மகளிர் தினத்தில் முன்னெடுக்க வேண்டியது எதை?

திரைத்துறையில் பல கோடிகள் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.

womens day

சுகிதா

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினத்தை ஒட்டிய கொண்டாட்டங்கள், கேளிக்கைகள், உற்சாகங்கள், விற்பனைகள் என மகளிருக்கென்று ஒரு தினம் ஏன் உருவானது என்பதிலிருந்து விலகி வெறும் கொண்டாட்டங்களுக்கான நாளாக மாறி விட்டது. மகளிர் தின வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு, யாருக்கானது மகளிர் தினம், மகளிர் முன்னெடுக்க வேண்டிய குரல்கள் என்ன என்பது தான் இந்த நாளில் எழுப்ப வேண்டிய மிக முக்கியமான கேள்வி.

சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் ஒடுக்கப்பட்ட மகளிர், உரிமைகள் இன்னவென்று அறியாமல் உலகமே அறியாது அன்றாட வாழ்வை கடத்தும் மகளிர், இன்னல்களில் உழன்று வெளியே கூற முடியாமல் மவுனமாக இருக்க கூடிய மகளிர், இவர்களின் குரல்களை வெளி உலகுக்கு கொண்டு வரவே மகளிர் தினங்கள் பயன்பட வேண்டும். அவர்களுடைய குரல்களை கேட்க செய்வதே மகளிர் தினமாக இருக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட விஷயத்தை உள்ளடக்கி ஆணுக்கு நிகராக பெண் சமூகத்தில் சம உரிமை பெறவேண்டும் என்று தொடங்கப்பட்டது தான் பெண்கள் உரிமை போராட்டத்திற்கான ஆரம்ப புள்ளி. சமத்துவம், பிரதிநிதித்துவம், சுதந்திரம் கிடைக்க வேலைக்கு ஏற்ற ஊதியம், 8 மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்களை அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை உள்ளிட்டவற்றிற்காக உலகெங்கும் பெண்கள் கிளர்ந்த்தெழுந்ததன் வரலாறே மகளிர் தினம்.

உலகளவில் பெண்களுடைய உழைப்பு பெருமளவில் சுரண்டப்படுகிறது. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆண்களை போன்று அடுத்தடுத்த நிர்வாக படிநிலை உயர்வுகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு அலுவலகத்தில் அடிதளத்தில் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பங்களிப்பு கனிசமானதாக இருக்கிறது. ஆனால் படிநிலைகள் ஏற ஏற.. உயர்நிலை வகுப்பில், உயர்நிலை குழுவில் அலுவலகத்தில் ஒரு பெண் இருப்பதே சவால் தான். அப்படி என்றால் கீழ்நிலையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஏன் உயர்நிலைக்கு வரும் போது குறைகிறது அல்லது இல்லாமல் போகிறது . எங்கே சென்றார்கள் அந்த பெண்கள். பணி இடங்கள் மாறினாலும் ஆண்டுகள் ஏற ஏற அனுபவத்திற்கு ஏற்ப உயர்நிலை பொறுப்பிற்கு சென்றிருக்க வேண்டும். ஏன் செல்லவில்லை? ஆண்களும் பெண்களும் அலுவலகத்தில் ஒரே வேலையை செய்யும் போது ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் சம்பளம் வழங்கப்படுவதன் பின்னணி என்ன ? அமைப்பு சார்ந்த பணி இடங்களில் இத்தகைய வேறுபாடுகள் பெண் என்பதால் உள்ளது என்றால் அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், விவசாயம், கூலித்தொழில், விற்பனையகங்களில் பணி புரியும் பெண்களின் நிலை என்ன என்பதை சிந்திக்க கூடிய நாளாக மகளிர் தினம் இருப்பது தான் சரியானதாக இருக்க முடியும்.

