Kunal Ray
Vetri Maaran's Asuran shows the power of images : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “அசுரன்” சினிமா ரசிகர்களை தாண்டி திரைப்படத்தை பார்த்த அனைத்து மக்களையும் வெகுவாக படத்தின் கதாபாத்திரங்கள் மூலம் வெகுவாக பாதித்திருக்கிறது. அசுரன் திரைப்படத்தின் கதைக்கரு சாதிய அடக்குமுறை மற்றும் சமூக அநீதி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அத்தகைய எதார்த்த நிலையை எவ்வளவு தீவிரமாக, ஆழமாக சித்தரிக்க முடியுமோ? அந்த அளவுக்கு காட்சி அமைப்புகள் படமாக்கப்பட்டுள்ளன.
தமிழில் வெளியான “வட சென்னை” படத்தை இயக்கிய அதே இயக்குநர் தான் இந்த திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். மற்ற மாநிலங்களில் இந்த திரைப்படம் திரையிடப்படும் போது, படத்தின் வசனங்கள் ஆங்கிலத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இடம் பெற்றிருக்க வேண்டுமென்று நிபந்தனையின் அடிப்படையில் சென்சார் சான்றிதழ் வழங்கியிருந்தாலும், மும்பை, பூனே போன்ற நகரங்களில் படம் திரைக்கு வந்த பிறகும் அந்த நிபந்தனை செயல்படுத்தபடவில்லையென்று கூறப்படுகிறது. அம்மாநில திரையரங்க உரிமையாளர்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படத்தின் வசனங்களுக்கான ஆங்கில சப்-டைட்டில்கள் இடம்பெறவில்லையென்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த குறையை தாண்டி வேறுமொழி பேசும் மாநிலங்களின் மக்கள் மனதிலும் “அசுரன்” நிறைந்திருக்கிறான்.
அந்த அளவுக்கு தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக “அசுரன்” விஸ்வருபமெடுத்துள்ளான். ஆங்கில சப் - டைட்டில்கள் இல்லையென்றாலும் அது ஒரு பொருட்டாகவே பார்வையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரியவில்லையென்றால் அது மிகையல்ல. படத்தில் தனுஷ் தோன்றும் காட்சியில் பார்வையாளர்கள், ரசிகர்களின் ஆரவாரம், மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. இது மற்ற மாநிலங்களில் திரைப்படத்தை பார்க்கும் மாற்று மொழி பேசும் பார்வையாளர்களையும் நிம்மதியடைய செய்துள்ளது. ஆங்கில சப்-டைட்டில்கள் இல்லாத நிலையில் மாற்று மொழி ரசிகர்கள் படத்தின் காட்சிகளில் இடம் பெற்றுள்ள சில நுணுக்கமான கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், வசனங்களையும் தமிழ் தெரிந்த ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியதிருந்தாலும், காட்சி அமைப்புகள் படம் முழுவதும் உணர்வுகளை கொண்டே வெளிப்படுத்திருப்பதால் “அசுரன்” மனித உணர்வுகளால் மக்களின் மன்ங்களோடு பேசுகிறான்.
“உலகமெங்கும் ஒரே மொழி உண்மை பேசும் காதல் மொழி” என்ற சாகாவரம் பெற்ற கவிப்பேரரசரின் வரிகள் போல சாதிய ஒடுக்குமுறை சமூக அநிநீதியையும், அதை எதிர்க்கும் மனிதனின் தன்மையையும் ஒரு சேர உணர்வுகளால் காட்சிப்படுத்திருப்பது இயக்குநரின் சிறப்பம்சம். ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை தனக்குள் இருக்கும் கதாப்பாத்திரங்களால், அங்கு மனங்கள் சங்கமிருக்கும் நிலையில் வசனத்தால் மொழியால் விளக்கும் நிலை தேவையில்லை என்பதை படத்தின் ஒவ்வொரு காட்சியும் புரியவைக்கிறது. எந்தவொரு மனித இடர்ப்பாடுகளையும், அடக்குமுறையையும் உணர்வுகளைவிட மொழியால் புரிய வைக்கமுடியுமா? என்ற கேள்வி நமக்குள் எழும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
திரைப்படம் காட்சி கலையின் அடிப்படையிலான ஒவ்வொரு காட்சியும் தனக்கென ஒரு மொழியை மனித எண்ணங்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. மேலும் வார்த்தைகளால் சொல்லமுடியாத உணர்வுகளையும் அது வெளிப்படுத்துகிறது. காட்சிகளின் தீவிரத்தின் மூலமாகவே ஆண்ட்ரி டார்கோவஸ்கி, மானிகவுல், யுசுஜிரோலுசு, குர்ஹந்தர்சிங் போன்றவர்களின் திரைப்படங்கள் வன்முறையை மனித உணர்வுகளால், வன்முறை காட்சிகளோ இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய காட்சிகள் நிலையற்ற, சோகமயமான காட்சி அமைப்புகள் மூலம் உருவாக்கப்பட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. இது போன்ற உணர்வுகளின் அடிப்படையிலான காட்சி அமைப்புகள் கொண்ட திரைப்படத்தில் வசனங்களே கிடையாது.
“அசுரன்” படத்தில் சாதிய ஒடுக்குமுறை, சமூக அநீதி ஆகியவற்றால் நிகழும் கொலைகள், அவமரியாதை, அவற்றால் பாதிக்கப்படும் குடும்பங்களின் நிலை போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உயர் சாதியினர் வசிக்கும் தெருவில் தலித் பெண் செருப்பு அணிந்து சென்றதால் தாக்கப்படும் கொடுமை, கிராமங்களின் திரையரங்குகளில் கீழ் சாதியினருக்கு தனி இருக்கைகள் போன்ற சாதிய ஒடுக்குமுறைகள் நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. வன்முறை காட்சிகள் ஒரு சில இடம் பெற்றிருந்தாலும், காட்சியோடு திரை ஓட்டத்தில் இணைந்து நம்மை மிகவும் பாதிக்க வைத்துள்ளது. திரைக்கதை படமாக்கப்பட்ட காடுகள், மணல்வெளிகள் போன்றவை கதாபாத்திரங்களின் யதார்த்தத்தை மேலும் வலுவடைய செய்துள்ளன. இது போன்ற வலுவான காட்சி அமைப்புகளுக்கு வசனங்கள் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்க முடியுமென்பதை உணர வைக்கிறது திரைப்படம். “அசுரன்” மக்களின் உண்ர்வுகளோடு கலந்துவிட்டது போல் தோன்றுகிறது. உணர்வுகளால் பேசும் “அசுரனு”க்கு மொழி தேவையில்லை என்பதே உண்மை.
தமிழில்: த.வளவன்