லெனின் பிறந்து 150-ஆண்டுகள் கடந்தநிலையில், அவரது கொள்கைகள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பிந்தைய படிப்பினைகளை கொண்டிருக்கின்றன. லெனினுக்கு நாம் அஞ்சலி செலுத்தும் வேளையில், அனைத்துவிதமான சுரண்டல்கள், அடிமைத்தனத்துக்கு எதிராக மக்கள் விடுதலை பெறுவதற்கான வழிகளை நினைவில் கொள்ள மறந்து விடக் கூடாது.
டி.ராஜா
2020-ம் ஆண்டு ஏப்ரல் 22 லெனினின் 150-வது பிறந்த ஆண்டு தினமாகும். காரல் மார்க்ஸுக்குப் பிறகு இடதுசாரி கட்சிகளில் மிகப்பெரிய கொள்கைப்பிடிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ரஷ்யாவில் 1917-ம் ஆண்டில், முதல் சோசலிச புரட்சிக்கு தலைமை தாங்கியவர். இலக்குகளைக் கொண்ட திட்டங்களையும் வியூகங்களையும் வகுப்பதில் சிறந்து விளங்கியவர். சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை நிர்மாணித்தவர். முதலாவது சோசலிச நாட்டின் தலைவராக இருந்தவர். புதிய சமூக முறைமைக்கு வித்திட்டவர். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கான அரசாங்கத்தை உருவாக்கி வரலாற்றின் போக்கை மாற்றிய தலைவருக்கு உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்துவது என்பது இப்போதைக்கு பொருத்தமானதாக இருக்கும். கொரோனா தொற்றின் தாக்கம் முடிவுக்கு வந்த பின்னர் தொடரப்போகும் விவாதத்தின் பொருளாக சோசலிசத்தை காண வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் தாக்கத்தின் பீதியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு இல்லாத ஏழைகள், வீடிழந்தோர், வறுமையில் வாடுவோர் போராட்டங்களில் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றின் விளைவாக சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என்று விவாதிக்கும் பல அறிஞர்கள் வரலாற்றில் ஏற்பட்ட பெரும் மந்த நிலையை நினைவு கூர்கின்றனர். பெரும் மந்தநிலை தொடங்கியது என்று வழக்கமாக குறிப்பிடுவது 1929-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியைத்தான். அன்றைய தினம்தான், டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி (நியூயார்க் பங்கு சந்தை மற்றும் நாஸ்டாக் ஆகியவற்றில் வர்த்தகம் செய்யும் 30 பெரிய புளூ சிப் நிறுவனங்களை கண்காணிக்கும் ஒரு குறியீடாகும்) என்பது ஒரே நாளில் 20 சதவிகிதத்துக்கும் கீழே குறைந்தது. 20-ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் மந்த நிலை தொடங்கியது. அதிக உற்பத்தி, அதிக குவிப்பு ஆகியவற்றின் காரணமாக வாங்கும் சக்தி மற்றும் முதலீடு ஆகியவை சீர்குலைந்தன. பெரும் அளவிலான வேலை இழப்பு மற்றும் அதனோடு தொடர்புடையபல பிரச்னைகள் பூதாகரமாயின.
1929-32 பொருளாதார மந்த நிலையானது அமெரிக்கா, அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தின் அமெரிக்க பொருளாதாரம் என்பது ஐரோப்பியாவுடன் போட்டிபோடுவதாகவும் மோதலை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. வீடற்றோர், இடம்பெயர்வோர், பசி உள்ளிட்டவை தவிர, கற்பனைக்கு எட்டாத பல துன்பங்களை இது உருவாக்கியது. முதலாளித்துவ சிக்கல், முதலாளித்துவ நாடுகளுக்குள் ஏற்பட்ட மோதல்கள் முதலாவது உலகப்போருக்கு வித்திட்டன. அரைநூற்றாண்டுக்கு முன்பு, மார்க்ஸ், மூலதனம் என்ற முதல் தொகுதியை பிரசுரித்தார். முதலாளித்துவம் என்பது ஒரு நெருக்கடி மிகுந்த பொருளாதார அமைப்பு என்ற கருத்தாக்கத்தை அதில் உருவாக்கி இருந்தார்.