புள்ளி விபரங்கள் சிலவற்றை இந்த இடத்தில் பார்க்க வேண்டியது அவசியம். 2017 ம் ஆண்டு உலக பொருளாதார மேம்பாட்டு கழகம் கணக்கிட்ட மாத ஊதிய புள்ள விபரங்களின் படி ஆண்களின் ஊதியத்திற்கும் பெண்களின் ஊதியத்திற்கும் இடையே 25.8 % சதவித இடைவேளி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 108 வது இடம். இது பெண்களுக்கான பொருளாதார வாய்ப்புகள், சுகாதாரம், அரசியல் அதிகார பகிர்வு அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வாகும். ஆஸ்திரேலியாவில் ஆண்கள் – பெண்களிடையே ஆன ஊதிய பாகுபாடு 15.8 % உள்ளது. ஐக்கிய ராஜ்ஜிய அரசு சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இங்கிலாந்து, லண்டன் உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதிய விபரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று. அப்படி வெளியிடாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. ஆவணங்கள் முறையானதாக இருக்க வேண்டும் போலியான கணக்குகள் காண்பிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களுடைய உரிமம் பறிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இது சமீபத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தை உலுக்கிய உத்தரவாக இருந்தது. வங்கி, பொது துறை, சேவை, வர்த்தகம், சுகாதாரம், திரைத்துறை என அனைத்து துறைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆண் பெண் ஊதிய சமத்துவத்தை முன்னிறுத்தி பிரமாண்ட பேரணிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டது. இப்படி ஊதியம் தொடர்பான ஆவணங்களை நிறுவனங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதில் கண்டறியப்பட்ட உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் 81 சதவித ஆண்கள் வேலைக்கேற்ற சிறப்பானதொரு ஊதியம் பெறுகிறார்கள். பெண்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. 63 % பெண்கள் அங்கே மிக மோசமானதொரு ஊதியத்தை பெறுகிறார்கள். நார்வே, சுவிடன், நெதர்லாந்தில் பெண்கள் அதிகளவில் பணியாளர்களாக உள்ளனர்.

இந்தியாவில் பெண் பணியாளர்கள் அமைப்பு சார்ந்த தொழிலில் மிக குறைவான அளவே உள்ளனர். அது மட்டுமல்ல ஆசிய அளவில் பெண்களின் ஊதியம், கல்வி, சுகாதாரம் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது. இந்தியாவிற்கு பின்னால் உள்ள ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 கோடி பெண்கள் வேலை இழந்துள்ளனர். இந்தியாவுடைய உள்நாட்டு உறபத்தியில் பெண்களின் பங்கு 17 சதவிதம் மட்டுமே உள்ளது. இது உலகளவில் 40 சதவிதமாக உள்ளது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்கு உலக சராசரியளவை எட்டியுள்ளது என்பதும் கவனிக்கதக்கது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் காலாண்டு முடிவில் அதாவது பணமதிப்பழப்பிற்கு பிறகு அமைப்பு சார் பணியில் ஈடுபட்டிருந்த 2 கோடியே 40 லட்சம் பெண்கள் பணி இழந்தனர் . இந்த விபரங்கள் யாரும் கண்டுகொள்ளாமலே கடந்து போய்விட்டது. உற்பத்தி, சேவை, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என்று அனைத்து துறையைச் சேர்ந்த பெண்களும் தகுதி அடிப்படையில், காரணங்கள் சொல்லியும், சொல்லாமலும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.

இந்தியாவில் ஆண் ஆதிக்க மனநிலையில் பெண்களை அணுகுவதே இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் முதற்காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக பெண்களை தனக்கு கீழே வைத்து பார்த்து விட்டதால் பெண்களின் வளர்ச்சியை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை.

இந்திய அரசியல் சட்டத்தின் 39 வது விதியின் கீழ் குறிப்பிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள ஆண் – பெண் இருவருக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த சட்டம் 1976 ம் ஆண்டு முதல் இந்தியாவில் அமலில் உள்ளது. இருந்தும் அது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. உழைக்கும் பெண்களுக்கு இதனால் பயன் ஒன்றும் இல்லை.

பெண்கள் வேலைக்கு போவதை பெரும்பாலான இந்திய ஆண்கள் விரும்புவதில்லை. பெண் என்பவள் வீட்டை பராமரிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, வீட்டில் உள்ள ஆண்களுக்கு தேவையான பணிவிடை செய்வது போன்ற கண்ணோட்டத்தில் மட்டுமே ஆண்களின் மதிப்பீடு பெண் மீது உள்ளது. கூலி வேலை செய்யும் ஆண்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்று பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்கள் கூட பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை. உலகளவில் பெண்களை வேலைக்கு அனுப்ப தயங்கும் ஆண்கள் உள்ள பட்டியல் பாகிஸ்தான், சவுதி, ஆப்கனிஸ்தான் என்று இஸ்லாமிய நாடுகளாக இருக்கிறது. இதில் இந்தியாவும் அடக்கம் என்பது வருத்த்திற்குரியது.

ஆண் – பெண் ஊதிய பாகுபாடு, குறிப்பாக பெண்களுக்கு ஊதிய உயர்வை முறையாக அமல்படுத்தாதது, நிர்வாக உயர்பதவிகளில் பெண்களை உயர்த்தாதது மற்றும் அமர்த்தாது என அனைத்து துறைகளிலும் ஒரே மாதிரியான பிரச்சினையை பணிப்பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தனது தகுதி, பணித்திறன் மீதான நம்பிக்கையின்மையால் ஊதியம் அதிகம் கோருவது கூட கிடையாது. இன்னொரு புறம் ஊதியம் தொடர்பான அலுவலக விதிகள், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் இல்லை. ஊதியம் குறித்து சக ஊழியருடன் பேசுவது கூட தவறு என்ற மனநிலையும் தான் பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. ஒரு பக்கம் ஆண்களை விட திறமையான வேலைத்திறன், அதிக நேர வேலை உரிய நேரத்திற்குள் தனது பணியை முடிப்பது என கடின உழைப்பை பெண்கள் செலுத்துகின்றனர். அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இன்னொரு புறம் பெண்களை விட ஆண்கள் குறைவான நேரத்தில் வேலைகளை, திறன் குறைபாட்டோடு செய்து முடிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அதிக ஊதியம் நிர்வாகம் வழங்கும் நிலையும் உள்ளது. இன்னொருபுறம் ஒரு தலைமுறை பெண்கள் முறைசார் வேலைக்கு செல்லும் திறனின்றி கல்வியறிவின்றி உள்ளார்கள். இத்தகைய பெண்கள் கூலி வேலைக்கும், அமைப்பு சாரா வேலைக்கும் சென்று கடும் உழைப்பை கொடுத்தும் முறைசார் பெண் பணியாளர்களை விட குறைவான சொற்ப ஊதியத்தை மட்டுமே பெறுகிறார்கள். வாழ்வாதாரத்திற்கே பற்றாகுறை நிலையில் தான் இந்த பெண்களின் நிலை உள்ளது. இந்தியாவில் 170 ஆண்டுகளுக்கு மேலாக ஆணுக்கு நிகராக பெண்ணுக்கு சம ஊதியம் வழங்காத பிரச்சினை உள்ளது. தலைமுறை தலைமுறையாய் இந்த கல்வி அறிவு பெற்ற – பெறாத பெண்களிடையேயும் இது தொடர்கிறது.

இந்தியாவில் சில பெண்கள் நன்கு கல்வி அறிவு பெற்றிருப்பார்கள். ஆனால் வேலைக்கு அவர்கள் வீடுகளில் அனுப்ப மாட்டார்கள் , அவர்களும் அதில் பெரிய ஆர்வம் கொள்ள மாட்டார்கள். நாட்டின் வளங்களை பயன்படுத்தி,நாட்டின் கல்வி திட்டங்களை பின்பற்றி கற்ற கல்வி நாட்டிற்கும் பயன்படாமல் வீட்டிற்கும் பயன்படாமல் போவது குறித்த எந்த சலனமும் அவர்களிடம் இருப்பதில்லை. பேருக்கு பின்னாடி திருமண அழைப்பிதழில் போட ஒரு டிகிரி இருந்தால் போதுமானது என்று பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் இன்னும் நம்மூரில் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய பெண்கள் பெற்ற கல்வி, கல்வி கற்று குடும்ப பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலும் தாகத்தோடு காத்திருக்கும் பெண்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் இடத்தை தான் கல்வி நிறுவனங்களில் அபகரித்திருக்கிறோம் என்ற சலனமே இல்லாமல் படித்து முடித்துவிட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பெண்கள் உண்டு. இத்தகைய பெண்களுக்காகவும் குரல் கொடுப்பது மகளிர் தினத்தில் அவசியம். கல்வியின் முக்கியத்துவம் அது கிடைத்த விதம், இங்கே கல்வி மறுக்கப்படுபவர்களின் நிலை குறித்த விழிப்புணர்வும் கல்வி கற்றால் வேலைக்கு சென்று நாட்டையும், வீட்டையும் முன்னேற்ற வேண்டும் என்ற பார்வையை ஏற்படுத்துவது அவசியம்.

இன்னொருபுறம் கிராமப்புற கட்டமைப்பு பெண்களுக்கு உகந்ததாக இல்லை, உயர் கல்வி கற்காமல் பள்ளிக்கல்வியோடு நிறுத்தும் அவலமும் உள்ளது. போதிய போக்குவரத்து இல்லாதது, அருகாமை கல்லூரிகள் இல்லாதது, பாதுகாப்பின்மை இவை முக்கிய காரணியாக பெண்கள் உயர் கல்வி கற்க முடியாமல் அப்படியே கற்றாலும் வேலைக்கு செல்லும் நிலை இல்லாத சூழல் தான் உள்ளது.

சுய உதவிக்குழுக்கள் போன்றவை கிராமப்புற பெண்களை மேம்படுத்த உதவியிருந்தாலும் அதுவெறும் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரமாக மட்டுமே இருக்கிறதே தவிர மேம்பாட்டுக்கானதாக இல்லை.

