இரா.குமார்
சமையல் எரிவாயு மானியம் ரத்தாகிறது. ரேஷன் பொருட்கள் பெறவும் கட்டுப்பாடு என மக்களை மிரட்டுகிறது மோடி அரசு. மோடியின் அடுத்தடுத்த திட்டங்கள், இது மக்களுக்கான அரசு அல்ல என்பதையே பறை சாற்றுகின்றன.
எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சிக்கு வந்த மோடி, மக்களுக்கு செய்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்ற பதில்தான் வருகிறது. ஒன்றும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மக்கள் தலையில் நாளுக்கு நாள் சுமையை ஏற்றுகிறார்.
ஆட்சிக்கு வந்தவுடனே, ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பே ரயில் கட்டணத்தை உயர்த்தினார். அதற்கு அவரது அமைச்சர் ஒரு விளக்கம் சொல்லி சப்பைக்கட்டு கட்டினார். ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு, ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டதுதான். அறிவித்தது மட்டும்தான் நாங்கள் என்றார் மோடியின் அமைச்சர்.
காங்கிரஸ் சரியில்லை என்றுதானே, உங்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் எடுத்த முடிவை அறிவிக்க நீங்கள் எதற்கு? அவர்களே இருந்திருக்கலாமே. அதுவும்கூட காங்கிரஸ் அரசில் திட்டமிட்டதைவிடவும் கட்டணத்தை மேலும் உயர்த்தி அறிவித்தது மோடி அரசு.
‘ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார் அண்ணா. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்ல. நேர்மையாக ஒத்துக்கொண்டார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொன்னோம். ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதில் உள்ள கஷ்டம் தெரிகிறது. 3 படி லட்சியம். ஒருபடி நிச்சயம் என்றார் அண்ணா. இது நேர்மையான ஆட்சியாளருக்கு அழகு. அதை விட்டுவிட்டு, காங்கிரஸ் எடுத்த முடிவைத்தான் அறிவித்தோம் என்று சொல்லி தப்பிப்பது நேர்மையல்லவே.
மத்தியில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே, எல்லா மாநில அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது பாஜகவுக்கு. மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சியிலும் கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி, அதிகாரத்தில் பங்கு பெறும், நேர்மையற்ற அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளது பாஜக. அருணாச்சலில் இப்படித்தான் காங்கிரசை உடைத்து அதிகாரத்தை ருசித்து வருகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, வருமான வரி சோதனை, சிபிஐ விசாரணை என்று மிரட்டி, அமைச்சர்களை பாஜகவின் எடுபிடிகளாக்கி வைத்திருக்கிறது.
பீகாரில் லாலு மகன் மீது ஒரு ஊழல் வழக்கை பதிவு செய்து, திட்டமிட்டு கூட்டணியை உடைத்து இப்போது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளது. ஆட்சி, அதிகாரம் ஒன்றே குறிக்கோள். அரசியல் நேர்மை பற்றியெல்லாம் பாஜகவுக்குக் கவலையில்லை. டில்லியில் கேஜ்ரிவால் அரசுக்கும், புதுச்சேரியில் நாராயணசாமி அரசுக்கும் ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.
அதிகாரத்தை எப்படியோ பிடித்துவிட்டுப் போகட்டும். மக்களுக்கு நன்மை செய்கிறதா என்று கேட்டால், நல்லதா? வாழவிட்டால் போதாதா? என்றுதான் பதில் வருகிறது.
கறுப்புப் பணத்தை ஒழிக்க்கிறேன் என்று சொல்லி, 500, 1000 ரூபய் நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பு இழப்பு திட்டத்தை 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தார் மோடி. 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள். பிறகு கேளுங்கள் என்றார். வங்கியிலும் ஏடிஎம் வாசலிலும் மக்கள் காத்துக் கிடந்ததும், சிலர் உயிரை விட்டதும்தான் மிச்சம். நல்லது எதுவும் நடக்கவில்லை. வியாபாரம் படுத்து, நடுத்தர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
அடுத்து, ஜிஎஸ்டி அமல். தாறுமாறான வரி உயர்வு. தண்ணீர் வங்கிக் குடித்தால், ஓட்டலில் சாப்பிட்டால் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
மறைமுக வரி விதிக்கும்போது, அரசு கருணையோடு செயல்பட வேண்டியது அவசியம். காரணம், ஏழை பணக்காரன் வேறுபாடு இல்லாமல், எல்லாரையும் இந்த வரி விதிப்பு பாதிக்கும். வருமான வரியை உயர்த்தினால், அதிகம் சம்பாதிப்போர்தான் பாதிக்கப்படுவார்கள். உப்புக்கும் புளிக்கும் வரியை உயர்த்தினால் அது ஏழைகளையும் பாதிக்கும். இந்த சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மோடி அரசு உயர்த்தியுள்ளது.
ஓட்டலுக்குப் போய் 70 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிட்டால் குறைந்தது 10 ரூபாய் வரி கட்ட வேண்டும். இப்படி எல்லாவற்றுக்கும் வரியை உயர்த்தி மக்களைக் கசக்கிப் பிழிந்து, அரசை லாபம் ஈட்டும் கம்பெனியாக மாற்றியிருக்கிறார் மோடி.
நான் ஒரு இடத்துக்கு பஸ்சில் போனால் 50 ரூபாயில் போகலாம். வாடகை காரில் போனால் 1000 ரூபாய் ஆகும். 950 ரூபாய் எனக்கு நஷ்டம் என்று சொல்ல முடியுமா? என்னுடைய பணம் என் வசதிக்காக செலவு செய்கிறேன். இதில் லாப நஷ்டம் எதுவும் இல்லை. அப்படித்தான், மக்கள் பணத்தில் மக்களுக்கு வசதி செய்கிறது அரசு. ரயில்வேயோ, பஸ் போக்குவரத்துக் கழகமோ, மின்வாரியமோ நஷ்டத்தில் இயங்கினால் அதை சரிகட்ட, ஓரளவுக்குதான் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அதுவும், நிர்வாக சீர் திருத்தம், சிக்கன நடவடிக்கை ஆகியவற்றை எடுத்த பிறகுதான் கட்டண உயர்வுக்கு வர வேண்டும். அதன் பிறகும் நஷ்டம் வந்தால், அரசு மறு முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இங்கே என்ன நடக்கிறது? உடனடியாக கட்டணத்தை உயர்த்தி, மக்கள் தலையில் சுமையை ஏற்றுகிறார்கள்.
பெரிய முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்து, அது வராக்கடன் என அறிவித்து திவாலாகும் அரசு வங்கிகளில் மத்திய அரசு மறுமுதலீடு செய்கிறது. ஆனால், மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் நஷ்டப்பட்டால், மறுமுதலீடு செய்யாது. கட்டணத்தை உயர்த்தி மக்களை சுரண்டும். என்ன நியாயம் இது?
இப்போதுள்ள நிலையில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவன் பணக்காரன் அல்ல. பணத்துக்கு இருக்கும் மதிப்பைப் பார்க்கும்போது மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவனை நடுத்தர வர்க்கமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஒருவர் ஆண்டுக்கு 15 லட்சம் சம்பாதிக்கிறார் என்றால், வருமான வரியாக 33 சதவீதம் அதாவது 5 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். வரி விலக்கு தள்ளுபடியெல்லாமும் கழித்தால் கூட இரண்டரை லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் வருமான வரி கட்ட வேண்டும். இது, கிட்டத்தட்ட 20 சதவீதம். வரி கட்டிய பணத்தில், வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் வாங்கவும், சேவைகளைப் பெறவும் செலவு செய்கிறார். ஒவ்வொரு பொருளை வாங்கும்போதும், சேவையைப் பெறும்போதும் வரி கட்டுகிறார். இப்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதப்படிப் பார்த்தால் சராசரியாக 18 சதவீதம் வரி கட்ட வேண்டும். மொத்தத்தில், அவர் சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 38 சதவீதம் தொகையை அரசுக்கு வரியாக செலுத்துகிறார். இவ்வளவு வரி செலுத்தும் அவருக்கு அரசு என்ன செய்து கொடுக்கிறது? அவருக்கு வேண்டாம், ஏழை மக்களுக்கு என்ன கொடுக்கிறது?
தரமான இலவசக் கல்வி கொடுக்கிறதா? தரமான இலவச மருத்துவ சிகிச்சை கொடுக்கிறதா? நல்ல சாலை கொடுக்கிறதா? தடையில்லாத மின்சாரம் கொடுக்கிறதா? இதுவெல்லாம்கூட வேண்டாம், குடிக்க நல்ல தண்ணீர் கொடுக்கிறதா? இல்லையே? பின் எதற்காக இவ்வளவு வரி?
ஒருவர் கார் வாங்கினால், வாங்கும்போதே சாலை வரி கட்டுகிறார். பிறகு பெட்ரோல் போடும்போது, ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ஒரு ரூபாய், ரோடு செஸ் என்று வாங்குகிறது அரசு. இவ்வளவும் கொடுத்த பிறகும், சாலைகளை தனியாருக்குக் கொடுத்துவிட்டு, டோல் வசூலிக்கிறார்கள். சாலை வரியும் பேட்ரோல் விலையில் சேர்க்கப்படும் ரோடு செஸ்சும் எங்கே போகிறது? பதில் இல்லை.
ஒவ்வொரு குடிமகனும் தன் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமாம். இப்படிச் செய்தால், நாம் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறோம், என்ன வருமானம் வருகிறது? என்ன செலவு செய்கிறோம் என்று அரசு தெரிந்துகொள்ள முடியும். எந்த ஓட்டலில் எவ்வளவு ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு ஏடிஎம் கார்டு மூலம் பணம் செலுத்தினோம் என்பதைக் கூட அரசு தெரிந்துகொள்ள முடியும். நாம் சம்பாதிக்கும் பணம். நம்முடைய பணம். அதை எப்படி செலவு செய்கிறோம் என்று அரசு தெரிந்துகொள்ளலாம். ஆனால், நாம் செலுத்தும் வரிப்பணம் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாது. இதுதான் மக்களாட்சியா? இதை யாரும் கேட்கக் கூடாது. கேட்டால், தேச விரோத முத்திரை குத்தப்படும். நாடு எங்கே போகிறது?
சுதந்திரத்துக்காக போராடியவர்களையும் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களையும் நினைத்தால், வருத்தமாக இருக்கிறது? இதற்குத்தானா இவ்வளவு பாடுபட்டார்கள்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.