மா.சுப்பிரமணியன்
சென்னை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரங்கள் ஐந்து. போரூர் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, செங்குன்றம் ஏரி ஆகியனதான் அவை. வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் தண்ணீரை இந்த 5 ஏரிகளில் தேக்கி வைத்து குடிநீருக்கு பயன்படுத்தி வந்திருக்கிறோம்.
இவை தவிர, வீராணத்தில் இருந்தும் தண்ணீர் வருகிறது. மீஞ்சூரிலும், நெம்மேலியிலும் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமாகவும் தண்ணீர் கிடைக்கிறது. நெம்மேலியில் இருந்து வருகிற தண்ணீர்தான் சோழிங்கநல்லூர், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் தேவையை நிறைவேற்றுகிறது.
வட சென்னையின் பெருமளவு தேவையை மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஈடு செய்கிறது. வட கிழக்கு பருவமழை கடந்த ஆண்டு சற்று குறைந்ததால், இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் தலை தூக்கியிருக்கிறது. ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்ன காரணத்தினாலோ, ‘இது வதந்தி, குடிநீர் பஞ்சம் இல்லை’ என பேட்டியில் கூறியிருக்கிறார். இது அபத்தம்! ஏனென்றால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக கீழே போய்விட்டதால் ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீருக்கு மக்கள் தவிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு இதேபோல வறட்சி வந்தபோது, சென்னையை சுற்றியுள்ள கல் குட்டைகளில் இருந்து நீர் எடுத்துத் தருவதாக அரசு கூறியது. 6 மாதம் கழித்து அதே உள்ளாட்சித் துறை அமைச்சர், ‘அது குடிக்கப் பயன்படாத நீர். அதனால் எடுத்துத் தரவில்லை’ என்றார். ஆனால் இந்த ஆண்டு அந்த தண்ணீரைத்தான் எடுத்துக் கொடுக்கிறார்கள்.
கல் குட்டைகள், தற்கொலை செய்கிறவர்களின் புகலிடமாக இருக்கிறது. மருத்துவ கழிவுகளை கொட்டுகிற இடமாகவும் இருக்கின்றன. அங்கிருந்து வருகிற தண்ணீரும் மோசமாக இருப்பதாகவே செய்திகள் வருகின்றன. சரி, ஏதோ சுத்தப்படுத்தி தருவதாக எடுத்துக் கொண்டாலும், அந்தத் தண்ணீர் போதுமானதாக இல்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் இதேபோல குடிநீர் பஞ்சம் வந்தபோது, நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் தேங்கியிருக்கும் நீரை லாரிகள் மூலமாகவும், ரயில் மூலமாகவும் வர வைத்திருக்கிறார். திமுக ஆட்சி காலங்களில் காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் விவசாயக் கிணறுகளில் ‘போர்’ போட்டு, ராட்சத மோட்டார்கள், குழாய்கள் மூலமாக தண்ணீர் எடுத்து வந்து மக்களின் தேவையை தீர்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த அரசு கடந்த ஒரு மாதமாக, ‘சென்னை புறநகர் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதில்லை’ என கூறி வந்தது. ஆனால் அரசாங்கத்தால் முடியாததை தனியார்கள் பல்லாயிரக்கணக்கான லாரிகள் மூலமாக அங்கிருந்துதான் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள். குறிப்பாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தண்ணீர் வருகிறது.
நானும் எனது சைதாப்பேட்டை தொகுதிக்கு தினமும் காலையில் 15,000 லிட்டர், மாலையில் 15,000 லிட்டர் திருப்போரூர் பகுதியில் இருந்துதான் எடுத்து வந்து கொடுக்கிறேன். சுத்தமான தண்ணீராக கிடைக்கிறது. இடைத்தரகர் தலையீடு வந்துவிடக்கூடாது என்பதற்காக காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணி நேரம் நானும், திமுக பகுதி செயலாளர்களும் அங்கேயே நின்று வினியோகம் செய்கிறோம்.
