ஆன்மீக அரசியல் எப்படியிருக்கும்?

ஆன்மீக அரசியல் வந்தவுடன் மக்களிடையே சுயமறியும் ஆவலும், சுயமரியாதைத் தேடலும் அதிகப்படும். அதுவே உண்மையான மக்களாட்சியாய் மலரும்.

thirumaran

பூ.திருமாறன்

சமூக வலை தளங்கள், பத்திரிகைகள், மீடியாக்கள் என எங்கு திரும்பினாலும் ‘‘ஆன்மீக அரசியல்’’ பற்றிதான் பேச்சு. எல்லாம் 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர்தான். ‘‘ஆன்மீக அரசியல்’’ என்ற வார்த்தை இவ்வளவு பெரிய விவாததை ஏற்படுத்தும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அதுதான் ரஜினி. இதுவே நல்ல தொடக்கமாக நம்பிக்கையை வளர்க்கிறது. காந்தியடிகளின் தியாகக் குருதி இன்னமும் காயவில்லை என்பதை உணர முடிகிறது.

மீண்டும் காந்தியம் திரும்புமா? காந்திய அரசியல் சாத்தியமா? அராஜகங்கள் மருவி அஹிம்சா பாதை திரும்புமா? தியாக மனப்பான்மை மேலோங்குமா? சத்தியாகிரஹ சரித்திரம் உருவாகுமா? சிரமதானம் மக்களிடையே சிறக்குமா? ஜனநாயகப் பாதை புலப்படுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் ‘‘ஆன்மீக அரசியல்’’ என்ற உரத்த சிந்தனை அட்சதை தூவி வரவேற்றிருப்பதே நிஜம்.

‘‘ஆன்மா’’ இதைப் பலர் நம்புவதில்லை. சந்தேகமிருப்பவர்கள் தேடலும் வேறு வேறு திசைகளே. கண்ணால் கண்டால் மட்டுமே நம்புவேன் என கூறுபவரும் உண்டு. எல்லாம் சரிதான் கண்களால் பார்ப்பதையாவது அறிவு சார்ந்து முடிவு செய்யாதோர் கூட்டம்தான் அதிகம். நாம் அன்றாடம் பார்க்கும் சூரியன். காலை, பகல், மாலை என தினம் தினம் தான் பார்க்கிறோம். இது பற்றி கற்றவரிடமே கேட்டுப் பார்ப்போம். அதிகாலையில் சூரியன் எங்கு உதிக்கும். கிழக்கே. காலை எட்டு மணிக்கெல்லாம் பகலவன் எங்கிருப்பான்? கிழக்கே தான் என பதில் வரும். மதியம் பன்னிரெண்டு மணிக்கு என வினா தொடுத்தால், ’அட என்னங்க… உச்சி வானில் இருக்கும்’. மாலை ஆறு மணிக்கு எங்கிருக்கும்? ’அட மேற்கே மறையப் பார்க்கும்’ என்று பதில் வரும். இது அந்த மனிதர் தினம் தினம் பார்ப்பதை, மனதில் பதிந்ததை பதிலாகத் தருகிறார். இதில் என்ன குற்றம் என்று கேட்கின்றீர்களா? சூரியன் அங்கேயே தானே இருக்கிறது. அது ஒன்றும் கிழக்கிற்கும் மேற்கிற்கும், உச்சி வானத்திற்கும் அங்குமிங்கும் ஓடவில்லையே. ஆக தினம் தினம் கண்ணால் பார்க்கும் விஷயமே நாம் சொன்ன பதிலில் பொய்யாகிறது.

மனிதன் உடல், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றால் திகழ்கிறவன். உடல் என்பது பார்வைக்குத் தெளிவாகத் தெரிகிறது. அறிவு என்பது உடல் உறுப்புகளின் வாயிலாகப் பதிவாகும் எண்ணங்களின் தொகுப்பு. ஆன்மா என்பது புரியும் படியாகச் சொன்னால் மனசாட்சி. அறிஞர் குழந்தைசாமி சொல்கிறார், ’சுயநலம் சார்ந்த இன்ப அனுபவங்களையே வாழ்க்கையில் பெற பெரிதும் விரும்பும் மனிதனை நெறிப்படுத்தி மற்ற எல்லோருடைய நலனையும் கருதவைக்கும் ஒரு நடுநிலை வழிகாட்டியே ஆன்மா’ என்று.

