S Prabu Rama Subramanian
2011ஆம் ஆண்டு அறிவு மற்றும் பிறரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டபோது தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கொடி என்ற ஆர்வலர் தீக்குளித்தார். இது எனக்குள் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் அன்றிரவு வேலூர் சிறையில் அறிவையும் மற்ற இருவரையும் நான் சந்தித்தேன். (கோப்பு)
எங்கும் அநீதி என்பதானது எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பது மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் பிரபலமான வார்த்தைகளாகும். சேலத்தில் சட்டக் கல்லூரியில் படிக்கும் வரை அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் மிகவும் இளம் வயதினனாக இருந்தேன்.. ஏ.ஜி.பேரறிவாளனின் மரண தண்டனைக்கு எதிராக ஒரு மேல் முறையீடு(Appeal from the Death Row.) என்ற புத்தகம் நீதி மற்றும் அறநெறி உலகில் என் கண்கள் திறப்பதற்கு காரணமாக இருந்தது.
,
இந்த புத்தகமானது மனித உரிமைகள், கைதிகளின் வாழ்க்கை மற்றும் அதிகார அரசியல் பற்றிய கண்ணோட்டத்தை எனக்கு அளித்தது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளியான தனது மகன் பேரறிவாளனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர அற்புதம்மாள் மேற்கொண்ட முயற்சியின் தோல்வியும் என்னைப் புரிந்து கொள்ள வைத்தது.
அப்போது வேலூர் சிறையில் இருந்த அறிவுக்கு (பேரறிவாளன்) கடிதம் எழுதினேன். நான் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ விரும்புவதாகக் குறிப்பிட்டேன், ஒரு தொழில்முறை வழக்கறிஞராக தனக்கு உதவும்படி என்னிடம் அறிவு கேட்டார். நாங்கள் சுமார் இரண்டு வருடங்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருந்தோம்.
பச்சன் சிங் ( அரிதினும் அரிதான கோட்பாடு அடிப்படையில் மரண தண்டனை), மச்சி சிங் (அதையே மேலும் நிறுவுதல்), கேஹர் சிங் (ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரம்) மற்றும் வைத்தீஸ்வரன் மற்றும் திரிவேணிபென் ( மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் தாக்கங்கள்),போன்ற நீதிமன்ற தீர்ப்புகளைப் படித்தோம். மரண தண்டனையில் சட்டத்தின் கோட்பாட்டை கண்டறிவதற்காக நீதிபதி வி ஆர் கிருஷ்ண ஐயர் மற்றும் நீதிபதி பகவதி ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை புரிந்து கொண்டோம்.
இது ஒரு புகழ்பெற்ற உயர்மட்ட வழக்கு என்பதால், அதைச் சூழ்ந்திருந்த பதட்டங்களை முழுமையாக உணர்ந்துதான் இந்த வழக்கை கையில் எடுத்தேன். 2011ம் ஆண்டில், வழக்கறிஞர்கள் ராஜீவ் ரூபேஷ் மற்றும் பாரி வேந்தன் ஆகியோருடன் நாங்கள் கைகோர்த்தோம். பம்பாய் உயர் நீதிமன்றத்தின் முன்னணி குற்றவியல் வழக்கறிஞரும், இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பதற்காகப் போராடியவருமான யுக் மோஹித் சவுத்ரியின் அலுவலகத்தில் நாங்கள் முகாமிட்டோம்.
2011ஆம் ஆண்டு அறிவு மற்றும் பிறரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டபோது தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கொடி என்ற ஆர்வலர் தீக்குளித்தார். இது எனக்குள் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் அன்றிரவு வேலூர் சிறையில் அறிவையும் மற்ற இருவரையும் நான் சந்தித்தேன்.அனைத்து மட்டங்களிலும் இருந்தும் எழுந்த கோரிக்கைகளையடுத்து, மரண தண்டனையை குறைக்க மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்தது, பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.
