நிலம், கடல், பெண்

பயிர் காலத்தில் ஆண் நிலத்தில் 1860 மணி நேரம் வேலை பார்த்தால் பெண் 3300 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் அவர்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படவில்லை.

கவிதா முரளிதரன்
(தி இந்தியன் எக்ஸ்பிரஸில் கவிதா முரளிதரன் எழுதி ஜூன் 7ம் தேதி வெளியான கட்டுரை. தமிழாக்கம் கவிதா முரளிதரன். இணைப்பு : //indianexpress.com/article/india/what-is-the-connection-between-women-land-and-the-sea-in-tamil-nadu-4692821/ )

கேட்டு கேட்டு சலித்துப் போன கதைதான் பார்வதியினுடையது. தமிழ்நாட்டை இன்று நெருக்கிக்கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற பெண்களில் பார்வதியும் ஒருவர். ஒரு குடம் தண்ணீர் எடுக்க பல மைல்கள் நடக்கும் ஆயிரக்கணக்கான பெண்களில் அவரும் ஒருவர்.

பெண்களை விவசாயிகளாக அங்கீகரிக்க மறுக்கும் ஒரு நாட்டில் பார்வதியின் இருப்புக்கு என்ன மரியாதை இருக்கும்? விவசாயிகளின் நிலை மிகவும் வீழ்ந்திருக்கும் ஒரு சூழலில் ஒரு பெண் விவசாயியாக இருப்பது எத்தனை துயரமான விஷயம்? பார்வதியின் இருப்புக்கும் அங்கீகாரம் இல்லை, அவரது கணவரின் மரணத்துக்கும் அங்கீகாரம் இல்லை என்பது எவ்வளவு கொடுமையான நிலை?

திருவண்ணாமலை செங்கத்தில் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்க்க தொடங்கும் போது பார்வதிக்கு வயது 9. இன்று 57 வயதிலும் அவருக்கென்று நிலம் இல்லை. குத்தகை நிலத்தில் நாளெல்லாம் உழைத்தாலும் கடன் சுமை தாங்காத கணவர் தங்கவேலு மாரடைப்பால் கடந்த ஜனவரியில் உயிர் விட்டார். வெறும் ஐம்பதாயிரம்தான் அவர் செலுத்த வேண்டிய கடன். குத்தகைக்கு எடுத்த 2 ஏக்கர் நிலத்தில் கடந்த மூன்று வருடங்களாகவே எந்த விளைச்சலும் இல்லை. இப்போதும் விவசாயத்திலும் ஆடு மாடுகளை மேய்பதிலும்தான் வாழ்க்கைகான நம்பிக்கையை வைத்திருக்கிறார் பார்வதி.

Women - Land - Sea - cover-image 1
விவசாய உரிமைகளுக்கான பெண்கள் கூட்டமைப்பு-தமிழ்நாடு அமைப்பின் அறிக்கை படி, பெண்கள் விவசாயத்தில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். பயிர் காலத்தில் ஆண் நிலத்தில் 1860 மணி நேரம் வேலை பார்த்தால் பெண் 3300 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். ஆனாலும் அவர்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில், விவசாயி என்கிற அங்கீகாரம் நில உரிமையிலிருந்து வருகிறது. 2010-11 சென்சஸ் படி, 12.69 சதவிகித பெண்களுக்கே நில உரிமை இருக்கிறது. இதில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களும் அடங்கும் என்பதால் உண்மையில் பெண்கள் நிலத்தின் உரிமையாளர்களாக இருப்பது மிக மிக குறைவு. நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத நிலையில் அரசு திட்டங்களும் சலுகைகளும் கிடைப்பது மிகுந்த கடினமாயிருக்கிறது. தவிர, கூலியிலும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆண்களுக்கு ஒரு கூலியும் பெண்களுக்கு ஒரு கூலியும்தான் விவசாய தொழிலில் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆனால் இது போன்ற எந்த பிரச்னையும் பார்வதி போன்றவர்களை விவசாயத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்கிற நிலைக்கு தள்ளுவதில்லை.