பெரும் மந்த நிலையின் தொடக்கத்தில், ரஷ்ய புரட்சிக்கு தலைமை தாங்கி இருந்தார். முதலாளித்துவம் என்பது, உயர்ந்தபட்ச நிலையில் ஏகபோக முதலாளித்துவத்தை தொட்டு விட்டது, அதன் பின்னர், ஒட்டுண்ணியாக, உயிரை உறிஞ்சுவதாக மாறிவிட்டது என்று வாதிட்டார்.ஏகாதிபத்தியம் என்ற இவரது படைப்பில், முதலாளித்துவத்தின் உயர்ந்தபட்ச நிலை என்பது, சிக்கலுக்கான ஒரு பதிலீடு என்று கூறி இருக்கிறார். முதலாம் உலகப்போர் மற்றும் பெரும் மந்த நிலை ஆகியவற்றின் பின்னணியில் அக்டோபர் புரட்சி தொடுக்கப்பட்டது. எல்லோருக்கும் சம உரிமை, அனைவருக்கும் நீதி என்பதை உறுதி செய்ய முதலாளித்துவ முறைக்கு மாற்றாக சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் முன்னெடுக்கப்பட்டது.
பெரும் மந்த நிலை ஏற்பட்டு இப்போது 90 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், அதன் அனுபவங்கள், பாடங்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. முதலாளித்துவ வளர்ச்சியின் தற்போதைய நிலை என்பது முன் எப்போதும் இல்லாத வகையில் வருவாய் மற்றும் வளத்தில் சமத்துவமின்மையை ஒரு நாட்டுக்குள்ளும், நாடுகளுக்குள்ளும் ஏற்படுத்தி இருக்கிறது. முதலாளித்துவம், ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா தாக்கத்துக்குப் பிறகு இந்த உலகம் இதேபோன்று இருக்கப்போவதில்லை. பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகக் கூடும்.
இந்தியாவில் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் பொருளாதார மாற்றங்களை பிரதிபலிக்க வேண்டியது அவசியமாகும். கொரோனா வைரஸ் என்ற பெயரில் கூட, மதத்தின் பெயரில் மக்கள் மத்தியில் பீதியை, தீவிரவாத த்தை பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புத்தர் முதல் ரவிதாஸ்வரை மேலும் அம்பேத்கரிடமும் பேகம்புரா(எந்தவித பாகுபாடும் இல்லாத மக்கள் வாழும் சமூகம். வலி இல்லாத இடம் என்பதே இதன் பொருள்) பற்றிய நீடித்த கனவு இருந்தது. நமது காலகட்டத்தின் பேகம்புரா என்பது பயம் மற்றும் கவலைகள், துன்பங்கள் இல்லாத மக்கள் வசிக்கும் புதிய இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான். நமது நாட்டின் சிந்தனையாளர்கள், தலைவர்களுடன் மார்க்ஸ், லெனினும் இணங்கிச் செல்கின்றனர். ஆனால், பெருநிறுவன முதலாளித்துவம் என்பது, முதலாளித்துவ அமைப்புக்கு வெளியேயான எந்த ஒரு மாற்றையும் அனுமதிக்காது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றன. தேசிய அடிப்படைவாத த்தை புதுப்பிக்கின்றோம் என்ற பெயரில் செயல்படுவதாக கூறி, பாசிச சக்திகளை ஊக்குவித்து இந்த சக்திகள் ஜனநாயகத்தை அகற்றிவிடக் கூடும்.
லெனினுக்கு நாம் அஞ்சலி செலுத்தும் வேளையில், அனைத்துவிதமான சுரண்டல்கள், அடிமைத்தனத்துக்கு எதிராக மக்கள் விடுதலை பெறுவதற்கான வழிகளை நினைவில் கொள்ள மறந்து விடக் கூடாது.
இந்த கட்டுரை முதலில் ஏப்ரல் 22-ம் தேதியிட்ட நாளிதழில் “Learning From Lenin” என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.