ஆன்மா, ஆன்மிகம் என்றாலே பலருக்கு புரிவதில்லை. சிலருக்கு வேப்பங்காய். இன்னும் சிலர் இயற்பியல், கணக்கு வகுப்புகளில் லயிக்காமல் ஜடம் போல உட்கார்ந்திருப்பார். எந்த விஷயத்தையும் எளிமைப்படுத்தலாம். அழகாய் புரியவைக்கலாம். அறிவையும் ஆன்மாவையும் புரியும்படியாகச் சொல்லாமல். பசி நேரத்தில் ஒரு விடுதியில் நமக்கு பரிமாறப்படும் ஐந்து ரொட்டித் துண்டுகளையும், விழுங்கிவிடுவது உடல் காட்டும் வழி. எதிரே அமர்ந்திருக்கும் நண்பனுடன் பகிர்ந்து உண்பது அறிவு காட்டும் வழி. யாரென்றே நமக்குத் தெரியாத பார்வையற்ற நோயாளிக்கு தேவையான ரொட்டித் துண்டுகளை கொடுத்துவிட்டு மீதமிருந்தால் உண்பது ஆன்மா காட்டும் வழி. அதாவது பிறர் நலனை மையப்படுத்தி வாழ்வது இதனை ஆன்மவழி அல்லது பயன் கருதாப் பணி என்று சொல்லலாம்.

ஆன்ம வழிக்கும் கடவுளுக்கும் கிஞ்சத்தும் சம்மந்தமில்லை. ஆன்ம வழிக்கும் சமயங்களுக்கும் சம்மந்தமில்லை. ஆன்மிக அரசியல் என்பதென்ன? அறம் சார்ந்த அரசாட்சி. சிலரிடம் அறம் இருக்கும். அரசாளும் திறமை இருக்காது. நம்மில் பல அரசியல் தலைவர்களுக்கு அரசாளும் திறமை இருக்கிறது. ஆனால் அறமில்லை. அறமும், அரசாளும் திறமும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மகத்தான மனிதனால் மட்டுமே ஆன்மிக அரசியலைத் தரமுடியும்.

மகாத்மா காந்தியடிகளிடம் அறமும் அரசாளும் திறனும் இருந்தது. அறத்தை அவர் வாழ்நாளில் ஒரு போதும் கைவிட்டதில்லை. அரசியலில் காந்தி மகான் ஒரு நாளும் சமரசம் செய்ததில்லை. எதற்கும் வளைந்து கொடுக்காமல் பிடிவாதமாக வாழ்ந்து சென்றார். அரசாளும் திறன் இருந்தும் அவர் அரியணை ஏறவில்லை. அறம் சார்ந்தவர்கள் அரியணையை தவறவிட வேண்டியதுமில்லை. எல்லோருடைய நலனுக்காகவும் உருவாக்கப்பட்டதே ‘‘அரசியல்’’. எனவே அரசியல் என்றாலே ஆன்மீக அரசியல்தான். அரசியலை தொலைத்துவிட்டு தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் ‘‘ஆன்மீக அரசியல்’’ என்ற குரலை நம்மவர்களில் சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அது புதிதாகத் தெரிகிறது.

ஆன்மீக அரசியலை ஒருவர் மேற்கொண்டால் மக்களிடம் சுபிட்சம் பிறக்கும். அமைதி நாற்திசையிலும் வியாபித்திருக்கும். வேற்றுமைகள் வேரருந்து வீழ்ந்து கிடக்கும் உடலுழைப்பு மகத்துவம் பெறும். அஞ்சாமையை மக்கள் அணிகலனாய் அணிந்து மகிழ்வர். ஆன்மீக அரசியலில் மனிதன் தனது முழு ஆளுமையை உணர்ந்து வளர்த்துக் கொள்ள வழி இருக்கும். அதே போல் ஆன்மீக அரசியலில் பிறர் தங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள ஆன்மீக அரசியல் தலைவனின் போக்கு குறுக்கீடு செய்யாமல் இருக்கும். இப்படி ஒரு அற்புத அரசியல் மாற்றம் நிகழ முதல் தேவை ஒவ்வொருவரும் தங்கள் உடலால் உழைத்து உணவைத் தேடி புசிக்க வேண்டும். பிறருடைய உழைப்பை மதித்து அவர்களது உற்பத்தியை வாங்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். உடலால் உழைப்பவர்கள் நேர்மையாளர்களாய் விளங்குவார்கள். இந்த சூழ்நிலையில் லஞ்சமும், ஊழலும், திருட்டும், கொள்ளையும், ஏமாற்றும் பித்தலாட்டங்களும் தாண்டவமாடாது.

