எம்.எல்.ஏ.க்கள் சிறை வைப்பு யாருக்கு அவமானம்?

இரா.குமார்

ஆட்சியைத் தக்க வைக்கவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் எம்.எல்.ஏ.க்களை கவுரவமாக சிறை பிடித்து வைத்திருப்பது மக்களாட்சியில் நடக்கும் கேலிக்கூத்துகளில் ஒன்று. ராஜ்ய சபா தேர்தலில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜக வளைத்துவிடக்கூடாது என்பதற்காக, தனது கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாவுக்குக் கொண்டு வந்து சிறை வைத்துள்ளது காங்கிரஸ்.

இப்படி சிறை வைக்கும் வழக்கம் இன்று நேற்று தொடங்கியதல்ல. 40 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதன் ஆரம்பம் உள்ளட்சி தேர்தல்தான். 1960 களில், ஊராட்சித் தலைவரை வார்டு உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள். இப்போது உள்ளது போல மக்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறை அப்போது இல்லை. எனவே, ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு முன், தனது ஆதரவு உறுப்பினர்களை வெளியூரில் தங்க வைத்து தேர்தலன்று அழைத்து வந்து தனக்கு ஓட்டுபோட வைத்தனர். அதேபோல, ஒன்றியத் தலைவரை ஊராட்சித் தலைவர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். ஒன்றியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் ஆதரவு ஊராட்சித் தலைவர்களை ரகசியமாக ஒரு இடத்தில் தங்க வைத்து தேர்தல் வரை பாதுகாத்தனர். தனக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளவரை, எதிர் அணி வேட்பாளர், ஆசை காட்டி இழுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்தனர். ஆக அதிகாரத்தைக் கைப்பற்ற, இப்படி சிறை பிடிக்கும் வழக்கம் 1960 களிலேயே தொடங்கிவிட்டது.

எம்.எல்.ஏ.க்களை சிறை பிடிக்கும் வழக்கம், எனக்குத் தெரிந்து, முதன் முதலில் ஆந்திராவில் தொடங்கியது. 1984 ம் ஆண்டில் பெரும்பான்மை பலத்துடன் முதல்வராக இருந்தார் என்.டி. ராமராவ். அவருடைய அமைச்சரவையில் இருந்த பாஸ்கர ராவை வைத்து ராமராவ் அட்சியைக் கவிழ்க்க திரைமறைவு நாடகத்தை அரங்கேற்றினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. தெலுங்கு தேசம் கட்சியின் 91 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார் பாஸ்கர ராவ். காங்கிரசின் 57 எம்.எல்.ஏ. க்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உரிமை கோரினார். எந்த கேள்வியும் கேட்காமல், பாஸ்கரராவ் தலைமையிலான அமைச்சரவைக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ராம் லால்.

ஆனாலும் என்.டி. ராம ராவுக்கு 161 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. இவர்களின் ஆதரவைத் தக்க வைப்பதில் பெரும் பங்காற்றியவர், ராம ராவின் மருமகனும் இப்போதைய ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுதான். 161 எம்.எல்.ஏ.க்களையும் ஒரே இடத்தில் தங்க வைத்து பாதுகாத்தார். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 161 பேரையும் அடையாள அட்டையுடன் குடியரசுத் தலைவர் முன்பு அணிவகுப்பு நடத்த டில்லிக்கு அழைத்துச் சென்றார் ராம ராவ். அதிகாரத்தை தக்க வைக்க எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்தது, எனக்குத் தெரிந்து இதுதான் முதல் முறை. ராம ராவ் மீண்டும் முதல்வர் ஆனார்.

1984ல் ராம ராவ் அரசைக் காப்பாற்றிய அதே சந்திரபாபு நாயுடு, 1995ல் ராம ராவ் அரசைக் கவிழ்த்தார். தெலுங்கு தேசம் கட்சியின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்தார். அவர்களை வைஸ்ராய் ஓட்டலில் தங்க வைத்தார். அந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க, வைஸ்ராய் ஓட்டலுக்க்கு முதல்வர் ராம ராவ் வந்தார். அவரை உள்ளே விடவில்லை. “நான் முதலமைச்சர் சொல்கிறேன். கதவைத் திறங்க” என்று ராம ராவ் உத்தரவிட்டும் கதவு திறக்கப்படவில்லை. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொண்ட சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஆனார். ராம ராவ் பதவி இழந்தார்.