சிறை கைதிக்கான நேர்காணல் நாளன்று, தொலைபேசியில் என்னிடம் பேசிய அறிவு புவனேஸ்வர் நகரில் இருந்து தனக்கு ஒரு கடிதம் வந்திருப்பதாக கூறினார். முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜனிடம் இருந்து வந்த கடிதமா? என்று நான் கேட்டேன், எனது யூகம் சரியாக இருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார். ராஜீவ் படுகொலையின் போது, சி.பி.ஐ., கேரளப் பிரிவு எஸ்.பி.,யாக இருந்த தியாகராஜன், ஒரிசா கேடரைச் சேர்ந்த அதிகாரி என்பதை, நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எனவே, அறிவுக்கு யார் கடிதம் எழுதியிருக்க முடியும் என்பதை எளிதில் என்னால் யூகிக்க முடிந்தது.
தியாகராஜன் தமக்கு உதவ விருப்பம் தெரிவித்ததாக அறிவு என்னிடம் கூறினார். அவரைச் சந்திப்பதற்காக சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு ரயிலில் சென்றோம். தியாகராஜன் 2017 ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ராஜிவ் வழக்கு விசாரணையின் போது, " எந்த நோக்கத்திற்காக பேட்டரிகள் வாங்கப்பட்டது என்பது குறித்து தாம் அறிந்திருக்கவில்லை " என்று பேரறிவாளன் கூறியதை "தான் பதிவு செய்யவில்லை" என்று சொல்லியிருந்தார். அப்படி பதிவு செய்திருந்தால் "அது ஒரு நியாயமான வாக்குமூலமாக இருந்திருக்கும்,” எனினும் தாம் அதனை பதிவு செய்யவில்லை. ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதன் முழு நோக்கமும் தடம் புரண்டு விடும் என்பதால் விசாரணையின்போது பேர றிவாளன் சொன்னதை அப்படியே பதிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார். (ராஜீவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பேட்டரிகளை அவர் வாங்கினார் என்பதுதான் பேரறிவாளன் மீதான ஒரே குற்றச்சாட்டு.)
பேரறிவாளனின் பிரமாணப் பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் விசாரணை அதிகாரிகள் தூக்கு தண்டனையை குறைப்பதற்காக வாக்குமூலம் அளித்த சம்பவங்கள் இருந்தபோதிலும், ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் இதுபோன்ற பிரமாண பத்திரம் வழங்க முன்வந்தது இதுவே முதல் முறை என நினைக்கிறேன். இது வழக்குக்கு பெரிதும் உதவியது மற்றும் பேரறிவாளனின் நல்ல குணத்திற்கு கிடைத்த பரிசாகவும் இருந்தது. .
அறிவு என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நானும் கடன்பட்டிருக்கிறேன். நான் ஒரு ஜூனியர் வக்கீலாக இருந்தேன், ஆனால் அவர் என் திறமையை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை. தாம் நிரபராதி என்று நம்பும் வழக்கறிஞர் தேவை என்றார்.
பேரறிவாளன் தரப்பு நியாயத்தை கைகளிலும் இதயத்திலும் ஏந்திச் செல்லும் வகையில் கோபால் சங்கரநாராயணனும் இந்த வழக்கில் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்தார். மரண தண்டனையை ஆயுள் தண்டையான குறைக்கும் வழக்கின் முதுகெலும்பாக யுக் மற்றும் ராம் ஜெத்மலானி ஆகியோர் இருந்தனர். கோபால் சங்கரநாராயணன் இந்த வழக்கின் மூளையாக இருந்தார். தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய அவர் எங்களுக்கு உதவினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது. குற்றத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவிகள் மீது குற்றத்தை சுமத்தி பிரபலமான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் அதிகாரிகளின் கன்னத்தில் விழுந்த அறையாகும்.
கட்டுரையாளர் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளனின் வழக்கறிஞராக செயல்பட்டவர்.
தமிழில்; ரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.