில் இருந்து மாறி செயல்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2005ம் ஆண்டு, சிறுபான்மை கல்வி நிறுவனம் என்று அலிகார் பல்கலைக்கழகத்தை அடையாளப்படுத்தியதோடு, அதன் இடஒதுக்கீட்டுக் கொள்கையில் யாரும் தலையிடக் கூடாது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்திருக்கின்றது. சிறுபான்மையினரால் அமைக்கப்படும் கல்வி நிறுவனங்கள் அவர்களின் வளர்ச்சிக்காக அவர்களின் பணம், முதலீடு, நிலம் ஆகியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்படுகின்றது. அதில் அம்மக்களுக்கே அதிக முன்னிரிமை அளிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை தான்.

1991ல் இருந்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50% மட்டுமே அம்மக்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2003ல் அந்நிலை மாறி, 50% மேலாகவே சிறுபான்மையினர் அவர்களின் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு சட்டங்கள் அனுமதித்தது. எடுக்கப்படும் பாடப்பிரிவு, தேவைகள் பொறுத்து அந்த இட ஒதுக்கீடு மாறுபடலாம் என்றும் கூறியிருக்கின்றது அச்சட்டத் திருத்தம்.

93வது சட்டத்திருத்தத்தின் படி, ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் 50% இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கும், மீதம் இருக்கும் 50% இட ஒதுக்கீடு பொதுக் கோட்டாவினருக்கும் சென்றுவிடும் என்பதால் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு இக்கல்வி நிலையங்களில் வாய்ப்பில்லை. ஏற்கனவே அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீடு கிடையாது. மேலும், அப்பல்கலைக்கழகம் வழங்கும் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இந்துக்களே அதிகம் படிக்கின்றார்கள். யோகி அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிக அக்கறை இருக்கும் பட்சத்தில் பாஜக ஆட்சியிடம் முறையிட்டு, தனியார் கல்வி நிறுவனங்களில் தலித்திற்கான இடஒதுக்கீட்டினை அதிகரித்து தரச் சொல்லிக் கூறலாம். அதே நேரத்தில், அலிகார் மற்றும் ஜமியா போன்ற கல்வி நிறுவனங்களில் எஸ்.சி/எஸ்.டிக்கான இட ஒதுக்கீட்டினை அதிகரித்து சமூகத்தின் வளர்ச்சிக்காக உதவுவோம்.

ஹைதராபாத் NALSAR  சட்டப் பல்கலைக்கழக்த்தின் துணை வேந்தர் ஃபைஜான் முஸ்தபா, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக 27/06/2018 அன்று எழுதிய கட்டுரை

தமிழில் நித்யா பாண்டியன்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close