இப்போ நேற்று முன் தினம் அரசு தரப்பில், ‘சென்னையை சுற்றியுள்ள 316 கிணறுகளில் குடிநீர் எடுக்கப் போவதாக’ ஒரு அறிவிப்பு வருகிறது. இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிற வேலை. இவ்வளவு நாட்கள் மக்கள் வறட்சியில் வாடி, கஷ்டப்பட்டபோது இந்த நடவடிக்கையை எடுக்காதது ஏன்?
அதேபோல குடி மராமத்து என ரூ 500 கோடி ஒதுக்கியிருப்பதாக இப்போது அரசு கூறுகிறது. குடி மராமத்து, வறட்சி தொடங்குகிற காலத்தில் செய்திருக்க வேண்டும். இனி இவர்கள் திட்ட மதிப்பீடு தயாரித்து, டெண்டர் விட்டு, வேலையைத் தொடங்கும் முன்பு வட கிழக்கு பருவமழை வந்துவிடும். ஆக, இவை அனைத்தும் காலம் கடந்த அறிவிப்புகள்!
பொதுவாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளையும் முழு கொள்ளளவு தேங்கும் வகையில், வட கிழக்கு பருவமழைக்கு முன்பாகவே தயார் செய்து வைத்திருந்தால், இந்த தண்ணீர் பஞ்சம் வந்திருக்காது. அதாவது, அந்த ஏரிகளில் கருவேல மரங்களை அகற்றி, தூர்வாறி ஆழப்படுத்தியிருக்க வேண்டும். இதை செய்யவில்லை.
மழைநீர் சேகரிப்புத் திட்டத்தையும் அதிகாரிகள் கண்காணிக்கவில்லை. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய இது ஒரு காரணம். சென்னையில் உள்ள வேறு பல சிறு ஏரிகள், கோவில் குளங்கள் ஆகியவற்றை தூர் வாறியிருக்க வேண்டும். திமுக இந்தத் திட்டத்தை முன்னெடுத்து, தமிழகம் முழுக்க 500 குளங்களை தூர் வாரினோம். அதனால் அந்தக் குளங்களில் கடந்த பருவ மழையின்போது தண்ணீர் பெருகியது.
சென்னையில் இன்று கோவில் குளங்கள் அனைத்தும், மண் மேடாகி காய்ந்து கிடக்கின்றன. சைதாப்பேட்டை, காரனேசர் ஆலய குளத்தை தூர் வார அனுமதி கேட்டு நேற்று அறநிலையத்துறை அதிகாரியிடம் கடிதம் கொடுத்தேன். பின்னர் அந்த அதிகாரி போன் செய்து, ‘துறை சார்பில் பொறியாளர்கள் ஆய்வு செய்து, திட்ட மதிப்பீடு தயாரிக்க இருப்பதாக’ கூறினார்.
ஆக, என்னை தூர்வார அனுமதிக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அரசாங்கம் அதை செய்தால், சந்தோஷம்தான். குளங்களை தூர் வாரினாலும், தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதில் அரசியல் பார்க்கக்கூடாது.
அரசாங்கம் கடந்த ஆண்டைவிட 1000 லாரிகளை அதிகப்படுத்தி, 9300 லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்குவதாக கூறுகிறது. இது போதுமானதல்ல. தவிர, 2000 லிட்டர், 3000 லிட்டர் கொள்ளத்தக்க சிறிய வாகனங்களையும் லாரிகள் பட்டியலில் எண்ணிக்கை காட்டுவதாக தெரிகிறது. அது ஒரு டிவிஷனுக்குகூட போதாது.
கிணறுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, நெய்வேலியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது உள்ளிட்ட போர்க்கால நடவடிக்கைகளை அரசு எடுத்தாக வேண்டும். இந்த நேரத்து அலட்சியத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
(மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர். சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.