ஆன்மீக அரசியலா… அதென்ன ஆன்மீக அரசியல். ஒன்றும் புரியலையே. ஆன்மீகம் வேறு. அரசியல் வேறு. இரண்டையும் குழப்புகிறார். ஆன்மீக அரசு சாத்தியமே இல்லை என்று தமிழக அரசியல் கட்சியினர் ஊடகங்களில் பூடகமாகப் பேசி வருகின்றனர். தெரியாததை தெரியவில்லை என ஒத்துக் கொள்வதே ஞானத்தின் முதல் படி.

ஆச்சார்ய விநோபாஜி ஆன்மீக அரசியல் பற்றி கூறியுள்ளார். ஆன்மீகம் வேறு மதங்கள் வேறு. விநோபாஜியுடன் பல காலம் பூமிதானத்திற்காக நடந்து சென்ற பெரியவர், காந்தியவாதி கே.எம். நடராஜன், ஆன்மீக அரசியல் சாத்தியமா? என்று கேட்டேன். ’கண்டிப்பாக சாத்தியம்’ என்று கூறியதோடு மட்டுமின்றி விளக்கமும் தந்தார். ’எல்லா மதங்களுக்கும் ஆன்மீக தான் அடிப்படை. ஆன்மிகத்தை அடிப்படியாக கொண்டதுதான் சமயங்கள். இந்து, கிருஸ்தவம், இஸ்லாம், பவுத்தம், சீக்கியம் என உலகின் அத்தனை சமயங்களும் ஆன்மீகத்தின் அடிப்படியே. பலர் நினைப்பது போல ஆன்மீகம் என்ற சமஸ்கிருதச் சொல்லானது, இந்து சமயத்தைக் குறிப்பதல்ல.’

ஆன்மிகம் பற்றி முழுமையாக அறிய ஞானிகள் பக்கம் செவிகளைத் திறக்க வேண்டும். பலபல ஞானிகளும், துறவிகளும் தங்கள் முதுமை காலம் வரை தேடியும் ‘‘ஆன்மா’’ பற்றி முழுமையாக அறிய முடியவில்லை. அது ஒரு தேடல். படிப்படியாக நகர்ந்து கால், அரை, முக்கால் என முன்னேறும் ஒரு நகர்வே ‘‘ஆன்ம நகர்வு’’. ஆன்மா பற்றி விளக்கச் சொன்னால் ஒரு ஞானியால் பொருள சொல்ல முடியுமே தவிர அதனை முழுமையாக விளக்கிக் கூறுவது சிரமம்.

ஒடிசலான ஒரு மனிதன். உருவத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லாத வேகம் – சாதனை – உருவாக்கம். எப்படி சாத்தியமிது என குழம்பிக் கொண்டிருந்தால், அதுதான் ‘‘ஆத்ம வீரியம்’’ என்ற பதில் வரும். வியப்பு தரும் விஷங்கள் மிக சாதாரணமாக சாதாரண மனிதரால் நடத்திடும் போது, இதெப்படி இவரால் நடந்திருக்கும் என வினா உதயமாகும் போது, அதுதான் ‘‘ஆத்ம வீரியம்’’ என்று சொல்லப்படும். ஆன்மா, ஆன்மீகம், ஆன்மீக அரசியல் இவைகளுக்கு குழப்பதில் பதம் தேடிக் கொண்டிருப்பவர்கள், ‘‘இருட்டில் தொலைத்ததை வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருக்கும்’’ அதிபுத்திசாலிகள். பொருள் கடைசி வரை கிடைக்கப்போவதுமில்லை. பொருள் இறுதி வரை புரியப்போவதுமில்லை.

