கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்?

கர்நாடக தேர்தல் களம் சென்ற பாதையைக் கவனித்தால் மோடி எதை நோக்கி கவலைப்படத் தொடங்கியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும்.

By: Updated: May 12, 2018, 12:30:44 PM

விவேக் கணநாதன்

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது. நாளை தேர்தல் என்கிற சூழலில் கடைசி வரை வந்திருக்ககூடிய கருத்துக்கணிப்புகள் பலவற்றில் காங்கிரஸுக்கு முதலிடமும், பாஜகவுக்கு இரண்டாம் இடமும் கொடுத்துள்ளன. ஆனால், எண்ணிக்கை அடிப்படையில் ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்கள் யாருக்கும் கிடைக்காது என்று ஆருடம் சொல்லப்படுகிறது. C – FORE நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் கர்நாடகவுக்குத்தான் என்றாலும், அதன் முடிவுகள் இந்தியா முழுமைக்கும் பல செய்திகளைச் சொல்லக்கூடிய வகையிலேயே இருக்கும்.

கர்நாடகத்தின் உள்ளூர் அரசியல் நிலவரத்தின் அடிப்படையிலும் சரி, கர்நாடகவைத் தாண்டிய தேசிய அரசியல் நிலவரத்திலும் இந்தத் தேர்தல் முடிவுகள் பல மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் தற்போது கர்நாடகா, பஞ்சாப், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் தான் ஆட்சியில் உள்ளது. இதில், ஒப்பீட்டு அளவில் பெரிய மாநிலம் என்றால் கர்நாடகா தான். மத்திய பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை இந்தியா முழுவதும் அரசியல் கோஷமாக மாறியிருக்கும் நிலையில் கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெறுவது காங்கிரஸுக்கு மிக முக்கியம்.

2014க்குப் பிறகு பல இடங்களில் கோவா, மணிப்பூர் போன்ற இடங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் மத்தியில் இருக்கும் அதிகாரத்தோடு பாஜக நடத்தும் அரசியல் சதுரங்கத்தை உடைத்து காங்கிரஸால் அந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க முடியவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் சூழலில் கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெறுவது உளவியல் ரீதியாக காங்கிரஸ் தொண்டர்களைத் தெம்புறச் செய்யும். மேலும், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு அரசியல் வேலை ஏதும் இல்லை என்ற பொது உருவகத்தை வளர்த்தெடுப்பதன் மூலம், தென்னிந்தியாவில் ஓரளவுக்கு வலுவாக இருக்கும் தேசியக் கட்சி காங்கிரஸ் மட்டும் தான் என்பதை உறுதிசெய்ய முடியும்.

காங்கிரஸ் வெற்றிபெறும் பட்சத்தில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியா முழுக்க வலுப்படுத்த அது வாய்ப்பாக அமையும். கர்நாடகத் தேர்தலுக்கு அடுத்தபடியாக, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது.

இதில் மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் பாஜக 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. இரண்டு மாநிலங்களிலுமே ஆளும் பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புணர்வும் இருக்கிறது. ராஜஸ்தானிலும் பாஜக முதல்வர் வசுந்தர ராஜேவின் மீதான எதிர்ப்புணர்வுகள் அதிகரித்துள்ளன.

கடந்த பிப்ரவரியில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெரும் பட்சத்தில் அந்த நம்பிக்கை பல அரசியல் கணக்குகளை சாத்தியப்படுத்தும்.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸின் மத்திய இந்திய தளபதிகள் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். கமல்நாத் தலைமையில் அங்கு காங்கிரஸ் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. சிசிந்தியா, திக் விஜய் சிங் போன்றவர்களும் பல நூறு கிலோமீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். மத்தியப்பிரதேசத்தில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் நேரடி போட்டி என்பதால், கர்நாடகாவில் பெரும் அங்கு மத்தியப்பிரதேசத்தில் முக்கிய பிரச்சார ஆயுதமாகவும், பொதுப்பிம்ப உருவகமாகவும் மாறக்கூடும். களப்பணியும், தேர்தல் உத்தியுமே மத்தியப் பிரதேசத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்றாலும் ஒரு பொதுமனநிலை அரசியலுக்கு காங்கிரஸின் வெற்றி அங்கு உதவக்கூடும்.