தொழில் முனைவர்களில் பெண்கள் தற்போது ஆர்வம் காண்பிக்கிறார்கள். ஆனால் சந்திக்க கூடிய சவால்கள் ஆண்களை விட இரட்டிப்பாக உள்ளது. இது பணிப்பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்கும் நினுவனங்களில் ஆண்கள் வேலைக்கு வர தயங்குகிறார்கள். பெண் தலைமைக்கு கீழ் பணி செய்வதா என்ற ஆண் மனப்பான்மையின் ஒரு அங்கமாகவே இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். தலைமை பொறுப்புகளில் பெண்கள் மிக குறைந்த அளவே உள்ளார்கள். நிறுவனங்கள் இடையே ஆன போட்டியில் பெண் தலைமை பொறுப்பில் இருக்கும் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்படுவதும், பெண்கள் மீது நம்பிக்கையின்மையும் தொடர்ந்து முட்டுக்கட்டையாக உள்ளன. இதையும் தாண்டி பெண்கள் சாதித்து தங்கள் நிறுவனங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். திருமணம், குழந்தை பேறும் பெண்களுடைய வேலைவாய்ப்பை பாதியிலயே நிறுத்த காரணமாக உள்ளது. மேலும் அவர்கள் ஊதிய உயர்வு, பணி தொடர்பான திறன் மேம்பாடு அனைத்திலும் கடும் சவால்களை சந்திக்கும் நிலைக்கு திருமணத்தாலும், குழந்தை பேறும் பெறுவதாலும் தள்ளப்படுகிறார்கள்.

இயற்கை உயிரியல் முறையில் பெண்கள் வலிமை குறைந்தவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். போர் புரிதல், கனரக வேலைகள், கடுமையான உடல் உடழைப்பு செலுத்தக் கூடிய பணிகள், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதையும் கடந்து இந்திய ராணுவத்தில் 14% சதவித பெண்கள் உள்ளார்கள். விமானப்படையில் தான் அதிக பெண்கள் உள்ளனர். அதே போன்று விமான சேவைத்துறையில் பெண்கள் பணியில் இருப்பது உலகளவில் இந்தியாவில் தான் அதிகம். விளையாட்டுத்துறையை எடுத்துக் கொண்டோம் என்றால் தற்போது தான் இந்தியாவில் சானியா, சாய்னா நேவால், சாக்ஷி மாலிக், சிந்து, தீபிகா குமாரி, ரீதுராணி, மித்தாலி ராஜ், தீபா கர்மாகர், அனிதா பால் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடிய சாதனை பெண்களை பார்த்து அடுத்த தலைமுறை பெண்களை விளையாட்டுத்துறைக்கு அனுப்புகிறார்கள். உலகளவில் விளையாட்டுத்துறையில் அனைத்து விளையாட்டுகளிலும் வீரர்கள் வாங்கும் சம்பளம், பரிசுத் தொகை அளவிற்கு வீராங்கனைகள் வாங்குவதில்லை. இதற்காக கடந்த காலங்களில் சர்வதேச நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகள் சிலர் குரல் எழுப்பிஉள்ளனர்.

திரைத்துறையில் பல கோடிகள் நடிகர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. ஆனால் நடிகைகளுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஹீரோயிச படங்கள் வெற்றி பெறும் என்பதனை நம்பும் தயாரிப்பாளர்கள் நடிகைகளை கதைக்களமாக வைத்து இயக்கப்படும் படங்களை எடுக்க முன்வருவதில்லை. இது ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் அனைத்திற்கும் பொருந்தும். ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன் சமீபத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆணுக்கு பெண் நிகரான ஊதியம் வழங்க எழுந்த போராட்டத்தில் பங்கேற்று தான் நடிக்க உள்ள படத்தில் நடிகைக்கு நிகரான சம்பளத்தை வாங்கப்போவதாக உறுதி அளித்தார். பாலிவுட்டிலும் நடிகைகள் நடிகர்களுக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட lipstick under my burkha, Dirty picture, marykom, Neerja போன்ற படங்கள் வெற்றி பெற்றிருப்பது மாற்றத்தை நோக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. அதே போன்று தமிழில் அறம், அருவி போன்ற படங்கள் கதாநாயகிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வருவதும் வெற்றி பெறுவதும் நம்பிக்கையை விதைக்கிறது. ஆனாலும் சம ஊதியம் எல்லாம் வழங்கப்படுவிதில்லை. இப்படி அனைத்து துறைகளிலும் பெண்கள் நவின அடிமைத்தனத்திற்கு பணி சார்ந்து பழக்க வைத்துள்ளது இந்த சமூகம். அந்த சமூகத்தை பார்த்து பெண்கள் இந்த மகளிர் தினத்தில் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று தான் அது.

சம வேலைக்கு சம ஊதியம் எப்போது என்பது?.

கட்டுரையாளர் சுகிதா, ஊடகவியலாளர். கவிஞர், எழுத்தாளர்

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What to do to advance on womens day

Next Story
சொன்னால் முடியும் : பயங்கரவாதமாக மாறும் வெறுப்புப் பிரச்சாரம்H Raja Faces Case on 7 Sections, FIR On H Raja, ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு, ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளில் வழக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express