இரா.குமார்
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் மாநில அரசிடம் கொடுக்கப்படுகிறது. அந்தந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு அடிப்படையில்தான் மருத்துவக் கல்விக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதி எங்கே பாதிக்கப்பட்டுள்ளது என்று நீட் ஆதரவாளர்கள் நீட்டி முழக்குகின்றனர்.
இதில் முக்கியமக ஒன்றைக் கவனிக்க வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு போக மீதி உள்ள 31 சதவீத இடம் oc பிரிவில் வருகிறது. oc என்பது other cast அல்ல. இங்கே oc என்பது open competion. 31 சதவீத இடம் தகுதி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்ற எந்த சாதியைச் சேர்ந்தவரும் இதில் இடம் பெற முடியும். தாழ்த்தப்பட்ட ஒருவர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவருக்கும் oc பிரிவில் இடம் கொடுக்கப்படுகிறது. நீட் தேர்வால், இது இப்போது மறுக்கப்பட்டுள்ளது.
ஓ.சி. பிரிவில் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் இடம் பெறுவது இந்த ஆண்டு மிகவும் குறைந்துவிட்டது. காரணம், கிராமப்புற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த போதும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போனதுதான்.
நீட் தேர்வு குறித்தும் அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்தும் கிராமப்புற மாணவர்களுக்கு யாரும் சொல்லவில்லை. நகரங்களில் வசிக்கும் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றதால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போதும் நீட் தேர்வுக்கன் பயிற்சி கிடைக்க வழியில்லாமல் போனதால், கிராமப்புற மாணவர்கள் வாய்ப்பு இழந்துள்ளனர்.
துக்ளக் இதழின் ரீடர்ஸ் க்ளப் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு கடிதம் இதை உறுதிப்படுத்துகிறது. இதோ அந்தக் கடிதம். படித்துப் பாருங்கள் உண்மை புரியும்....
பிராமணக் குழந்தைகளே, நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு!
பிராமணக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!
உங்களில் பலருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டுமென்ற கனவு இருக்கும். நேற்றுவரை, “நாமெல்லாம் ஃபார்வர்ட் கம்யூனிட்டி. நமக்கு டாக்டர் சீட்டெல்லாம் கிடைக்காது” என்று நாமே சொல்லிக் கொண்டிருந்தோம். அதில் உண்மையும் இருந்தது.
ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நீட் தேர்வு முறை நமக்கு நல்ல பலன்களை தரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சில புள்ளி விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 22. அவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு சீட்களின் எண்ணிக்கை 2,652. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சேருவதற்காக விண்ணப்பித்த முற்படுத்தப்பட்ட மாணவர்கள் ( Forward Community – FC ) எண்ணிக்கை 4.6 சதவீதம் மட்டுமே. அவர்களில் 48 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். முற்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே பிராமணர்கள் கிடையாது. அதில், நாட்டுக்கோட்டை செட்டியார், முதலியார், சைவப் பிள்ளைகள் என பல சமூகத்தவரும் அடங்குவர். ஆக, இந்த 48 பேரில் எத்தனை பிராமணக் குழந்தைகள் இருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆனால், இந்த முறை நீட் தேர்வு மூலம் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. முற்படுத்தப்பட்ட மாணவர்கள் 6.7 சதவீதம் பேர் நீட் தேர்வை நம்பிக்கையோடு எழுதினர்.
கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியான போது, FC சமூகத்தினர் மட்டும் 8 சதவீத்ம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட 2652 மாணவர்களில் 8 சதவீதம் பேர் – அதாவது 211 பேர் முற்படுத்தப்பட்ட மாணவர்கள்.
கடந்த முறை வெறும் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் – இந்த முறை 211 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னைக் காட்டிலும் 4 மடங்கு – 400 சதவீதம் அதிக தேர்ச்சி விகித்த்தை முற்படுத்தப்பட்ட மாணவர்கள் சாதித்துள்ளனர். இதற்கு காரணம் நீட் தேர்வு முறை.
முன்பெல்லாம் மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இப்போது அப்படியல்ல. இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 63 சதவீதம் பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் (முன்னர் இவர்கள் எண்ணிக்கை 99 சதவீதமாக இருந்தது). தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 37 சதவீதத்தினர் பிற போர்டுகளில் பயின்றவர்கள். தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 2 எழுதும் மாணவர்களில் பிற போர்டுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம் மட்டுமே. ஆனால், எம்.பி.பி.எஸ்.க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிற போர்டு மாணவர் எண்ணிக்கை 37 சதவீதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரே காரணம் நீட் தேர்வு முறை.
