Advertisment

அனைத்தும் வட மாநிலங்களுக்கே தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் இல்லை

இங்கு தயாரிக்கப்படும் ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு ரயிலை சென்னையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்று தென் மாநில மக்கள் கோரிக்கை வைத்தும் ரயில்வே துறை செவிசாய்க்கவில்லை.

author-image
WebDesk
New Update
Valavan writes opinion, All for North states, Vande Bharat Train not for south districts, Valavan Vande Bharat Train, அனைத்தும் வட மாநிலங்களுக்கே, தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் இல்லை, த வளவன் கட்டுரை, இந்தியா, தென் மாவட்டங்கள், south districts, tamilnadu

த. வளவன், மூத்த பத்திரிகையாளர்

Advertisment

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தேபாரத் ரயில் சென்னை – மைசூர் வழித் தடத்தில் நவம்பர் 11ஆம் தேதி இயக்கப்பட்டுள்ளது. மினி புல்லட் ரயில் என்று கூறப்படும் ரயில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் வட இந்தியாவில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது மொத்தம் நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் வந்தே பாரத் ரயில் புதுடெல்லி இருந்து வாரணாசிக்கு 2019 பிப்ரவரி 15-ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. இரண்டாவது வந்தே பாரத் ரயில் புதுடெல்லி – கத்ரா வழிதடத்தில் இயக்கப்பட்டது. இரண்டு வந்தே பாரத் ரயில்கள் வட இந்தியாவுக்கு சென்றுவிட்டன. மூன்றாவது ரயில் தென் இந்தியாவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதற்கு மாறாக குஜராத் தேர்தலை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் என்ற இடத்திலிருந்து மும்பைக்கு மூன்றாவது வந்தேபாரத் ரயில் இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து நான்காவது வந்தே பாரத் ரயில் ஹிமாச்சல பிரதேச தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள அன்தௌராவுக்கும் - டெல்லி இடையே இயக்கப்பட்டது. ஆக மொத்தம் நான்கு ரயில்களும் வட இந்தியாவுக்கு தான் ஒதுக்கப் பட்டுள்ளன. இத்தனைக்கும் இந்த வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகள் சென்னையில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு ரயிலை சென்னையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்று தென் மாநில மக்கள் கோரிக்கை வைத்தும் ரயில்வே துறை செவிசாய்க்கவில்லை.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் என்றால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை , தேனி, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் ஒரு சில இடங்களை அடக்கிய பகுதிகளை தென் மாவட்டங்கள் என்று பொதுவாகக் கூறலாம். இந்த தென்மாவட்டங்கள் ரயில்வே வளர்ச்சியிலும் ரயில்கள் இயக்கத்தில் மிகவும் பின்தங்கிய உள்ளன.

மாவட்ட வாரியாக 2011 கணக்கெடுப்பின் மக்கள் தொகை

கன்னியாகுமரி-18,70,374

திருநெல்வேலி , தென்காசி இணைந்து - 33,22,644

தூத்துக்குடி-17,50,176

விருதுநகர்- 19,42,288

மதுரை-30,38,252

ராமநாதபுரம்- 13,53,445

சிவகங்கை-13,39,101

தேனி- 12,45,899

திண்டுக்கல்- 21,59,775

புதுக்கோட்டை-16,18,345

கர்நாடகா தேர்தல்

நான்கு ரயில்கள் வட இந்தியாவில் தொடங்கப் பட்ட பின்னர் ஐந்தாவது ரயிலாக அறிவிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தெற்கு ரயில்வேயின் தென் மண்டலத்துக்கு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக தெற்கு ரயில்வேக்கு இது போன்ற அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டால் அது சென்னையை மையமாக வைத்து பெங்களூர் அல்லது கோயம்புத்தூர் இயக்கப்படும். அல்லது கேரளாவுக்கு இது போன்ற ரயில்கள் சென்றுவிடும். தற்போது சென்னயைலிருந்து பெங்களூர், கோவை என இரண்டு இடங்களுக்கும் பகல் நேரத்தில் போதிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற காரணத்தால் தென்மாவட்ட மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. தெற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த பெட்டியை வைத்து எந்த தடத்தில் இயக்கினால் சிறப்பாக இருக்கும், அதிக வருவாய் கிடைக்கும், எந்த தடத்தில் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், எந்த வழி தடம் அதிக பயணிகள் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது என்று பரிசீலித்து ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு ஒன்றுமே செய்யாமல் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அடுத்த வருடம் வருகின்ற கர்நாடகா தேர்தலை மனதில் வைத்து சென்னை –பெங்களுர் - மைசூர் தடத்தில் இயக்கும் என்று அறிவித்துவிட்டார்கள் இவ்வாறு இந்த தடத்தில் இயக்கினால் தமிழக பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது. தற்போது சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூருக்கு பகல் நேரத்தில் கீழ் கண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன

  1. சென்னை – மைசூர் சதாப்தி (6:00 மணி)
  2. சென்னை – பெங்களூர் டபுள் டக்கர் (7:25 மணி)
  3. சென்னை – பெங்களூர் பிருந்தாவனம் (07:40 மணி)
  4. சங்கமித்ரா ரயில் தினசரி (9:45)
  5. சென்னை – மைசூர் சூப்பர் பாஸ்ட் (13:35)
  6. லால்பார்க் தினசரி (15:30)
  7. சென்னை – பெங்களூர் சதாப்தி (17:30)

    இது தவிர பல்வேறு நெடுந்தூர வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது

சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலையில் புறப்படுமாறு இவ்வளவு ரயில்கள் இருக்கும் போது மீண்டும் வந்தே பாரத் ரயில் இந்த தடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில்கள் இல்லாமல் தமிழக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தேஜஸ் ரயிலை தவிர, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள் டக்கர், ஜனசதாப்தி போன்ற எந்தவித அதிவிரைவு ரயில்களும் இல்லை என்ற குறை உள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலை சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை இயக்கியிருக்கலாம் என்று தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்த்தனர்.

2019 முதல் ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை

தென் மாவட்ட சாதி கலவரங்கள் குறித்து ஆராய, 1997 ல், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையிலான குழு, அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், "வேலைவாய்ப்பு இல்லாதது தான் சாதி கலவரங்களுக்கு காரணம்; எனவே, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த தொழில்களை தொடங்க வேண்டும்' என, அரசுக்கு பரிந்துரைத்தது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையில் தென் மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. ஆனால், அடுத்தடுத்து அமைந்த அரசுகள், இந்த பரிந்துரையை அமல்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக எந்த திட்டமாக இருந்தாலும், புதிய தொழிற்சாலையாக இருந்தாலும், எல்லாமே சென்னையை மையமாக அல்லது வட மாவட்டங்களில் மட்டுமே அமைக்கப்படுகின்றது. தென்மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் பெரிய விமான நிலையங்கள், ரயில்வே திட்டங்கள், சாலை போக்குவரத்து என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. புதிய திட்டங்கள் தான் இல்லை, அதிக தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு உள்ள சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு புதிய ரயில்கள் தினசரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட ரயில்வே துறை கண்டுகொள்ளவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒரு ரயில் கூட தென்மாவட்டங்களுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது தான் தென் மாவட்ட மக்களின் மனக்குறையாக இருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Train
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment