மோடி – மன்மோகன்சிங் மோதல் யாருக்கு லாபம்?

குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது பாகிஸ்தானுடன் சேர்ந்து தன்னை கொல்ல காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி சொன்ன குற்றச்சாட்டு எத்தகையது?

manmohan-modi

ஸ்ரீவித்யா

குஜராத் தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தானின் உதவியை காங்கிரஸ் நாடுகிறது என்று மிகப் பெரிய குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க, இந்திய அரசியலே தகிக்க ஆரம்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகனை சிங், அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததோடு, பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேச வைத்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப் பெரிய கவுரவப் பிரச்னையாகும். தனது சொந்த மாநிலத்தில், மீண்டும் பாஜ ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் அவர் மிகத் தீவிரமாக இருப்பது, தொடர்ந்து பல நாட்களாக அங்கு முகாமிட்டதில் இருந்து தெளிவாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியும் புது வியூகத்துடன் களமிறங்கியுள்ளதால், மீண்டும் பாஜ ஆட்சி அமைவது அவ்வளவு சுலபமாக இல்லை என்று தெரிகிறது. கருத்துக் கணிப்புகள் பாஜவுக்கு சாதகமாக இருந்தாலும், எந்த ஒரு வாய்ப்பையும் இழப்பதற்கு மோடியும் கட்சித் தலைவர் அமித்ஷாவும் தயாராக இல்லை.

மணிசங்கர் அய்யரின் `நீச் ஆத்மி’ பேச்சு மோடிக்கு பிரசாரம் செய்ய உதவினாலும், காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுல், மணிசங்கர் அய்யரை சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டினார். அது காங்கிரசின் செல்வாக்கை உயர்த்தியது.

இந்த நிலையில், மணிசங்கர் அய்யரின் வீட்டில் சில தினங்களுக்கு முன் ஒரு கூட்டம் நடந்துள்ளது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோருடன், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ ஆலோசகர், இந்தியவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆகியோரும் பங்கேற்றனர். இதைத்தான் குஜராத் பிரசாரத்தில் முன் வைத்தார், மோடி.

குஜராத் முதல் கட்ட தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதை தெரிந்து கொண்டு பிரதமர் பாகிஸ்தானை பிரச்சாரத்துகாக, பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி என்ற பழியை போடுவதாக, காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. வெளிநாட்டு தூதரகளை எதிர்கட்சியினர் சந்திப்பது புதிதல்ல. அதனை அரசியலாக்குவதுதான் புதிது என்கிறார்கள், காங்கிரசார்.

ஆனால் பாஜக தரப்பிலோ வேறு மாதிரி சொல்கிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமாக உள்ளது. பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சு என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்து, பாகிஸ்தான் தரப்புடன் காங்கிரஸ் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது.

சீனாவுடன் டோக்லாம் பிரச்னை இருந்தபோது, சீன தூதரை ராகுல் சந்தித்து பேசியது போன்றதே, இந்த ரகசிய சந்திப்பு கூட்டமும். முதலில் மறுத்த அவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர். இப்போதும் அப்படித்தான் மறுத்தார்கள். பின்னர் ஒப்புக் கொண்டனர்.

இந்திய தேர்தல் முறைகளில் பாகிஸ்தான் எந்த விதத்திலும் தலையிட முடியாது. இருந்தாலும், ஒரு சிறிய வாய்ப்பைக் கூட பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் கொடுக்கக் கூடாது என்பதே மோடி குற்றச்சாட்டின் அடிநாதமாகும்.

நாங்கள் தேர்தல் குறித்து பேசவில்லை. இந்தியா – பாகிஸ்தான் உறவு குறித்தே பேசினோம் என, மன்மோகன் சிங் கூறியுள்ளார். பல பிரச்னைகளுக்கு கருத்து ஏதும் தெரிவிக்காத அவர், முன்னாள் பிரதமர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம் என்பது பிஜேபியினரின் வாதம்.

மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையிலும் சிக்காதவர், கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர். அவருடைய அறிவுத்திறமை, நிர்வாக ஆளுமை குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டது தவறே.
பாகிஸ்தான் பிரச்னை குறித்து பேசுவதால் குஜராத் தேர்தலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்துவதே மோடியின் நோக்கமாகும். மன்மோகன் சிங் உள்ளிட்டோரை அவர் பேச வைத்துள்ளார். பாகிஸ்தானும் வரிந்து கட்டிக் கொண்டு பதில் கூறியுள்ளது.

மோடி ஒரே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைக்க முயன்றுள்ளார். அதில் முழுமையாக சிக்கப் போவது யார் என்பதை, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளே முடிவு செய்யும்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Who is benifit to modi manmohan singh conflict

Next Story
என்ன செய்யப்போகிறார் ரஜினி?rajini
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com