முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்
பல மணிநேரமானாலும் மக்கள் காத்து நின்று அவருடையக் காய்கறிக் கடையிலிருந்துதான் அவரவருக்குத் தேவையானக் காய்கறிகளை வாங்கிப்போவார்கள். அவ்வளவு நாணயமானவரும், பண்பாளரும் அவர். பள்ளிப்படிப்பு அதிகம் இல்லையென்றாலும் கணக்குவழக்கிலும், பழக்கவழக்கத்திலும் அவ்வளவுக் கெட்டிக்காரர். சிறுவயத்திலிருந்து இந்த வியாபாரத்தில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாலும், வேறு எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாததாலும் அனைவரிடத்திலும் நல்லப்பெயர் வாங்கி விட்டார். கூடவே கொஞ்சம் சம்பாதித்தும் விட்டார்.
என்ன நடந்ததோ ஏது நடந்ததோ பாழாப்போன டாஸ்மாக்கடை வந்ததும் இந்த கொரோனா வைரஸ் தாக்கியதைப் போன்று அவரையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பழக்கம் கடுமையாகக் கௌவிக்கொண்டது. தான் எந்தக் கடையில் இருந்து காய்கறி வியாபாரத்தைச் செய்தாரோ அதேக் கடையின் முன் பிறந்த மேனியாகக் கிடக்கும் அளவுக்கு முழு நேர குடிகாரராக மாறிவிட்டார். பலமணிநேரம் காத்து நின்று காய்கறி வாங்கிச் சென்றவர்களெல்லாம் காறி உமிழ்ந்து விட்டுச் செல்லும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள குடும்பமும் நாசமாகி நடு ரோட்டுக்கு வந்து விட்டது.
“உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர்.” என இவருக்காகத்தான் அந்தப் பொய்யாமொழிப் புலவர் இப்படி எழுதியிருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.
இது எங்க ஊரிலுள்ள ஒருவருக்கு டாஸ்மாக்கினால் ஏற்பட்டப் பரிதாப நிலை. இதே நிலைத் தமிழகம் முழுவதும் எத்தனை எத்தனையோ பேருக்கு ஏற்பட்டிருக்கும் எனப் பட்டியலிட்டால் பக்கங்கள் பல பாழாகிப் போகும்.
என்னடா எங்கேயோ சுற்றி வளைக்கிறார் என நினைக்கிறீர்களா? இதோ வாரேன் உண்மையான விஷயத்துக்கு. கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுண் வந்ததும் தமிழகத்திலுள்ள அத்தனை டாஸ்மாக் கடைகளோடு சேர்த்து அனைத்துப் போதைப் பொருள்கள் விற்கும் கடைகளும் குளோசாகி விட்டன. எப்பொழுதும், போதையே போஜனம் என்றிருந்தவர்கள் எல்லாம் வேதனைக்குள்ளானார்கள். கூடவே வீட்டுக்குள்ளையே அடைக்கலமாகி விட்டார்கள்.
இதுவரையிலும் குறிப்பிட்டிருக்கும் இந்த லாக்டவுண் முடியும் போது சரியாக நாற்பது நாள்களாக இவர்கள் குடிப்பதற்கு வழியின்றித் தவிக்க வேண்டியதுதான். இந்த நாற்பது நாள்களும் முடியும் போது இவர்கள் அப்படியே முற்றிலுமாக அந்தப் பழக்கத்தை மறந்து நல்ல மனிதர்களாக மாறவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என நினைத்தப் போதுதான் கன்னியாகுமரி மாவட்டம் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நல்ல ஆலோசனையும் வழிகாட்டுதலும் வழங்கிவருபவருமான டாக்டர் எஸ்.எம். டயானா ஷாலின் நினைவுக்கு வந்தார்கள்.
அவர்களிடம் சென்று இந்த குடிபழக்கத்திற்கு ஆளானவர்கள் இனி லாக்டவுண் முடிந்த பிறகுக் குடிப்பழக்கத்தை முற்றிலுமாக மறப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டதற்கு;
“பல ஆண்டுகளாக மதுபழக்கத்திற்கு அடிமையாகி இருப்பவர்கள் கண்டிப்பாக சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, கேன்சர், மன அழுத்தம் உள்ளிட்டப் பல விதமான நோய்களுக்கு ஆளாகியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை உடனடியாக, முற்றிலுமாக இந்தப் பழக்கத்திலிருந்து மாற்றிக் கொண்டு வருவது சற்று கடினமானது. இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்குள் என்ன நோய் தொற்றியிருக்கிறது என்பதை ரத்தப்பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ற சிகிச்சை முறையை இப்பொழுதே தொடங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவர்களிடம் ஒருவேளை இம்மாதிரியான நோய்கள் தொற்றிக் கொள்ளாதவர்கள் எப்படி நிறுத்திக் கொள்ளலாம்? எனக் கேட்டதற்கு; கரிசலாம்கண்ணி, கீழாநெல்லி போன்ற மருத்துவக் குணம் மிகுந்த பச்சிலைகளின் சாறும் நெல்லிக்காய் சாறும் குடிக்கலாம் கூடவே பல வகையான நாட்டு மருந்துகளும், கஷாயங்களும் உள்ளன அவற்றைக் குடித்து வந்தாலும் இப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி விடுவதற்கு முடியும்” என்றார்.
மேலும் “இப்பொழுது அவர்கள் வீட்டிலையே அடங்கியிருக்கும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் அவரிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எனக் கேட்டதற்கு; இப்பெழுது இவர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான கோபம் உடையவர்களாகவும், சரியான தூக்கமின்மையும், பசியின்மையும் உடையவர்களாகவும் இருப்பார்கள். அதனால் வீட்டிலுள்ள பெற்றோர் அல்லது மனைவி, பிள்ளைகளானாலும் மிகவும் கவனமாகவும் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் இதற்கு முன் குடித்துவிட்டு, வீட்டில் செய்த தவறுகளையும் கொடுமைகளையும் எடுத்துக்கூறி, அவமானப்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு அதிகமான அன்பும், அரவணைப்பும் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்களை முற்றிலுமாக மாற்றி எடுப்பதற்கு முடியும்” என்றார்கள்.
மேலும், இவர்களின் நண்பர்களிடம் அதிகமான சகவாசம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு குடிபழக்கத்திற்கு ஆளானவர்களும் இனி எந்த சூழ்நிலையிலும் நான் குடிக்க மாட்டேன் என்ற உறுதியோடு இருக்க வேண்டும். மேலும் இனி என்னால் குடிக்காமல் இருக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மனநிலைக்கு வந்தால் எப்படிப்பட்டப் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் அதிலிருந்து மீண்டு இயல்பான வாழ்க்கைக்கு வரமுடியும்” என உறுதிபடக் கூறினார்.
தற்பொழுது மது பழக்கத்திற்கு ஆளானவர்கள் பற்றி, உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய மண்டலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு நேரத்தில், அதிகம் மது அருந்துவது உடல்நலப் பாதிப்புகள், துணையுடன் சண்டை, மனநலப் பிரச்னை, வன்முறைப் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மது அருந்துவதால் கொரோனா தொற்று ஏற்படாது என்பது தவறானச் செய்தி. அதிகம் மது அருந்துபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. மதுவால் உலகம் முழுவதும் ஆண்டிற்கு 30 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே அரசாங்கங்கள் மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
எனவே தமிழக அரசு, இந்த லாக்டவுண் முடிந்த பிறகும் டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல், நிரந்தரமாக மூடிவிட்டது என்றால் அது வீட்டிற்கும் நாட்டிற்கும் பயனுடையதாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.