Ramesh Chand
அ.வைத்தியநாதன் (1931-2020)
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முதல் தலைமுறை பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான வைத்தியநாதன் கடந்த வாரம் காலமானார். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பசி ஒழிப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கொள்கைகளை வகுத்தார். சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்க பி.எஸ் மின்ஹாஸ், வி.எம் தண்டேகர், கே.என் ராஜ், சி.எச் ஹனுமந்த ராவ் போன்றோருடன் இவர் பணியாற்றினார்.
நாட்டில் பொதுவாக புறக்கணிக்கப்பட்ட, இந்தியாவின் முதுகெலும்பான கிராமப்புற வேளாண்மை பொருளாதாரத்தில் வைத்தியநாதன் அதிக கவனம் செலுத்தினார்.
சேலம், வேலூர் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த அவர் லயோலா கல்லூரியில் வணிகத் துறையில் பயின்று, பின்னர் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியாவில் கால்நடைப் பொருளியல் பற்றிய ஆய்வுகளுக்கும் வைத்தியநாதன் முன்னோடியாக திகழ்ந்தவர்.
கார்னெல் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முடித்த பின்னர், 1956 ஆம் ஆண்டில் தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (என்.சி.ஏ.இ.ஆர்) தனது பணியைத் வைத்தியநாதன் தொடங்கினார். பின்னர், 1962 முதல் 1972ம் ஆண்டு வரை, முந்தைய இந்திய திட்டக் குழுவின் திட்டமிடல் பிரிவில் பணியாற்றினார். பின்னர், கேரளாவின் திருவனந்தபுரம், திருவனந்தபுரம்; பல்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பில் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முன்பு உலக வங்கியில் பணியாற்றினார். அவர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சென்னையின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸில் கழித்தார். அங்கு, அவர் ஏராளமான மாணவர்களுக்கு வழிகாட்டினார். டெல்லியில் திட்டக் கமிஷனின் உறுப்பினராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையத்திலும் பணியாற்றினார்.
வைத்தியநாதன் கிராமப்புற உழைப்பு, நீர் மேலாண்மை, விவாசயக் கடன், வேளாண் கூட்டுறவு போன்ற இந்திய விவசாயத்தின் அனைத்து முக்கிய அம்சங்களை பற்றியும் விரிவாக எழுதினார். நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள மேலாண்மை குறித்த அவரின் பணி, அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு களம் அமைத்து கொடுத்தது. சிறு உரிமையாளர்கள் நிதி நிறுவனங்கள் மூலம் பயன் பெற வேண்டும் என்ற அக்கறை கொண்டிருந்ததால் அவர் கூட்டுறவு கடன் கட்டமைப்பின் வலுவான ஆதரவாளராக இருந்தார். வைத்தியநாதன் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பல உயர்மட்ட குழுக்கள் மற்றும் நிபுணர் குழுக்களின் உறுப்பினராக (அ) தலைவராக பணியாற்றினார். புகழ்பெற்ற வேளாண் வருமான வரிவிதிப்பு தொடர்பான கே.என் ராஜ் குழுவில் (1969-70) உறுப்பினராக இருந்தார். 2004 ஆம் ஆண்டில் கூட்டுறவு கடன் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கான பரிந்துரைக்குழுவின் தலைவராக செயல்பட்டார். இதன் அறிக்கை கூட்டுறவு கடன் முறையை வலுப்படுத்தும் ஒரு மதிப்புமிக்க வழிகாட்டியாக செயல்படுகிறது. நீர்ப்பாசனத்தின் விலை நிர்ணயம் தொடர்பான வைத்தியநாதன் குழு அறிக்கையின் (1992) பரிந்துரைகள், இந்தியாவின் நீர் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கித் தருகின்றன.
10 வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் விவசாயத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக, வைத்தியநாதனுடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த குழுவுக்கு ஹனுமந்த ராவ் தலைமை தாங்கினார். அறிக்கையை உருவாக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. விவசாயத்தில் 4 சதவீத வளர்ச்சி அடைவதற்கான அடிப்படைக் கட்டமைப்பை பரிந்துரைப்பதே குழுவின் நோக்கமாகும். இலக்கை அடைவதற்கான தேவைப்படும் அளவுகோலை நிர்ணயிப்பதில் ஹனுமந்த ராவ் அளித்த நுண்ணறிவுகளையும்,வைத்த்யனாதன் அளித்த வழிகாட்டுதலையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
வைத்தியநாதன் இந்திய வேளாண் பொருளாதார அமைப்பின் தலைவராக அதன் பொறுப்புகளை ஒன்பது ஆண்டுகள் நிர்வகித்தார். மேலும், எந்தவொரு அர்த்தமுள்ள பொருளாதார முடிவுக்கும், தரவின் நம்பகத்தன்மை முக்கியத்துவம் வாய்ந்தத எனக் கருதியதால், புள்ளிவிவர அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்த முயன்றார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவர (குறிப்பாக விவசாயம்) தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து அதிக அக்கறை கொண்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு அவர் தலைமை தாங்கிய வேளாண் புள்ளிவிவரங்களுக்கான நிபுணர் குழுவின் அறிக்கையில் இந்த கவலைகளை அவர் எடுத்துரைத்தார். விவசாய வளர்ச்சி, நீர்வளம், கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் கால்நடைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதற்காக விவசாய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் வைத்தியநாதன் அன்புடன் நினைவுகூரப்படுவார்.
கட்டுரை ஆசிரியர் நிதி அயோக் உறுப்பினர் ஆவார்.