கவிதா முரளிதரன்
ஜிக்னேஷ் மேவானி என்கிற ஆளுமையை ஊடகங்கள் உருவாக்கவில்லை. ஒரு போராட்டத்திலிருந்து பிறந்தவர் அவர். யானைக்குள் புகுந்த எறும்பு போல குஜராத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் கூட ஊடகங்களுக்கு அவர் பற்றி பெரிய அலட்டல் எல்லாம் இல்லை.
அதே போலதான் மேவானிக்கும். எந்த ஊடகத்துடன் பேச வேண்டும். எந்த ஊடகத்துடன் பேச கூடாது என்கிற தேர்வு அவருடையது. ஊடகங்களுக்கு அழைப்பு இல்லாத ஒரு நிகழ்வுக்குச் சென்று ஜிக்னேஷ் மேவானியிடம் தம்மை சந்திக்க வேண்டும் என்று ஊடகவியலாளர்களின் கோரிக்கைக்கு அவர் செவி சாய்த்தார். அவர் கோரியதெல்லாம், அங்கு ரிப்பளிக் தொலைகாட்சியின் மைக் இருக்க கூடாது என்பதுதான். அந்த கோரிக்கையின் பின்னால் உள்ள நியாயத்தை கடந்த சில நாட்களாகவே ஜிக்னேஷ் மேவானியை ரிப்பளிக் தொலைகாட்சி சித்தரித்து வரும் விதம் அறிந்த யாரும் புரிந்து கொள்ள முடியும். ரிப்பளிக் தொலைகாட்சியின் மைக் கூடாது என்று சொன்ன காரணத்துக்காக அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்துவிட்டதாகச் (உண்மையில் மைக்கை எடுக்காவிட்டால் பேச மாட்டேன் என்று அவர்தான் நகர்கிறார்) சொல்லி ஊடக ஓர்மை (solidarity) என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடக ஓர்மை தேந்தெடுக்கப்பட்ட ஓர்மை (selective solidarity) என்பதுதான் என் மனப்பதிவு. காரணம், இதற்கு முன்பு தமிழ்ச் சூழலில் பல புறக்கணிப்புகள், அவமானங்கள் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் நிகழ்ந்திருக்கின்றன.
2011ல் பதவியேற்ற பிறகு வாரம் ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்று வாக்கு கொடுத்தார் ஜெயலலிதா. பின்னர் எப்போதாவதுதான் அவர் சந்தித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்ட ஜெயலலிதாவை எதிர்த்து காட்ட நம்மிடம் எந்த ஓர்மையும் இல்லை. அவர் எப்போதாவது சந்திக்க மாட்டாரா என்று காத்துக் கிடந்தோம்.
சில வருடங்களுக்கு முன்பு பாலிமர் தொலைகாட்சி நிருபர் ஒருவர் ஒரு சினிமா நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்டார். எந்த சலனமும் இல்லாமல் அந்த நிகழ்வை மற்றவர்கள் கவர் செய்து கொண்டிருந்தார்கள்.
பா.ஜ.க தலைவர்கள் தமிழக மீடியாக்களை கையாளும் விதமே அலாதியானது. அதிலும் எச்.ராஜா கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பவர்.
அசௌகர்யமாக கேள்வி கேட்ட பல ஊடகவியலாளர்களை சமூக விரோதி என்று அந்த சந்திப்புகளின் போதே திட்டியிருக்கிறார் ராஜா. நாம் சும்மாதானே இருந்தோம்?
கடந்த வருடம் மார்ச் மாதம் தஞ்சாவூரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் விவசாய நெருக்கடி பற்றி ராஜாவிடம் கேள்வி எழுப்பினார். அவரை தேசத் துரோகி, மோடி எதிரி என்று வசை பாடியதோடு “எவ்வளவு வரி கட்டியிருக்கிறீர்கள், அதை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று மிரட்டினார் ராஜா. அதன் பிறகு தமிழக ஊடக சூழலில் ஒரு சிறு அதிர்வு கூட ஏற்படவில்லை.
தஞ்சாவூரில் (அநேகமாக) ஒரு தமிழ் பத்திரிக்கையாளருக்கு அவமானம் நேர்ந்தால் அது எச்.ராஜாவின் சுதந்திரம். சென்னையில் தன்னை வன்மத்தோடு தொடர்ந்து வரும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி தரமாட்டேன் என்று சொன்னால் அது ஜிக்னேஷ் மேவானியின் திமிர். எவ்வளவு மேட்டிமைத்தனம் நம்மிடம்?
நம் அதிகாரம், சுதந்திரம் எல்லாம் ஜிக்னேஷ் மேவானியை மட்டுமே புறக்கணிக்க உதவும். எச்.ராஜாவின் நிழலை கூட தொடாது.
சமூக ஊடகங்கள் கோலோச்சி வரும் காலகட்டத்தில் ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம். மரபு ஊடகங்களில் துணையில்லாமல்தான் உருவானார் ஜிக்னேஷ் மேவானி. இனியும் அவருக்கு அந்த ஊடகங்களின் துணை தேவை இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்.
மேவானிக்கு எதிரான ஊடக ஓர்மை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. அந்த ஓர்மை அதிகார பீடங்களுக்காகவும் கிளர்ந்தெழும் என்று நான் துளியும் நம்பவில்லை. ஒரு வேளை ஊடகவியலாளர்கள் எல்லோருடனும் அப்படி ஓர்மையுடன் செயல்பட வேண்டும் என்று விரும்பினாலும் நிர்வாகங்கள் அதற்கு உடன்படாத நிலையே இங்கு நிலவும். மேவானிக்கு எதிரான ஊடக ஓர்மை நேற்றிலிருந்து பல ஆங்கில செய்தி சேனல்களில் தலைப்புச் செய்தி. இதே மாதிரியான ஒரு ஓர்மை எந்தவொரு பா.ஜ.க தலைவருக்கு எதிராக நிகழ்ந்தாலும் அது செய்தியாக மாறாது, மட்டுமல்ல அந்த ஓர்மையே நிலைத்திருக்காது என்பதுதான் யதார்த்தம். கார்ப்பரேட்களால் நடத்தப்படும் ஊடகங்களில், ஓர்மை என்பதொரு மாயை.
(கட்டுரையாளர் கவிதா முரளிதரன், சுயசார்பு பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர்)