Advertisment

ஜெயலலிதா மரணத்தில் மத்திய அரசுக்கு என்ன தொடர்பு?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள், இது தொடர்பாக அமைச்சர்கள் பேட்டிகள், மத்திய அரசை குற்றம்சாட்டும் வகையில் அமைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi - jaya - rao

ச.கோசல்ராம்

Advertisment

ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு முடியவில்லை. ஆனால், அவருடைய மரணம் குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போகிறது. இந்த விவகாரம் உச்சத்தை அடைவதற்கு காரணம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

திண்டுக்கல்லின் கடந்த 24ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘நீங்கள் எல்லோரும் எங்களை மன்னிக்க வேண்டும். ஜெயலலிதா, மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது பொய். நாங்கள் யாருமே மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை. சசிகலா சொன்னதைத்தான் நாங்கள் வெளியே சொன்னோம்’ என்றார்.

ஒரு அமைச்சரே நாங்கள் பொய் சொன்னோம் என்று சொல்கிறார். அவர் தங்கள் கட்சியின் தலைவர் உடல் நிலை பற்றி சொன்னதாக சொல்கிறார். ஆனால் அவர் தமிழக முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது பொய்யை மன்னித்துவிடலாம். ஒரு முதலமைச்சரின் உடல் நிலை குறித்து மக்களிடம் பொய் சொன்ன அவர், இன்னும் என்னென்ன விஷயங்களில் பொய் சொல்லியிருப்பாரோ? என்ற கேள்வியும் எழுகிறது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதி செய்துள்ளார். வேறு சில அமைச்சர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள் நிலோபர் கபீர், செல்லூர் ராஜூ ஆகியோர், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாக சொல்கிறார்கள். அமைச்சர்களில் யார் சொல்வது உண்மை. யார் சொல்வது பொய் என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை பதில் சொல்லவே இல்லை.

இதையெல்லாம் விட, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஒன்று, காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் என்ன வாதம் முன் வைக்க வேண்டும் என்பது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது, அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை வழங்கியதாக, பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கப்பட்டது.

இரண்டாவது, தஞ்சை, அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களுக்கு சின்னம் ஒதுக்க, ஜெயலலிதா கைநாட்டு வைத்தார். அதை தேர்தல் கமிஷனும் ஏற்றுக் கொண்டது. திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், தேர்தல் கமிஷன் செயலாளரை கோர்ட் ஆஜராகி பதில் சொல்ல உத்தரவிட்டுள்ளது.

ஜெயல்லிதாவின் ரத்த சொந்தமான அவரது அண்ணன் ஜெயராமனின் மகன் தீபக் டிவி பேட்டியொன்றில், ‘முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மட்டுமே சுய நினைவோடு இருந்தார். கவர்னர் வித்யாசாகர் ராவ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் வந்த போது, முதல்வர் சுய நினைவோடு இல்லை’ என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார்.

அதே நேரத்தில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அக்டோபர் 1ம் தேதிக்கு பின்னர் சசிகலா, ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் மருத்துவமனையில் ஒரு அறையில் தங்கியிருந்தார் என்று சொல்கிறார்.

சுய நினைவோடு இல்லாத ஜெயலலிதாவுக்கு யார் கண்காணிப்பில் சிகிச்சையளிக்கப்பட்டது? மருத்துவமனையில் இருந்து ஏன் காய்ச்சல், நீர் சத்து குறைபாடு என அறிக்கை கொடுக்கப்பட்டது. அப்படியொரு அறிக்கையைக் கொடுக்கச் சொன்னது யார்?

இரண்டு முறை கவர்னர், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சென்று சந்தித்தார். எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவை ஆய்வு செய்தது. எய்ம்ஸ் டாக்டர்களும் ஏன் உண்மை நிலையை கவர்னருக்குச் சொல்லவில்லை. அரசியல்சாசனத்தின் படி முதல்வர் சுய நினைவோடு செயல்படுகிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை கவர்னருக்கு இருக்கிறதா? இல்லையா? அப்படியானால், கவர்னர் தன்னுடைய கடமையை செய்ய தவறிவிட்டாரா?

தீபக் சொன்ன இன்னொரு விஷயத்தையும் நான் இங்கே நினைவு கூற வேண்டும். ‘அப்பலோ மருத்துவமனை அதிபர் பிரதாப் ரெட்டியின் மகள் பிரித்தா ரெட்டியின் கணவரிடம் பிரதமர் மோடி பேசி, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தெரிந்து கொண்டார்’ என்று சொல்கிறார். அப்படியானால் பிரதமருக்கு முதல்வரின் உடல் நிலை குறித்த எல்லா விபரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தெரிந்திருந்தும் பிரதமர் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் என்ன?

அப்படியானால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தாரா? மத்திய அரசுக்கு எல்லாம் தெரிந்திருந்தும், எப்படி அனுமதித்தார்கள்? முதலமைச்சர் செயல்பட முடியாத சூழல் இருந்த போது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கைநாடு போட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்பது மத்திய அரசுக்குத் தெரியுமா? தெரியாதா?

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டின் போது, ஜெயலலிதா கைநாட்டை வாங்கிய அரசு மருத்துவர் பாலாஜிக்கு ரூ. 5 லட்சம் கொடுத்ததாக ஆதாரம் கிடைத்ததே. அப்போது கூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வளவு நாட்களாக தமிழக மக்கள் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியில் சசிகலாவும் அவர் குடும்பமும் இருப்பதாக நம்பினார்கள். இப்போது வரும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, ஜெயலலிதா மரணத்தின் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

S Kosalram Sasikala Governor C Vidyasagar Rao
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment