எதிர் காலம் என்னாகும்?

மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறாது.

இரா.குமார்

”கஷ்டப்படாமல், ஜாலியா இருக்கணும்னா வாத்தியார் வேலைக்குப் போ. வாரத்துல இரண்டு நாள் லீவு. கால் பரீட்சை லீவு, அரைப் பரீட்சை லீவு, முழு பரீட்சை லீவு, திருவிழா வந்தால் லீவு, மழை பெய்தால் லீவு என்று வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் லீவு. கோல் எடுத்தோமா, மேய்ச்சமா, மணி அடிச்சுதா வீட்டுக்குப் போனோமான்னு இருக்கலாம்” என்று ஆசிரியர் பணி பற்றி ஒரு காலத்தில் சொல்வார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர் பணி இப்போது ஆபத்து மிக்கதாகவும் அழுத்தம் தருவதாகவும் மாறிவிட்டது.

ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; ஆசிரியர் மீது வழக்குப் பதிவு, பணியிடை நீக்கம். ஆசிரியை திட்டியதால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை; ஆசிரியை கைது. இப்படிப்பட்ட செய்திகள் அடிக்கடி வருவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட சூழல், ஆசிரியப் பணியை கஷ்டமான ஒன்றாக மாற்றிவிட்டிருக்கிறது.

பழங்காலத்தில் குருகுல வாசம் முறை இருந்தது. மன்னனின் மகனாக இருந்தாலும் குருவின் வீட்டோடு தங்கி கற்க வேண்டும். குருவுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். தன் இருப்பிடத்தை அவனே சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தன் வேலைகளைத் தானே செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம், கல்வியை மட்டுமல்லாது, வாழ்க்கையையும் வாழும் முறையையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.

குருகுல வாசம் போய், பள்ளிக் கல்வி முறை வந்தது. அதுவும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. வாரத்தில் ஒருநாள் நீதி போதனை வகுப்பு இருந்தது. பண்பை ஆசிரியர்கள் போதித்தார்கள். வாழ்க்கை முறையை சொல்லிக்கொடுத்தார்கள். மாணவர்களை நல்ல குடிமகனாக உருவாக்கும் பயிற்சிப்பட்டறையாக பள்ளிகள் விளங்கின.

இப்போது நிலைமை மாறிவிட்டது. கல்வி, பணம் சம்பாதிப்பதை நோக்கியதாக மாறிவிட்டது. அதிக மதிப்பெண் பெற வேண்டும். உயர்கல்வி படிக்க இடம் கிடைக்க வேண்டும். படித்துவிட்டு நல்ல வேலைக்குப் போகவேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதை நோக்கியதாக மாறிவிட்டது கல்வி. நீதி போதனை வகுப்புகள் இப்போது இல்லை. மாணவர்களை அதிக மதிப்பெண் வாங்க வைப்பதே பள்ளியின் குறிக்கோளாகிவிட்டது. கற்றல், கற்பித்தல் இரண்டுமே பணம் சம்பாதிப்பதையே மையாமாகக்கொண்டுவிட்டன. இதனால், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் அதிகரித்துவிட்டது. மாணவர்கள், மதிப்பெண்களை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால், வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாமல், பிரச்னைகளை சமாளிக்கும் நெஞ்சுரம் இல்லாதவர்களாக வளர்கின்றனர்.

சரி… பள்ளியில்தான் இப்படி. வீட்டில் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள்? முன்பெல்லாம் குழந்தைகளைக் கதை சொல்லி தூங்க வைப்பார்கள். அந்தக் கதைகளில் தலைவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் இடம்பெறும். வீரர்கள், சாதனையாளர்கள் பற்றிய கதைகள் இருக்கும். இந்தக் கதைகள், குழந்தைகள் மனத்தைப் பக்குவப்படுதுபவையாக, வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பவையாக இருந்தன. இப்போது அப்படி இல்லை. கம்ப்யூட்டர் கேம் விளையாடிவிட்டு தூங்குகின்றன குழந்தைகள். இவற்றின் விளைவு, வாழ்க்கையைப் பற்றிய தெளிவு இல்லாமல், பிரச்னையை எதிர்கொள்ளத் துணிவு இல்லாமல், ஆசிரியர் கண்டிப்பதை அவமானமாகக் கருதி தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர் பள்ளி மாணவர்கள்.

இப்படிப்பட்ட சூழல், ஆசிரியப்பணியை மிகவும் சிக்கலாகிவிட்டது. ஏதோ ஒரு ஆசிரியர் அடித்ததில் ஒரு மாணவனின் கண் பறிபோனது என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனால் இப்போது, “அடிப்பியா? அடிச்சுப் பார்” என்று ஆசிரியருக்கு சவால் விடுகிறான் மாணவன். ஆனாலும் அவனைத் திருத்தி, படிக்க வைக்க வேண்டும். எப்படி சாத்தியம்?

பொதுத் தேர்வில், பள்ளியின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனால், சில மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இல்லை. அவர்களைக் கண்டித்து, படிக்கச் சொல்லவும் முடியாது. கண்டித்தால், விஷம் குடிப்பானோ? பிறகு சஸ்பெண்ட், கைது என்ற நிலை ஏற்படுமோ என்ற பயம் ஆசிரியருக்கு. ஆனால், தேர்ச்சி சதவீதம் அதிகரித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் மட்டும் தொடரும். அவர் என்ன செய்வார் பாவம்? இதேநிலை தொடர்ந்தால், ஆசிரியப் பணிக்கு வர அஞ்சும் நிலை ஏற்படும்.

இந்த நிலையை மாற்ற வேண்டும். மாணவர்களுக்கு மனப்பக்குவத்தை ஏற்படுத்தவும் பிரச்னையை எதிர்கொள்ளக் கற்றுத் தருவதாகவும் கல்விமுறை இருக்க வேண்டும். அதற்கான மாற்றங்களை பாடதிட்டத்தில் கொண்டுவர வேண்டும். இல்லையேல், ஆசிரியப்பணி அழுத்தம் மிக்கதாகவே தொடரும். இதனால் பாதிக்கப்படப் போவது மாணவர்களும் அவர்களின் எதிர்காலமும்தான். அடுத்த தலைமுறைக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க, கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டியது இன்றைய அவசியத் தேவை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close