விவசாயத்தை விட்டால் வேறு கதியில்லை என்பதே அவர்களது நிலையாக இருக்கிறது.
கடுமையான வறட்சி காரணமாக வேலை கிடைக்காத நிலையில் கட்டிட தொழில், மீன் தொழில் போன்றவற்றுக்கு வேலைக்கு வர சொல்லி ஏஜெண்டுகள் பல பெண் விவசாய தொழிலாளர்களை நிர்பந்திக்கிறார்கள். ”ஆனால் விவசாயம் தவிர அவர்களுக்கு எங்கும் சரிபட்டு வரவில்லை. கட்டிட தொழிலுக்கு போய் முடியாமல் திரும்பிய பெண்களை பார்த்திருக்கிறேன். விவசாயத்தைப் பொறுத்தவரையில் பல மைல்கள் கடந்து அவர்கள் செல்ல வேண்டுமென்றாலும் பிரச்னை இல்லை. அதிகாலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்பும் பெண்களை எல்லாம் தெரியும். ஆனால் வேறு வேலை என்றால் வேண்டாம் என்றுவிடுகிறார்கள்” என்கிறார் பெண் விவசாய தொழிலாளர்களுடன் பணி புரியும் சி.பி.ஐயின் முன்னாள் எம்.எல்.ஏ பி.பத்மாவதி.

Women - Land - Sea - cover-image w

அதற்கு காரணம் பிற வேலைகள் கடினமானது என்பதல்ல. நிலத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொன்மையான உறவுதான் என்கிறார் பத்மாவதி. ”வாடிய பயிரை கண்டு ஆண்கள் சுருண்டு விழ காரணம், அது பணப் பிரச்னை என்பதால் மட்டுமல்ல. நிலமும் பயிர்களும் அவர்களது வாழ்வியலின் ஒரு பகுதி. பெண்களுக்கு நேரடியாக பெரும்பாலும் நிலத்தோடு தொடர்பு இருப்பதில்லை. ஆனால் உறவு இருக்கிறது. அவர்களால் நிலத்தை நீங்கி இருக்க முடியாது. தன் நிலத்துக்கு ஏதும் தீங்கு என்றால் அதை பொறுத்துக்கொள்ளவும் முடியாது” என்கிறார் பத்மாவதி.

பொதுவாகவே இயற்கையை அச்சுறுத்தும் பிரச்னைகளுக்கு எதிராக பெண்கள்தான் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்கு சிப்கோ இயக்கம் தொடங்கி பிளாச்சிமாடா வரை பல உதாரணங்கள் இருக்கின்றன. கடலில் இறங்கி மீன் பிடிக்காவிட்டாலும் கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் பெண்கள். திருநெல்வேலி விட்டு தாண்டாதவர் மில்ரெட். அணுவுலைக்கு எதிராக மனு கொடுக்க வேண்டுமென்று சென்னைக்கும் மும்பைக்கும் செல்கிறார். “இது நல்லா இல்லையா, நீங்க சுதந்திரமா உணர்றீங்கதானே?” என்று ஒரு முறை அவரிடம் கேட்டேன். “உண்மையிலேயே எனக்கு சுதந்திரம் என்னோட கடலுக்கு கிட்டதான். இப்போ இப்படி போறதெல்லாம் அந்த கடலை காப்பாத்ததான். கௌரவமான ஒரு வாழ்க்கையை எனக்கு கடல் தருது. அதை அணு உலை பறிக்க பார்க்குது. அத எதிர்த்துதான் இந்த போராட்டம்” என்று மில்ரெட் சொன்னார்.
கௌரவமான வாழ்க்கை என்கிற ஒற்றை நோக்கம்தான் பார்வதியையும் மில்ரெடையும் ஒன்றிணைக்கிறது. தங்கள் நிலத்தையும் நீரையும் காப்பாற்ற முனையும் அவர்களது போராட்டம்தான் அவர்கள் ஒன்றிணையும் புள்ளி. ஆனால் அவர்கள் எழுப்பிக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு எப்போது பதில் கிடைக்கும்?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close