என்ன செய்யப்போகிறார் ரஜினி?

ரஜினி போன்றதொரு ஆளுமையின் முக்கியத்துவம் இருக்கிறது. பெருவாரியான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பேச்சு கடந்த 20 ஆண்டுகளாகவே அடிபடுகிறது.

அண்ணாமலை

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் ஒரு விஷயத்தைச் செய்தாலும் செய்தியாகிறது, செய்யாவிட்டாலும் செய்தியாகிறது.

ரஜினி தன் ரசிகர்களைச் சந்திப்பார், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார் என்னும் அறிவிப்புகள் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே வந்துகொண்டிருந்தன. அவர் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவும் இந்தச் ‘சந்திப்பு’ முன்னிறுத்தப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லை. ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. இப்படி நடக்கவில்லை என்பதே செய்தியாகி அதுவும் பரவலாக விவாதிக்கப்பட்டது.

கடைசியில் அந்தச் சந்திப்பு நடந்தேவிட்டது. ரஜினி தன் ரசிகர்களைச் சென்னையில் சந்தித்தார். அரசியல் குறித்துத் தெளிவாகப் பேசினார். அரசியலுக்கு வருவதாக இருந்தால் நேர்மையான அரசியலையே முன்னெடுப்பேன் என்றும் பணம் சம்பாதிக்கலாம் என்னும் எண்ணத்தில் இருப்பவர்கள் இப்போதே விலகிவிடலாம் என்றும் சொன்னார்.

இந்த எச்சரிக்கைதான் ரஜினியின் அரசியல் பிரவேசத் திட்டம் குறித்த தெளிவான அறிகுறியை அளிக்கிறது. அரசியலுக்கு வந்தால் நேர்மையாகவே நடந்துகொள்வேன் என்று சொன்னதோடு அவர் நிறுத்தவில்லை. என்னை வைத்துப் பணம் சம்பாதிக்கலாம் என்று கனவு காணாதீர்கள் என்று சொல்வதோடு நிறுத்தவில்லை. அத்தகையவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதாவது, பயிர் வளர்வதற்கு முன்பே களை எடுக்கிறார். அல்லது நிலத்தை இப்போதே பண்படுத்த ஆரம்பித்திவிட்டார் என்று சொல்லலாம்.

தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியல் வெற்றிடம் மாபெரும் மாற்றத்தைக் கோருகிறது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் களத்தில் இல்லை. ஆளும் அதிமுக இரண்டாகப் பிளந்து நிற்கிறது. தன் வெற்றிச் சின்னத்தையும் இழந்து நிற்கிறது. அதன் பொதுச் செயலாளரும் துணைப் பொதுச் செயலாளரும் சிறையில் இருக்கிறார்கள். மாநில ஆட்சி மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நிர்வாக முடக்கம், பெருகிவரும் லஞ்ச லாவண்யம் ஆகிய குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆங்காங்கே பெரும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆட்சியின் செயல்திறன் கேள்விக்கு உள்ளாகிறது. விரைவில் தேர்தல் வரும் என்னும் ஆரூடங்களுக்கு ஆளுங்கட்சியின் பலவீனமான நிலையே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சுறுசுறுப்பாகச் செயல்பட்டாலும் கருணாநிதியின் செயலூக்கத்தையும் மதியூகத்தையும் கட்சி இழந்து நிற்கிறது. பிற எதிர்க்கட்சிகள் அவ்வப்போது குரலெழுப்பினாலும் யாருமே இந்த இடைவெளியை நிரப்பக்கூடிய வகையில் எழுச்சி பெறவில்லை.

இன்னொரு புறம் சமூக அளவில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற வரலாறு காணாத போராட்டம், புதுதில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், நெடுவாசல் போராட்டம் எனப் பல்வேறு தருணங்களில், பல்வேறு தளங்களில் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறார்கள். இந்தக் கொதிப்புக்கு வடிவம் கொடுத்து மாபெரும் அரசியல் இயக்கமாக உருவாக்கக்கூடிய ஆளுமை யாருமே இன்று இல்லை. 1977இல் நெருக்கடி நிலைக்கு எதிரான உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க ஜெயப்பிரகாஷ் நாராயண் என்னும் மாபெரும் தலைவர் இருந்தார். ஜனதா கட்சி உதயமாயிற்று. 1996இல் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்கள் கருத்துக்கு வடிவம் கொடுக்க கருணாநிதி இருந்தார். 2011இல் கருணாதிக்கு எதிரான உணர்வுகளுக்கு வடிகாலாக ஜெயலலிதா இருந்தார். இன்று நிலவும் நிச்சயமற்ற நிலையைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய ஆளுமையோ அமைப்போ இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில்தான் ரஜினி போன்றதொரு ஆளுமையின் முக்கியத்துவம் இருக்கிறது. பெருவாரியான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பேச்சு கடந்த 20 ஆண்டுகளாகவே அடிபடுகிறது. அவரும் ‘புலி வருது’ கதையாக அந்தப் பேச்சு மறைந்துபோகாத வகையில் அவ்வப்போது சில சலனங்களை ஏற்படுத்திவருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களைச் சந்தித்தபோது “கடமையைச் செய் பலனை எதிர்பார்” என்று பகிரங்கமாக அறிவித்தார். இப்போது, பணத்தாசை பிடித்தவர்களை விரட்டுகிறார். தன்னுடைய அரசியல் தூய்மையான அரசியலாக இருக்கும் என்கிறார். இன்றைய சமூக அர்ஃஅசியல் சூழலைக் குறித்த பிரக்ஞையுடன் முன்வைக்கப்பட்ட கருத்தாகவே இது தோன்றுகிறது.

ஜனநாயக நாட்டில் யாரையும்போல ரஜினி அரசியலுக்கு வரலாம். மக்கள் ஆதரவு இருந்தால் வென்று ஆட்சியும் அமைக்கலாம். அப்படிப்பட்ட திட்டம் இருந்தால் ரஜினி தன் விருப்பத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அரசியல் என்பது கண்ணாமூச்சி விளையாட்டு அல்ல. ஒருபுறம் நான் அரசியலுக்கு வந்தால் நியாயமாக நடந்துகொள்வேன் என்பது, மறுபுறம் நாளை நடப்பதைக் கடவுள்தான் அறிவார் என்பது. இதெல்லாம் மக்களைக் குழப்பும் வேலை.

ரஜினி தன் நிலையைத் தெளிவாக முன்வைப்பது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் அரசியலுக்கும் நல்லது.என்ன செய்யப்போகிறார் ரஜினி?

×Close
×Close