சத்தீஸ்கரைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் நூலிழை தான் வித்யாசம். கடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடைப்பட்ட வாக்கு வித்யாசம் கடுமையாக குறைந்துள்ளது. 2003ல் 2%, 2008-ல் 1.7%, 2013ல் 0.77% வாக்கு சதவீதம் மட்டுமே காங்கிரஸைவிட கூடுதலாக பாஜக பெற்றுள்ளது. இதேபோல், வெற்றி பெற்ற இடங்களின் வித்யாசமும் குறைந்துள்ளது.

இந்த முறை பாஜக முதலமைச்சர் ராமன் சிங்குக்கு எதிராக கடுமையான குற்றாச்சாட்டுக்கள் இருப்பதாலும், மத்தியில் – மாநிலத்தில் என இரண்டு இடங்களிலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் எழும் கூட்டு எதிர்ப்புணர்வின் காரணமாகவும் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே ஓராண்டாக சொல்லப்படுகிறது.

ஆனால், இது காங்கிரஸுக்கு சாதாகமாக அமையுமா என்று சொல்ல முடியவில்லை. காரணம், காங்கிரஸின் பிரதான முகமாக இருந்த, முன்னாள் முதலமைச்சரான அஜித் ஜோகி கடந்த 2016ம் ஆண்டு கட்சியிலிருந்து வெளியேறி தற்போது சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்கிற புதியக் கட்சியைத் தொடங்கியுள்ளார். இவர் சத்தீஸ்கரில் 32% வாக்குகளை உடைய பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர். சத்தீஸ்கரில் இவருக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது என்றும் அடுத்த தேர்தலில் ஜோகியின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், ஜோகியை வசப்படுத்த காங்கிரஸ் எத்தகைய முயற்சிகளையும் எடுப்பதாக தெரியவில்லை. அதேநேரம், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஜோகியைத் தொடர்பு கொண்டு மாநிலக்கட்சிகளின் ஒருங்கிணைப்பு பற்றி பேசினார். மம்தா – சந்திரசேகர் ராவ் தொடங்கி வைத்த ‘கூட்டாட்சி முன்னணி’ அல்லது மாநிலக் கட்சிகளின் ஒற்றுமைக்கு முதன் முதலில் ஆதரவளித்தது ஜோகி தான். அதேநேரம், காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று ஜோகி கூறவில்லை. மாநிலக் கட்சிகளின் அணி சேர்க்கையை வரவேற்கும் ஜோகி, 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு பங்கிருக்கும் என்றே கூறியிருக்கிறார்.

எனவே, காங்கிரஸ் உடன் ஜோகி கூட்டணி வைப்பதற்கு தயங்கவில்லை. ஆனால், காங்கிரசுடன் பேரம் நடத்த தயாராகிறார். கர்நாடகத் தேர்தலைப் பொறுத்து இந்த பேரங்கள் மாறக்கூடும்.

சத்தீஸ்கர் மட்டும் கிடையாது. இந்த கூட்டணி பேரம் எப்படி நடக்கப் போகிறது என்பதை இந்தியா முழுமைக்குமே கர்நாடகத் தேர்தல் தீர்மானிக்கும் வாய்ப்புள்ளது.

கர்நாடகத் தேர்தலையொட்டி நடந்த பல்வேறு அரசியல் ஆட்டங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டால் இதைப் புரிந்து கொள்ள முடியும். கர்நாடகத் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருப்பவர்கள் தெலுங்கு வாக்காளர்கள்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இருவருமே கர்நாடகாவில் இருக்கும் தெலுங்கு வாக்காளர்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். என்ன வித்யாசம் என்றால், சந்திரசேகர ராவ், தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தார். பாஜக எதிர்ப்புணர்வை பதிவு செய்த இரு தெலுங்கு முதல்வர்களும், காங்கிரஸுக்கு ஆதரவு முகத்தை நேரடியாகக் காட்டவில்லை. அதிலும், தேவ கௌடாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ‘மாநிலக் கட்சி’ என்கிற அடையாளத்தின் கீழ் எஞ்சியிருக்கும் தனியுணர்வை அரசியல் பேரத்துக்கான துருப்புச்சீட்டாக மாற்றும் கதவை சந்திரசேகர ராவ் திறந்து வைத்திருக்கிறார். கர்நாடகத் தேர்தல் முடிவைப் பொறுத்தே தனது மூன்றாவது அணி கனவைக் குறித்து சந்திரசேகர ராவ் முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னும் பின்னும், காங்கிரஸ் – பாஜக இரண்டனும் கூட்டணியில்லை என அறிவித்த கர்நாடகவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தேவ கௌடாவின் ஜனதா தளம் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவெடுக்கும் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவே தீர்மானிக்கும்.

