Advertisment

காற்று மாசுபாடு : டெல்லியைப் போல சென்னையும் தத்தளிக்குமா?

டெல்லி தான் தத்தளிக்கிறது, சென்னை நன்றாக தான் இருக்கிறது என்கிற குரலில் யாராவது மகிழ்வுற்றால், டெல்லி அளவிற்கு சென்னையும் மாசுபட்ட நகரம் தான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News Live Updates

Tamil News Live Updates

கோ.சுந்தர்ராஜன்

Advertisment

இந்தியாவின் தலைநகர் டெல்லி கடந்த பல வருடங்களாகவே காற்று மாசுபட்டால் அவதிப்பட்டு வருவதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாபெரும் காற்று மாசுபாட்டுக்கு பல காரணங்கள் உள்ளன.

வாகன புகை, தொழிற்சாலைகளில் இருந்துவரக்கூடிய புகை, அனல் மின்நிலையங்கள் , தீபாவளி பட்டாசு, மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு எரிக்கப்படும் வைக்கோல், சாலைகளில் உள்ள தூசு என எல்லாவற்றிலிருந்தும் வரும் புகை டெல்லியை இன்று மிக மோசமாக முடக்கி வைத்துள்ளது. டெல்லியின் தற்போதைய நிலையை "பொது சுகாதார அவசரநிலை" என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

இதையடுத்து, பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுக்க முயற்சித்து வருகிறது.

சில இடங்களில் காற்றின் (Air Quality Index, AQI) தரம் மிகவும் மோசமாகி, 999 என்கிற அளவை தொட்டுள்ளது. அது நாள் ஒன்றுக்கு 45 சிகரெட்டு பிடிப்பதற்கு சமம். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியின் மாசு மிகவும் மோசமாகி வந்தாலும் அதை குறைப்பதற்கோ அல்லது கையாளுவதற்கோ மாநில அரசும் மத்திய அரசும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது குரூரமான ஒரு உண்மை.

டெல்லியில் ஓடும் வாகனங்களில் 94% வாகனங்கள் தனியார் வாகனங்கள். சராசரியாக 10 லட்சம் மக்களுக்கு 272 பேருந்துகள்தான் இருக்கின்றன, பரத்பூர் அனல் மின்நிலையம் எப்போதோ மூடப்பட்டிருக்க வேண்டும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நெல் அறுவடைக்கு இயந்திரங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும், வைக்கோலை நிலத்தில் வைத்துக்கொண்டே கோதுமை விதைகளை நடுவதற்கு "ஹாப்பி சீடர்" (happy seeder) என்கிற இயந்திரம் விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்படவேயில்லை. இவை எதையும் செய்யாமல் டெல்லியை தத்தளிக்க விடுகின்றன மத்திய-மாநில அரசாங்கங்கள்.

காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு வருடமும் டெல்லியில் மட்டும் 3000 மரணங்கள் நிகழ்கின்றன. அதாவது நாளொன்றிற்கு 8 மரணங்கள், இருந்தும் எந்த நடவடிக்கையையும் இல்லை.

டெல்லியைப் பொறுத்தவரையில் 2015-ஆம் ஆண்டு முதல், அடுத்த 5 வருடங்களில் 5,000 அரசு பேருந்துகளை புதிதாக சேர்த்திருக்க வேண்டும், ஆனால் ஒரு பேருந்து கூட இதுவரை சேர்க்கப்படவில்லை. அதே நேரம் டெல்லி போக்குவரத்து துறையில் பதிவு செய்யபப்டும் பேருந்துகளின் எண்ணிக்கை (தனியார் பேருந்துகளையும் சேர்த்து), 2013-14 ஆம் ஆண்டில் பதியப்பட்ட 1,254 பேருந்துகளிலிருந்து, கடந்த ஆண்டு 877 ஆக குறைந்தது. ஆனால் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை 21% அதிகரித்துள்ளது.

அதாவது 2013-14 காலகட்டத்தில் 4,95,624 தனியார் வாகனங்கள் பதியப்பட்ட டெல்லியில் சென்ற ஆண்டு (2016-17) 6,00,930 தனியார் வாகனங்கள் பதியப்பட்டுள்ளன. இந்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி கணக்குப்படி சுமார் ஒரு கோடி வாகனங்கள் டெல்லியில் உள்ளன. அவற்றுள் 94,80,000 வாகனங்கள் தனியாருக்கு சொந்தமானவை. டெல்லின் மாசுப்பாட்டிற்கான காரணத்தை புரிந்து கொள்ள இந்த ஒரு விஷயமே போதும்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் அறுவடை செய்வதற்கும் வைக்கோலை கையாள்வதற்கும் தேவையான இயந்திரங்களை அரசுகள் வழங்கியிருக்க வேண்டும், ஆனால் 12,00,000 ரூபாயை விவசாயிகளிடம் அபராதமாக (வைக்கோலை எரித்தால் அபராதம்) பெற்ற பஞ்சாப் அரசு, சில நூறு ஏக்கர்களுக்கு தேவையான இயந்திரங்களை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. மத்திய அரசு, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் எல்லோரும் களத்தில் இறங்கி வேலை செய்வதற்கு யாருடைய உத்தரவிற்காக காத்திருக்கின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவித்த பிறகும் செயல்படாமல் இருக்கும் அரசுகள் நிச்சயம் மக்களை படுகொலை செய்கின்றன என்று தான் சொல்ல முடியும்.

டெல்லி தான் தத்தளிக்கிறது, சென்னை நன்றாக தான் இருக்கிறது என்கிற குரலில் யாராவது மகிழ்வுற்றால், டெல்லி அளவிற்கு சென்னையும் மாசுபட்ட நகரம் தான், ஆனால் சென்னையின் அதிர்ஷ்டம் கடலுக்கு அருகிலிருப்பது. கடல், நாம் வெளியிடக்கூடிய கார்பனில் சுமார் 25 சதவீதத்தை உள்வாங்கிக்கொண்டு சென்னையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியிலும் மகிழ்ச்சியான செய்தி கிடையாது, இப்படி அதிக அளவில் கார்பனை உள்வாங்கிக்கொண்டிருப்பதால் கடல் அமிலத்தன்மையானதாக மாறிக்கொண்டிருக்கிறது.

அமிலத்தன்மை அதிகமாக அதிகமாக, கார்பனை உள்வாங்கும் சக்தி குறையும். இப்போதே சென்னையின் மாசுபாட்டிற்கு காரணாமாக இருக்கக்கூடிய விஷயங்களை நாம் கட்டுப்பாடிற்குள் கொண்டுவராவிட்டால் சென்னையும் டெல்லியை போல் தத்தளிக்க கூடிய காலம் மிக விரைவில் வரும்.

கட்டுரையாளர், கோ.சுந்தர்ராஜன், அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர். ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் மூலம் அணு ஆற்றலுக்கு எதிரான கருத்தரங்குகள், போராட்டங்களை முன்னெடுப்பவர். சூழலியல், மரபணு பயிர்கள் எதிர்ப்பு, நிலையான வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Poovulagin Nanbargal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment