/tamil-ie/media/media_files/uploads/2017/11/k-kamaraj.jpg)
இரா.குமார்
தமிழகத்தின் இப்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் மக்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகின்றன. காரணம், தகுதியற்றவர்கள் அந்த பதவிக்கு வந்திருப்பது தான். அப்படியானால் அமைச்சர் ஆவதற்கான தகுதிகள் என்ன என்று பார்ப்போம்.
அமைச்சர் ஆவதற்கு அதிகம் படித்திருக்க வேண்டியது அவசியமா என்றால், நிச்சயமாக அவசியமில்லை. இதற்கு முன் முதல்வர்களாக இருந்த காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் அதிகம் படித்தவர்கள் இல்லை. ஆனாலும், நன்றாகத்தான் ஆட்சி செய்தார்கள். இவர்கள் ஒரு நாளும் மக்களின் கேலிக்கோ, கிண்டலுக்கோ ஆளானதில்லை. இதிலிருந்தே முதல்வர் ஆவதற்கோ, அமைச்சர் ஆவதற்கோ படிப்பு ஒரு தகுதி இல்லை என்பது உறுதியாகிறது. அப்படி என்றால் எதுதான் தகுதி?
பெரிய பெரிய விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் பேட்டி அளிக்கும் போது நிருபர்கள் குறுக்கிட்டு கேள்வி கேட்பதை பார்த்திருக்கிறோம். பேட்டி அளிப்பவரும் “இது நல்ல கேள்வி“ என்று சொல்லிவிட்டு விளக்கம் அளிப்பது உண்டு. சில நேரம் “நீங்கள் சொல்வது போல் பிரச்சனை எழ வாய்ப்பு இருக்கிறது. இந்த கோணத்தில் நாங்கள் சிந்திக்கவில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்வோம்” என்று தங்கள் திட்டத்தில் அல்லது கண்டுபிடிப்பில் குறை இருப்பதை ஒப்புக்கொண்டதும் உண்டு. அப்படியானால் அந்த விஞ்ஞானியை விடவும் பொருளாதார நிபுணரை விடவும், இந்த துறைகளில், நிருபர் நிபுணத்துவம் பெற்றவரா என்றால், நிச்சயமாக இல்லை. ஆனாலும் அவரால் எப்படி சிறப்பான ஒரு கேள்வியை கேட்க முடிகிறது?. ஒன்றை புரிந்துகொள்ளும் அடிப்படை அறிவும், அது பற்றி சிந்திக்கும் திறனும் இருப்பதால்தான், நிருபரால் கேள்வி கேட்க முடிகிறது.
இதே போலதான் அமைச்சர்களும்.
அமைச்சர் பதவிக்கு வருபவருக்கு, அவர் பொறுப்பு வகிக்கும் துறை பற்றி எல்லாமும் தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், ஒன்றை புரிந்துகொள்ளக் கூடிய அடிப்படை அறிவும், அது பற்றி சிந்திக்கக் கூடிய திறனும் அவசியம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் வகுத்துத் தரும் திட்டம் மக்களுக்கு நன்மை தருமா? தராதா? இந்த திட்டம் சாத்தியமா என்பதை புரிந்து கொண்டு செயல்பட முடியும்.
புரிந்துகொள்ளும் அடிப்படை தகுதியும், சிந்திக்கும் திறனும் இல்லையென்றால், அதிகாரி சொன்னார் என்பதைக் கேட்டு தெர்மோகோல் கொண்டு வைகை அணையை மூடச் சென்ற கதைதான் நடக்கும்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது, அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து , “எல்லாருக்கும் இலவசக் கல்வி தர வேண்டும். ஊர்கள் தோறும் பள்ளிகள் திறக்கவேண்டும்“ என்றார். “இது முடியாது, இதற்கு அரசின் நிதிநிலை இடம் தராது” என்று அதிகாரிகள் கூறினர். “முடியாது என்று சொல்வதற்கா சம்பளம் கொடுத்து உங்களை வைத்திருக்கிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து வையுங்கள். சாப்பிட்டுவிட்டு மதியம் வருகிறேன் “ என்று கண்டிப்பாக உத்தரவிட்டார் காமராஜர்.
மதியம் கோட்டைக்கு வந்தார். இலவசக் கல்வித்திட்டத்தை செயல்படுத்த இத்தனை கோடி ருபாய் செலவாகும், இந்த இந்த வரிகளை விதிப்பதன் மூலம் இதற்கான நிதியை திரட்டமுடியும் என்று காமராஜரிடம் அதிகாரிகள் விளக்கினர். “இதை செய்ங்கன்றேன். இதை விட்டுட்டு முடியாதுன்னு சொன்னா எப்படி“ என்றார் காமராஜர்.
இலவசக் கல்வித்திட்டம் செயல் படுத்தப்பட்டது. தலைமுறை தலைமுறையாக படிப்பு வாசமே இல்லாதவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று படிக்கத் தொடங்கினர்.
எல்லோருக்கும் இப்போதும் இலவசக் கல்வி கிடைக்கிறது என்றால், இரண்டு தலைமுறை படிப்பறிவு உள்ளதாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் காமராஜர் தான். முடியாது என்று சொன்ன அதிகாரிகளைக் கொண்டே தான் நினைத்ததை செயலபடுத்த வைத்தார். அப்படி அதிகாரிகளை வேலை வாங்கக் கூடிய, கமாண்டிங் பவர் காமராஜருக்கு இருந்தது. அதற்குக் காரணம், ஒன்றைப் புரிந்துகொள்ளும் அடிப்படை அறிவும், அது பற்றி சிந்திக்கும் திறனும் காமராஜருக்கு இருந்ததுதான்.
புரிந்துகொள்ளும் அறிவும், சிந்திக்கும் திறனும் இல்லையென்றால், "டெல்லியிலிருந்து ஏடிஸ் கொசுக்கள் ஆம்னி பஸ்சில் ஏறி தமிழகம் வந்துவிட்டன" என்றும் "மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யலாற்றில் அதிகம் நுரை வருகிறது" என்றும் "வைகை அணையில் மீன்கள் அதிகம் உள்ளன. அந்த மீன்கள் தண்ணீரைக் குடிப்பதால் தான் அணையின் நீர்மட்டம் விரைவாக குறைந்து விடுகிறது" என்றும் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் அமைச்சர்கள் ஆளாகி வருகின்றனர். ஆனாலும் இது அவர்களின் குற்றமில்லை. அவர்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்து அமைச்சர்களாக்கிய அந்த கட்சித் தலைமையின் குற்றம். கட்சி தலைமை செய்தது முதல் குற்றமென்றால் அவர்களுக்கு வாக்களித்த இரண்டாவது குற்றத்தை செய்தது மக்களாகிய நாம். இனிமேலாவது ஒரு கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், கட்சித் தலைமையை மனதில் வைத்து வாக்களிக்காமல், வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் இப்படி கேலிக்கு ஆளாகும் அமைச்சர்கள்தான் நமக்குக் கிடைப்பார்கள். இப்படிப்பட்ட அமைச்சர்களை நாம் கேலி செய்வதால் ஏற்படும் அவமானம் அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். நாம் அவமானப்படாமல் இருக்கவேண்டும் என்றால் கட்சியைப் பார்த்தும், கட்சித் தலைமையை மதித்தும், காசு வாங்கிக் கொண்டும் வாக்களிக்காமல், வேட்பாளரின் தகுதியைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.