தமிழ்நாட்டு அரசியலிலும், காவிரி போன்ற வாழ்வாதார பிரச்னைகளிலும் கர்நாடகத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் வினையாற்றும்.

இதேபோல், தமிழ்நாட்டில் திருமாவளவன் கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்தது கவனிக்கத்தக்கது. ராகுலைச் சந்தித்த பிறகு, திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெறும் என திருமா தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால், காவிரி விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், கர்நாடக தேர்தல் குறித்து திமுக எதுவும் பேசவில்லை. அதேநேரம், திருமா துணிந்து ஆதரவளித்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் உச்சத்தில் இருந்த நிலையில், சந்திரசேகர ராவ் தேவகௌடாவைச் சந்தித்து அம்மாநில தேர்தலிலும் ஆதரவு என அறிவித்த பிறகுதான், ஸ்டாலினை சென்னை வந்து சந்தித்தார். ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு மூன்றாவது அணி என்கிற கோஷம் அடங்கியது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி என்பதில் ஸ்டாலின் இதுவரை தெளிவாக இருந்தாலும், கூட்டணியில் காங்கிரஸுக்கு என்ன இடம்? எத்தனை இடம் என்பதைத் தீர்மானிக்கும் தொடக்க விடையாக கர்நாடகத் தேர்தல் முடிவுகள் இருக்கக்கூடும்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாட்டில் ராகுல் காந்தி நடத்தவிருக்கும் சுற்றுப்பயணம், அவர் பங்குபெறவிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் மாநாடு போன்றவற்றின் மீதான அரசியல் கவனமும் கர்நாடகத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே ‘ஏற்ற – இறக்கமாக’ இருக்கும்.

இன்னொருபக்கம், பாஜகவுக்கும் இது மிக முக்கியமான தேர்தல். குஜராத்தில் மூச்சுத்திணறி வெற்றிபெற்ற பாஜக, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் என 3 மாநில இடைத்தேர்தலிலும் தோல்வியுற்றது.

’காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என பேசும் பாஜவுக்கு பெரும் தலைவலியே தென்னிந்தியா தான். இந்தத் தேர்தலில் தோற்றால், ‘பாஜக இல்லாத தென்னிந்தியா’ என்கிற உருவகம் வலுப்பெறும். அதேநேரம், பாஜக வெற்றிபெறும் பட்சத்தில் அந்த பிம்பத்தை உடைக்க முடியும்.

மூன்றாவது அணி என்கிற குரல் தென்னகத்தில் இருந்து எழுந்தது ரசித்தது பாஜக. இந்தச்சூழலில் கர்நாடகத்தில் வெற்றிபெற்றால், அந்த வெற்றியை சில மறைமுக காய்கள் மூலம் காங்கிரஸின் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்த முடியும். வெல்ல முடியாத தலைவர் மோடி என்கிற கோஷத்தை ராகுல் காந்திக்கு எதிராக முன்வைப்பதன் பலனை பாஜக அனுபவிக்கும். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் கொஞ்சம் நம்பிக்கையாக களமாட வாய்ப்பு கிட்டும்.

கர்நாடக தேர்தல் களம் சென்ற பாதையைக் கவனித்தால் மோடி எதை நோக்கி கவலைப்படத் தொடங்கியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியும். பிப்ரவரியில் சித்தராமய்யா vs எடியூரப்பா, மார்ச்சில் காங்கிரஸ் vs பாஜக என்றும், ஏப்ரலில் மோடி vs சித்தராமய்யா என்றும் மாறிவந்த களம் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பிருந்து மோடி vs ராகுல் என மாறியது.

15 நிமிட சவால், தலீத் மக்களுக்கான பங்களிப்பு பிரச்சாரம் என மோடியும் ராகுலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். மிகத்துணிச்சலாக, காங்கிரஸ் வெற்றி பெற்றால் நான் தான் பிரதமர் என அறிவித்தார். சற்றும் இதை எதிர்பாராத மோடி, ராகுலின் பேச்சு ‘ஆணவம்’ என்றார். ‘தகுதியில்லாதவர்’ என்கிற ரீதியில் ராகுலைத் தாக்கினார்.

கர்நாடகத் தேர்தலின் மிக முக்கியமான கட்டமே இந்த மோதல் தான். 2019ம் ஆண்டு தேர்தலுக்கான இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுவிட்டனர். அந்த உறுதியை சோதிக்கும் பரீட்சையாகத்தான் கர்நாடக தேர்தல் முடிவும், அதற்கு பின்பான அரசியலும் இருக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:What will happen after the karnataka election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement