உங்களுக்கு புனிதாவை நினைவிருக்கிறதா? நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட அதே வாரம் சிறு குழந்தையான புனிதாவும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இறந்து கிடந்தாள். நிர்பயா தில்லியிலும் புனிதா தமிழகத்தை தாண்டிய இந்தியா அதிகம் அறியாத ஸ்ரீவைகுண்டத்திலும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
நிர்பயாவுக்காக விழித்துக் கொண்ட இந்திய கூட்டு மனசாட்சியும், ஊடக அறமும், நீதித் துறையின் வேகமும் அடுத்த நான்கு நாட்கள் கழித்து இறந்து கிடந்த புனிதாவின் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இப்போதும் திருநெல்வேலியில் உள்ள ஊடகவியலாளர்களிடம் பேசினால், புனிதாவின் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.
கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட அரியலூர் நந்தினியின் கதையும் கிட்டததட்ட அதேதான். 17 வயது தலித் பெண்ணான நந்தினியை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி கர்ப்பமாக்கியிருக்கிறார். கருவை கலைக்க நந்தினி மறுத்தவுடன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொன்று வீசி எறிந்திருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றுவரை அந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை.
இப்படிக் கண்டுக் கொள்ளப்படாத, நீதி கிடைக்க பெறாத ஏராளமான பெண் மீதான வன்முறை சம்பவங்கள் இந்திய தெருக்கள் எங்கும் இறைந்து கிடக்கின்றன.
தில்லியில் நடந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெற்றால் விரைவான நீதியும் அரியலூரிலோ ஸ்ரீவைகுண்டத்திலோ நடந்து பாதிக்கபட்ட பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும் வன்முறையை ஏவியவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்தால் மறுக்கப்பட்ட நீதியுமாகதான் பெண் மீதான வன்முறைக்கு இந்தியாவில் தீர்ப்பெழுதப் பட்டுக்கொண்டிருக்கிறது.
இதெல்லாம் பதிவான வழக்குகளுக்கு பொருந்தும். இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண் மீதான வன்முறை என்பது இயல்பின் ஒரு பகுதி. பல நேரங்களில் காவல்துறையில் போய் புகார் தர வேண்டிய அளவு அது பெரிய விஷயம் இல்லை, சட்டமே அப்படிச் சொன்னாலும் கூட.
ஒவ்வொரு இந்திய தெருவிலும் ஒவ்வொரு இந்திய வீட்டிலும் ஒவ்வொரு நாளும் பெண்கள் மோசமான வன்முறைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப வன்முறைக்கென்று சட்டம் இருந்தும் அந்த சட்டம் எந்த அளவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய போதிய தரவுகள் இல்லை. பல நேரங்களில் குடும்ப வன்முறை எவ்வளவு மோசமாக இருந்தாலும் காவல்துறை அலுவலகம் வரையோ நீதிமன்ற அலுவலகம் வரையோ செல்வதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பல நாடுகளில் திருமணத்தில் பாலியல் வல்லுறவு (marital rape) என்பது சட்டப்படி குற்றம். ஆனால் இந்தியாவில் அது சட்டப்படி குற்றம் இல்லை. விருப்பமில்லாத பாலியல் உறவில் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப்படும் எத்தனையெத்தனையோ பெண்கள் அது பற்றி புகார் தர வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்புகளை இந்திய சட்டம் வழங்குவதில்லை. திருமணத்தில் பாலியல் வல்லுறவு என்பது தண்டனைக்குரிய குற்றமெல்லாம் இல்லை என்று இந்திய நீதிமன்றங்கள் சொல்லியிருக்கின்றன.
பெண் மீதான வன்முறை என்பது இப்போது வெறும் எண்ணிக்கை மட்டுமே. ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் ஒரு பெண் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் என்று தரவுகள் சொல்கின்றன. அதாவது பதிவு செய்யப்பட்ட வன்முறைகள்.
அதனால்தான் எண்ணிக்கையின் மயக்கங்கள் எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறோம். இப்போதும் இந்தியா எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்னை, பெண் மீதான வன்முறைகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறதா இல்லையா என்பதுதானே தவிர இந்தியாவில் பெண்கள் எவ்வளவு தூரம் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதல்ல.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை நிராகரிப்பதையும் மறுப்பதையும்தான் இந்திய அரசு இப்போது தனது தலையாய கடமையாக மேற்கொண்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் பிம்பம் வீழ்ச்சியடைந்திருப்பதை எப்படி அரசால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்?
ஆனால் அதே அரசு நந்தினிக்களோ புனிதாக்களோ பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொன்று தூக்கியெறியப்பட்டால் அதை வேடிக்கை பார்த்து மௌனமாக கடந்து செல்ல முடியும்.
எனில் அது தேசிய அவமானம் இல்லை.
சர்வதேச சமூகத்தின் கவனமோ கவனமின்மையோதான் ஒரு வன்முறை தேசிய அவமானமா இல்லையா என்பதை நிர்ணயம் செய்கிறது.
உண்மை அதுவா என்ன? நிர்பயாவுக்கு நிகழ்ந்தது தேசிய அவமானமென்றால் கடைகோடி ஸ்ரீவைகுண்டத்தில் புனிதாவுக்கு நிகழ்ந்ததும் தேசிய அவமானம்தான். இந்திய எல்லைக்களுக்குள் எந்த மூலையிலும் நிகழ்ந்தாலும் பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் மீதான தீராத களங்கம். அந்த மனநிலை வாய்க்கப் பெறாத, அந்த கவலை கொஞ்சமும் இல்லாத அரசுகளுக்கு முதல் இடமா மூன்றாம் இடமா என்பதுதான் முக்கியமான பிரச்னையாக இருக்கும்.
எண் சார்ந்த மயக்கங்களிலிருந்து மீளாதவரையில் பெண் மீதான வன்முறை என்பது வெறும் தரவாகவே தொடரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.