ஆன்மீக அரசியல் தலைவர் எப்படி இருப்பார்? நேர்மையாளராய் இருப்பார். உழைத்துப் பிழைப்போராக இருப்பார். உறுதியானவராக இருப்பார். அஞ்சாமையை அணிகலனாக அணிந்திருப்பார். எளிமையான வாழ்வு அவரின் இயற்கை நடைமுறையாக இருக்கும். எதனையும் இலவசமாக வேர்வை சிந்தாமல் பெற மாட்டார். இழிநிலைக்கு ஒரு போதும் ஆளாகமாட்டார். மக்களோடு மக்களாக அவர்கள் உண்பதை உண்டு, குடிப்பதை குடித்து, அன்றாட துன்பங்களை நன்றாகவே அறிந்திருப்பார். முக்கியமாக பிரச்னைகளுக்குத் தீர்வாக ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்காமல் தாமே முன் நின்று தீர்க்க முயலும் தலைவராக திகழ்வார். புலனடக்கத்துடன் சுய அடக்கமும் அவரிடம் இருக்கும். ஜாதி, மத, இன, நிற ஏற்றத்தாழ்வு பாராத ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை பாராத காந்திய வழி தலைவராக பார்க்கப்படுவார்.

இதுவரை ‘‘நடித்துக் காட்டிய’’ ரஜினிகாந்த், இனி ‘‘நடத்திக்காட்டுவதற்கு’’ நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நூற்றாண்டில் காந்தியடிகள், விநோபாஜி மறைவுகளுக்குப் பின் ‘‘ஆன்மீக அரசியல்’’ என்ற வார்த்தைகளை முதன் முதலில் பயன்படுத்தியதே ரஜினிதான். இது சாதாரண விஷயமில்லை. இதற்காகவே ஜாதி, மத, இன, நிற, அரசியல் பாகுபாடின்றி ரஜினியின் வார்த்தைகளை வரவேற்க வேண்டும். ரஜினி இந்து மதத்தில் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, ஆய்ந்து நிற்பவர் தான். ஆனால் ஆன்மீக அரசியல் என அவர் மொழிந்தது அவர் வாழ்வியல் முறைகளைக் கடந்தது. அதனை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அரசியல் வாழ்வில் சமரசம் செய்யாதவர்கள், ஆடம்பரமும் பகட்டும் இல்லாதவர்கள், எளிமை வாழ்வு வாழ்பவர்கள், மக்களின் அன்றாடத் துன்பங்களை அனுபவித்து அறிந்தவர்கள் ஆரியம் – திராவிடம் – அன்னியம் என குறுக்குச் சால் ஓட்டாதவர்கள், உடல் உழைப்பால் உண்பவர்கள், அடக்கமானவர்கள் ரஜினியை தாராளமாக விமர்சிக்கலாம். அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?

ஆன்மீக அரசியல் வந்தவுடன் மக்களிடையே சுயமறியும் ஆவலும், சுயமரியாதைத் தேடலும் அதிகப்படும். அதுவே உண்மையான மக்களாட்சியாய் மலரும். சுபிட்சம் நீக்கமற நிறைந்து நிற்கும்.

வீழ்க கலியின் வலி எல்லாம்!
கிருத யுகம்தான் மேவுகவே!
பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினை கொணர்வேன்!

என்ற முண்டாசுக்கவி பாரதி சொன்னதுதான் ‘‘ஆன்மீக அரசியல்’’. அறிவிப்பால் நமக்கு நினைவுக்கு வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி, காந்தி தந்த சுதந்திர மணத்தில் அரசியல் தூய்மைப்படட்டும். தூயவர்கள் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்தட்டும். படித்தவர், படிக்காதவர், பாமரன், விவசாயி, அதிகாரி, அலுவலர், பெண்டிர், இளையோர், வர்த்தகர்கள், வயதானோர், தொலை நோக்கச் சிந்தனையாளர்கள், தூயவர்கள், உழைக்கும் வர்க்கம், ஞானிகள், விஞ்ஞானிகள் மாற்று அரசியலுக்காக காத்திருந்தோர், சகல மதத்தார், ஒட்டு மொத்த மனித குலத்தார் நம்மெல்லோருக்கும் புதிதாய் தெரியும் ஆன்மீக அரசியலை ஆதரிப்போம். அது ஒன்றுதான் வழியே தவிர, வேறெதுவும் இல்லை. ஜெயிக்கட்டும் புது முயற்சி.

கட்டுரையாளர் பூ.திருமாறன், அகில இந்திய ரஜினிகாந்த் ரத்ததான கழக நிறுவனர், சமூக சேவகர்.

×Close
×Close