எனவே, நீட் தேர்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். கடவுள் நம்பிக்கையோடும் கடின உழைப்போடும் நீட் தேர்வுக்கு உழைத்துப் படித்தால், பிராமணக் குழந்தைகள் டாக்டராவது உறுதி.
கட்டண விவரம்:
நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 13,600 மட்டுமே. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தால் ரூ. 11,600 மட்டுமே. (இந்தக் காலத்தில் LKGக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை விட பல மடங்கு இது குறைவு.)
நீட் தேர்வு முறையில் அரசு கோட்டாவின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கிடைத்தால், ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை கட்ட வேண்டும். தனியார் பல் மருத்துவமனையென்றால், ரூ. 2 லட்சம்.
நீட் தேர்வு மூலம் நிர்வாக கோட்டாவின் கீழ் (Management quota) எம்.பி.பி.எஸ். கிடைத்தால் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும்.
எனவே, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்க – செலவில்லாமல் எம்.பி.பி.எஸ். படிக்க – முனைப்புடன் நீட் தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் சிபிஎஸ்இ மாணவர்களாக இருந்தால் இன்னும் சுலபம். ஏனெனில், நீட் தேர்வு வினாத்தாளை செட் பண்ணுவதே சிபிஎஸ்இ போர்டுதான். எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் பாடங்களை (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) ஒழுங்காகப் படித்தாலே போதும். நீட் தேர்வை சிறப்பாக எழுத முடியும்.
வருங்கால பிராமண சமுதாயம் நிறைய டாக்டர்களை உருவாக்க வேண்டும். அதற்கு முதற்படி, நீட் தேர்வில் நிறைய பிராமணக் குழந்தைகள் நம்பிக்கையோடு பங்கேற்க வேண்டும். எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் பிராமணக் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 5 சதவீத்த்துக்கு மேல் இருந்தால், கிட்டத்தட்ட 300 பிராமணக் குழந்தைகள் ஆண்டுதோறும் டாக்டர்களாக வாய்ப்புண்டு.
எனவே, உங்களுக்கு தெரிந்த பிராமணக் குழந்தைகளை நீட் தேர்வு எழுத உற்சாகப்படுத்துங்கள். மீண்டும் பழைய உன்னதமான காலத்தை மீட்டு எடுப்போம். இது ஒன்றும் முடியாத காரியமல்ல.
இந்தக் கடித உணர்த்துவது என்ன?
* நீட் தேர்வு அமலுக்கு வரத கடந்த ஆண்டில், ஓ.சி. பிரிவில் 48 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. நீட் வந்தபிறகு 211 பேருக்கு கிடைத்துள்ளது. இது எப்படி நடந்தது. கிரமப்புற மக்களின் வாய்ப்பைப் பறித்து, முற்பட்ட வகுப்பினருக்குக் கொடுத்துள்ளது நீட்.
* தமிழ் நாட்டில் மாநில பாட திட்டம் அல்லாத பிற பாடதிட்டத்தில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் 2 சதவீதம் மட்டுமே. ஆனால், மருத்துவக் கல்வியில் இந்த ஆண்டு சேர்ந்திருப்பவர்களில் 63 சதவீதம் பேர் மட்டுமே மாநில பாடதிட்டத்தில் படித்தவர்கள். மீதி 37 சதவீதம் பேர் மற்ற பாடதிட்டத்தில் படித்தவர்கள்.
பிறபாடதிட்டத்தில் படித்த 2 சதவீதம் பேருக்கு 37 சதவீத இடம் கிடைத்துள்ளது. மாநில பாட திட்டத்தில் படித்த 98 சதவீதம் பேருக்கு கிடைத்திருப்பது வெறும் 67 சதவீத இடம்தான்.
இதிலிருந்தே, நீட் யாருக்கு ஆதரவாக உள்ளது என்பது தெரிகிறது அல்லவா? கிராமங்களில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கவும், அவர்கள் யாரும் டாக்டர் ஆகிவிடாமல் தடுக்கவுமே நீட் வழி செய்கிறது. சனாதன முறையை மீண்டும் புகுத்துகிறது. பெரியார் பட்டபாடெல்லாம் வீணாகப் போகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை இருள் கவ்வப் போகிறது. இன்னும் எத்தனை அனிதாக்கள் வாய்ப்பிழந்து வாழ்விழக்கப் போகிறார்களோ? நாம் என்ன செய்யப் போகிறோம்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.