தெலுங்கானா சட்டப்பேரவையை அம்மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் கலைத்ததற்கான அரசியல் பின்னணி குறித்து விளக்குகிறார் அ.பெ.மணி.
அ.பெ.மணி
எண் 6-ஐ தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதுகின்ற தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், செப்டம்பர் 6 ஆம் தேதி சட்டப்பேரவையை கலைக்க தனது அமைச்சரவையை கூட்டி பரிந்துரைத்துள்ளார்.
கூட்டு எண் 6 வரும் வகையில் 105 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்துள்ளார். வாஸ்து, ஜாதகம், எண் கணிதம் போன்ற விஷயங்களில் அதீத நம்பிக்கை கொண்ட முதல்வர்களின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் ஒருவர்.
தற்போது 64 வயதாகும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தெலுங்கானா பகுதி மக்களின் நலன் மேம்பட தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது கட்சியை துவங்கினார் சந்திர சேகர ராவ்.
2 ஜூன் 2014 ஆம் ஆண்டு தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டது. 2014 ஆவது ஆண்டு நடந்த முதல் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 63 இடங்களை வென்றது, மொத்த இடங்கள் 119. பின்னர் பல்வேறு கட்சிகளில் இருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு தாவினர். அதனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் உறுப்பினர் எண்ணிக்கை 90-ஐ தொட்டது.
அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று சட்டப்பேரவையை கலைத்த ஆளுநர் இடைக்கால முதல்வராக தொடருமாறு சந்திரசேகர ராவை கேட்டுக் கொண்டுள்ளார். குடியரசு தலைவர் ஆட்சியை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன் வைத்துள்ளது.
இந்த சட்டப்பேரவையின் ஆயுட்காலம் இன்னும் 9 மாதங்களுக்கு உள்ளது, இப்போது கலைக்கப்பட்ட காரணத்தால் மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். வருகின்ற நவம்பர்- டிம்பரில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநில தேர்தல்கள் நடை பெற உள்ளன. இந்த நான்கு மாநிலங்களின் தேர்தலுடன் தெலுங்கானா தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.
சட்டமன்ற தேர்தலை தற்போது நடத்துவது தனக்கு சாதகமாக இருக்கும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கருதுகிறது, அடுத்து வருகின்ற தேர்தலை வென்று விட்டால் பாராளுமன்ற தேர்தலுக்கு வலிமையாக தயாராகலாம் என சந்திரசேகர ராவ் கணக்கிடுகின்றார்.
2019 ல் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை இணைந்து சந்திப்பதைக் காட்டிலும் முதலில் சட்டமன்ற தேர்தல் அடுத்து நாடாளுமன்ற தேர்தல் என திட்டமிட்டு தற்போதைய சட்டப் பேரவையை கலைக்க அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
ராகுல் காந்தி மீது கடுமையான தாக்குதலை கே சி ராவ் முன் வைத்துள்ளார், தங்களது தலைவரை கோமாளி என விமர்சித்த தெலுங்கானா முதல்வரை சர்வாதிகாரி என அந்த மாநில காங்கிரஸ் விளித்துள்ளது. பாஜக - ராஷ்டிரிய சமிதி இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகவும் காங்கிரஸ் கருதுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் எதிர் கட்சி வாக்குகள் சிதறுண்டு கிடக்கின்றன. காங்கிரஸ்- தெலுங்கு தேசம் இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. அத்தகைய சூழலில் தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என தெலுங்கு தேசம் திட்டமிடுகிறது.
நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்ற கோரிக்கையை பாஜக முன் வைத்து வருகின்ற இந்த நேரத்தில் சட்டப்பேரவையை கலைக்க ஆளுநர் ஒத்துக் கொண்டது, நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்ற நிலைப்பாட்டில் இருந்து பாஜக பின் வாங்குகிறதோ என்கின்ற ஐயத்தினையும் உண்டாக்குகிறது.
முதலில் காங்கிரசில் இருந்த ராவ் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்தார், பிறகு தனிக்கட்சி கண்டு முதல்வர் ஆனார். எதிர்பாராத நேரங்களில் ஆச்சரியமான அரசியல் காய் நகர்த்தல்களுக்கு பெயர் பெற்ற தெலுங்கானா முதல்வர் தற்போது சட்டமன்ற தேர்தலை முன் கூட்டியே சந்திக்கிற அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.