வைரமுத்து - சின்மயி சர்ச்சை: மயில் பீலியல்ல... மலப்புரம் கத்தி!

வைரமுத்துவின் கிரீடத்தில் சின்மயி சொருகியது மயில் பீலியல்ல... மலப்புரம் கத்தி!

க.சந்திரகலா

அந்தி மயங்கும் பொழுதை அரை சோம்பலோடு கடந்து போய் கொண்டிருந்த நமக்கு, ‘ பொன்மாலைப்பொழுது….இதுவொரு பொன்மாலைப்பொழுது என விபூதி தொட்டு விளக்கிய வெண்கல விளக்காய், ஜொலிக்கிற வார்த்தைகளை தேடியெடுத்து பாடல் தந்த கவிஞர் வைரமுத்துவின் பொழுது இப்படி விடிந்திருக்கக் கூடாது.

சந்தன ஊதுபத்தி சரிந்து ஒரு நந்தவனம் தீப்பிடித்த கதையை ஊர் கிழவிகள் சொல்ல கேட்டதுண்டு. இப்போது அதை திகிலுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. கவிதை சிறகசைத்துப் பறக்கும் கறுப்பு ராஜாளி வைரமுத்து ‘நிழல்கள்’ தந்த நிஜ கவிஞன். தன்னை கண்ணாடியில் பார்த்து அழகு செய்ததை விட தமிழ் மொழியை அழகு செய்வதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டவர்.

மனம் கனக்க, மடி கனக்க, மகள் வயிற்று பேத்தியை தூக்கிச் சுமக்கும் கிராமத்து மனிதனைப்போல, தமிழ்மகளை தூக்கிச் சுமந்தவரின் தோளில் ஒரு பழைய பழி இப்போது தூசிதட்டி தூக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

வட இந்திய நடிகர்களில் வள்ளலென கொண்டாடப்படுபவர் நானா படேகர். பல வருடங்களுக்கு முன்பு இவருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை தனுஸ்ரீ தத்தா நடன அசைவுகளின் போது படேகர் அத்துமீறினார் என ‘ மீ டூ’ ஹேஸ்டேக்கில் ஒரு குற்றச்சாட்டை பதிவிட்டார். எண்ணெய்கிணற்றை விட எளிதில் பற்றியெரிந்தது இணைய தீ .

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த வெடி தமிழகத்தில் பற்றவைக்கப்பட்டது. கொளுத்திப் போட்டவர், நேயர் விருப்பத்துக்கு காட்டுக்குயில் கடிதமெழுதி கேட்கும் குரலுக்கு சொந்தக்காரர் பாடகி சின்மயி.

கவிதையாகட்டும், திரையிசை பாடலாகட்டும், கட்டுரையோ, நாவலோ எதுவாகட்டும் அந்தந்த துறைகளின் உயரிய விருதுகளை அடுத்தடுத்து வாங்கி குவித்த வைரமுத்துவின் கிரீடத்தில் சின்மயி சொருகியது மயில் பீலியல்ல… மலப்புரம் கத்தி!

புளிப்பானையில் போட்டு வைத்தாலும் தகதக க்கும் தங்கம்போல் வைரமுத்து மிளிர்ந்த நேரம். 2004 ம் வருடமென சொல்ல கேள்வி. இசை நிகழ்ச்சிக்காய் ஸ்விஸ் தேசத்துக்கு சென்ற இடத்தில் வைரமுத்து சின்மயியை வேறுவிதமாய் அணுகினார் என்பது குற்றச்சாட்டு.

மீ டூ வில் எப்போதோ நடந்த நிகழ்வையும் பதிவிடலாம், நிவாரணம் தேடலாம், பழிவாங்கலாம், முகமூடியை கிழிக்கலாம் என்பது நாகரிக சமூகத்தின் விதியாகிப்போனதால் 14 வருடத்துக்கு முந்தைய வன்மத்துடன் வந்த சின்மயி பாலியல் பாறாங்கல் எறிந்து வைரமுத்துவின் பிம்பத்தை உடைக்க முனைந்திருக்கிறார்.

எதற்காக இப்போது இப்படியொரு குற்றச்சாட்டு? வெளிநாட்டு கலை நிகழ்ச்சியை வேறு விதமாக பயன்படுத்த வைரமுத்து நினைத்திருந்தால் அது எந்த வகையிலும் ஏற்கதக்கதல்ல.. மாறாக அந்த நிகழ்வின் போது சின்மயி தாயாரும் உடனிருந்திருக்கிறார். ஏன் அமைதி காத்தார்கள்? கஞ்சி போட்டு விறைப்பேற்றிய காலரில்லா ஜிப்பாவைப் பிடித்து நாலு கேள்வி கேட்டிருக்க வேண்டுமா இல்லையா?.

சரி. வெளிநாடு, தெரியாத இடம். விமானம் விட்டிறங்கி வீட்டுக்கு வந்ததும், போன இடத்தில் மானத்தை விலை பேசப் பார்த்தார் இந்த வைரமுத்து என காவல் துறையிடம் முறையிட்டு அவரது முகத்திரையை கிழித்திருக்க வேண்டாமா இல்லையா? ஏன் அந்நேரம் அப்படியொரு அமைதி?!!

சில வருடங்கள் கழித்து நடந்தேறுகிறது சின்மயி திருமணம். அழைப்பின் பேரில் வருகிறார் வைரமுத்து. விழுந்து விழுந்து வரவேற்ற கையோடு காலில் விழுந்து ஆசி வாங்குகிறார்கள். மனதுக்குள் கவிதை மாத்திரமல்ல… மிருகமும் வளர்ப்பவர் இந்த வைரமுத்து என்று அறிந்த பின்னரும், ஆசி வழங்குகிற தகுதியை அவருக்கு தந்திருக்கிறார்களே.. அதெப்படி?

உயர்ந்த மனிதரென்று நம்பியவர் சிறந்த மனிதரல்ல என அடையாளம் காட்டுவதுதான் நோக்கமெனில் 14 வருடத்துக்கு முன்பே பொதுவெளியில் சொல்லியிருக்கலாம். நீங்கள் சொல்வது போல பல பெண்களுக்கு அது பாதுகாப்பாக இருந்திருக்கும்.

அல்லாமல், அப்போது இந்த விவகாரத்தை சொல்வதற்கு தைரியம் இல்லை என்பதால் தான் இப்போது சொல்கிறார்கள் என்றால் இப்போது அந்த தைரியம் ‘ எங்கிருந்து’ வருகிறது? ஆண்டாள் குறித்த சர்ச்சையில் அசையாது நின்றவர், அரசியல் தளத்தில் ஓசையின்றி இயங்குபவர் எனபதாலோ என்னவோ அவரது பல்லக்கு நிறைய பழி ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

தன் மீது தார் ஊற்றும் முயற்சிக்கு வாய்திறந்த வைரமுத்து இந்த குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லுமென கூறுவது இந்த பிரச்னையிலிருந்து விலகி நழுவுகிற முயற்சி என பலரும் சொல்கிறார்கள். ஆதாரம் இல்லாமல் புகார் சொல்லவே 14 வருடம் தேவைப்படும் போது, அதற்கான விடை அறிய காலம் வரும் வரை காத்திருக்கத்தானே வேண்டும்.

(கட்டுரையாளர் க.சந்திரகலா, கவிதைகள் – சிறுகதைகள் – கட்டுரைகள் படைத்து வரும் இளம் எழுத்தாளர்)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close