தமிழ்நாட்டில், எம்.எல்.ஏ.க்க்களை சிறைபிடிப்பது, கடந்த 1988ல் தொடங்கியது. எம்ஜிஆர் மறைந்த பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. எம்ஜிஆர் மனைவி ஜானகியை முன்னிறுத்தி, அவரை முதல்வராக்கி ஒரு அணியை வழி நடத்தினார் ஆர்.எம்.வீரப்பன். இந்த அணி ஜா அணி என்று அழைக்கப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவை இந்த அணி பெற்றிருந்தது.

ஜெயலலிதா தலைமையிலான ஜெ. அணியில் 32 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இவர்கள் ஜா. அணிக்குத் தாவிவிடக் கூடாது, அல்லது இவர்களை ஜா. அணியினர் தங்கள் பக்கம் இழுத்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்க்கை எடுத்தனர். ஜே. அணியில் இருந்த திருநாவுக்கரசு ( இப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்தான்) சாத்தூர் ராமச்சந்திரன் (இப்பொது திமுகவில் உள்ளார்) இருவரும், ஜெ. அணி எம்.எல்.ஏ.க்களை வட மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டனர். மும்பை உட்பட பல ஊர்களிலும் சுற்றிவிட்டு, ஜானகி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நாளன்று சென்னை வந்தனர்.

ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மயிலாப்பூரில் உள்ள பிரசிடெண்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இங்கிருந்து எந்த எம்.எல்.ஏ.வும் வெளியில் போக முடியாது. சரியாகச் சொன்னால், ஓட்டல் அறைகளில் சிறை வைக்கப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த அன்று, ஓட்டலில் இருந்து நேரடியாக சட்டப் பேரவைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அடுத்ததாக நடந்தது கூவத்தூர் கூத்து. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று போர்க்கொடி தூக்கியதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தவுடன், அவர்களே எதிர்பார்க்காத வகையில் பஸ்களில் ஏற்றப்பட்டு, கூவத்தூ ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டனர்.

சமீபத்திய சிறை பிடிப்பு குஜராத்தில். அந்த மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவதையடுத்து, அங்கு இம்மாதம் 8ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது. தனது மூன்றாவது வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக வலை விரிக்கத் தொடங்கியது. இந்த வலையில் தனது கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் விழுந்ததைக் கண்ட கங்கிரஸ் உஷாரானது. மற்ற எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க, அவர்களை சிறைவைக்க முடிவு செய்தது. தனது கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாதான் பாதுகாப்பான இடம் என்று முடிவு செய்தது. 44 எம்.எல்.ஏக்களையும் விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவந்து, அருகில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாத்து வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் சிறைவைப்பு என்பது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அவமானம். தனது தலைமைக்கும் கட்சிக்கும் எம்.எல்.ஏ.க்கள் உண்மையான விசுவாசமாக இருப்பார்களானால், சிறை வைப்புக்கு அவசியமே இருக்காது. யார் என்ன ஆசை காட்டினாலும் விலை போகமாட்டார்கள். கடத்திக்கொண்டு போய் வைத்து மிரட்டினாலும் கூட, சட்டப் பேரவையில் வாக்களிக்கும்போது அவர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும். கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசம் இல்லாத எம்.எல்.ஏ.க்கள்தான் விலை போவார்கள். விலை போய்விடுவார்கள் என்று பயந்துதான் இந்த எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்படுகின்றனர். இப்படி விலைபோகக்கூடியவர்கள் எம்.எல்.எ.க்களாக இருப்பது மிகப் பெரிய அவமானம். இந்த அவமானம் அவர்களுக்கு மட்டுமல்ல, இப்படிப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய நமக்கும்தான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close