scorecardresearch

பெண்கள் பயம் இல்லாமல் எங்கே இருக்கிறார்கள்?

ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட இந்தியாவில் இல்லை.

Man and woman
Man and woman

சக்கியா சோமன்

லண்டனைச் சேர்ந்த தாம்ஸன் ரெய்ச்சர்ஸ் நிறுவனம் மிக சமீபத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்தியா, பெண்கள் வாழ்வதற்கான மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கின்றது. இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, சவுதி அரேபியா என்ற பட்டியல் நீள்கின்றது. இதில் 10வது இடத்தில் அமெரிக்கா இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, பாகுபாடு, பண்பாடு, பாலியல் வன்முறைகள், கடத்தல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் என்று அனைத்தையும் ஆராய்ந்து வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஆகும்.

என்னதான் அரசு இந்த ஆய்வு முடிவுகளை மறுத்து வந்தாலும், இந்த பிரச்சனைகள் அனைத்தையும் பெண்கள் நேரடியாகவோ, மறைமுகவாகவோ சந்தித்துதான் வருகின்றார்கள். பெரிய பெரிய திட்டங்கள், கனவுகள் என்று பேசிக்கொண்டே பெண்களுக்கான மரியாதையினை வீட்டில், சமூகத்தில், பொதுவாழ்வில் தர மறுத்துவிடுகின்றோம்.

ஒரு விசயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், நம்முடைய சமுதாய அமைப்பு ஆண்வழிச் சமூக எண்ணங்களாலும் செயல்முறைகளாலும் கட்டி அமைக்கப்பட்டது. பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடுகளைக் களைய நாம் ஆண்டாண்டுகளாக போராடி வருகின்றோம். பெண்களுக்கான நடைமுறைகள், விதிகள், கட்டுப்பாடுகள் என்பது அவள் பிறக்கும் போதே அவளுக்கு உருவாக்கப்பட்டுவிடுகின்றது.

ஹரியானாவில் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் தான் இருக்கின்றார்கள் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. இன்னும் நம் சமூகத்தில் ஆண் பிள்ளைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம், பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதில்லை. அதனால் தான் அவர்களை வயிற்றுலேயே அழித்துவிடுகின்றார்கள். பெண் குழந்தைகளை ஆரம்பக் கல்வி கற்க அனுமதிப்பது அதிகரித்து வருகிறது, ஆனால், பள்ளிப்படிப்பினை பாதியிலேயே விடும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஆண் குழந்தைகளின் படிப்பிற்கு செலவிடப்படும் பணத்தினை பெண் குழந்தைகளுக்கு செலவு செய்வதை பெற்றவர்களே விரும்புவது இல்லை.

இன்றும் சரியான வயதினை எட்டாத பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றார்கள். வறுமை, கடன் தொல்லை, மற்றும் சாதியக் கட்டுப்பாடு முறைகளை காரணம் வைத்து இது போன்ற செயல்களை செய்து வருகின்றார்கள். அப்படியாக திருமணம் ஆகும் பெண்கள் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தாயாகிவிடுகின்றார்கள். தலித், சிறுபான்மையினர், பழங்குடிகள், ஏழைகள் போன்ற பல்வேறு பின்னணியில் இருந்து வரும் பெண்களின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கின்றது.

பாலியல் வன்முறைகள்: டெல்லியை முதலில் அதன் ‘ரேப் கேப்பிட்டல்’ என்ற புகழ்பெற்ற பெயரில் இருந்து வெளிவர சொல்ல வேண்டும். அரசியல் பிரமுகர்கள் மிக எளிதாக பாலியல் சார்ந்த பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள். அவர்களை விடுவிக்க, ஆளும் கட்சி உறுப்பினர்களே போராட்டம் நடத்துவார்கள். நாம் இப்படியான அரசியல்வாதிகளிடம் தான் பெண்களுக்கான 33 சதவிகித அரசியல் இடஒதுக்கீட்டிற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த சில வருடங்களாக, அரசியல் பிரமுகர்கள் வெளிப்படையாக ஆண் ஆதிக்க சிந்தனைகளை மக்கள் மத்தியில் நிலைநிறுத்த முற்படுகின்றார்கள். உத்திரப் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி ஒருவர் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் அளவிற்கு இந்துப் பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மற்றொரு இந்துத்துவ தலைவர் “இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் பிரச்சனைகளில் இருந்து வெளிவர, அவர்கள் இந்துக்களாக மதம் மாற வேண்டும்” என்று குறிப்பிட்டார். இது போன்ற பேச்சுக்களால் இஸ்லாமிய சமூகத்தில் மாற்றங்களுக்காகப் போராடி வரும் பெண்களின் மனதிடம் உடைந்து போகின்றது.

திருமணத்திற்கு பின்னான பாலியல் வன்கொடுமைகள் புகார்கள் மற்றும் அதற்கான சட்டத்திட்டங்களுக்கும் கூட ஆளும் அரசாங்கம் எதிராகத்தான் இருக்கின்றது. ஏழேழு ஜென்மத்திற்கும் இணைபிரியாத பந்தம் என்ற கருத்தினை முன்வைக்கும் எண்ணங்களை உடையவர்களிடம் வேறென்ன பேச இயலும். மதம் மாறி, சாதி மாறி நடக்கும் திருமண பந்தங்களில் பெண்களின் உரிமையை மதிக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் மட்டுமே வருகின்றது தவிர பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள் என்று ஒன்றுமே இல்லை. பேருந்துகளும், இரயில்களும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாகவே இருக்கின்றது. கலவரங்களை பயன்படுத்தி பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் தடுக்கப்படுவதில்லை. தலீத் பின்புலத்தில் இருந்து வரும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது. பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குறைவான ஊதியம் காரணமாக பெண்கள் வேலைக்குப் போவதைக் கூட நிறுத்திவிடுகின்றார்கள். அதையும் மீறி ஒரு பெண் சம்பாதிக்கின்றாள் என்றால், அவள் விருப்பபடி அதை அவளால் செலவழிக்க இயலாது.

இந்த நாடு தினமும் ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. வறுமை, வேலை, கல்வி, இனம், பன்முகத்தன்மை, ஆரோக்கியம், தங்கும் இடம். இவை அனைத்திற்கும் மூலமாக களையப்பட வேண்டிய ஒன்று இருக்கின்றதென்றால் அது தந்தை வழிச் சமூகம் தான். பிரச்சனைகள் அங்கே களையப்பட்டால், அது தொடர்பாக சமூகத்தில் பரவி இருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளும் காணாமல் போய்விடும்.

பெண்ணியவாதி மற்றும் பாரதிய முஸ்லீம் மஹிலா ஆண்டோலன் அமைப்பின் உறுப்பினருமான சக்கியா சோமன் எழுதிய கட்டுரை

தமிழில் நித்யா பாண்டியன் 

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Where women are without fear a new survey says india is the most dangerous country for women