இந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பெண் கல்வி மையங்கள் ஏன் நமது அரசை அச்சுறுத்துகின்றன?

பல்கலைக்கழகங்களில் பெண் கல்வி மையங்கள் இருக்க வேண்டிய தேவை மட்டுமல்ல, வளர வேண்டிய தேவையும் இருக்கிறது.

ஷில்பா பாட்கே

பெண்ணிய இயக்கத்திலிருந்து தோன்றிய பலதுறை தளம்தான் பெண்கள் ஆய்வு. இந்தியாவில் பெண் ஆய்வு என்பது Towards Equality: A Report on the Status of Women in India in 1974 என்கிற புத்தகத்தின் வெளியீட்டோடு தொடர்புப்படுத்திப் பார்க்கப்படுகிறது. சமூகத்தில் பெண்களின் வீழ்ச்சி நிலையை அந்த புத்தகம் வெளிக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்வினையாக 1976ல் பெண் ஆய்வு பற்றிய ஒரு திட்டத்தை முன்னெடுத்தது சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்திய கவுன்சில். இதற்கு முன்பு மும்பையில் உள்ள எஸ்.என்.டி.டி பெண்கள் பல்கலைகழகத்தில் பெண் ஆய்வுக்கான ஆய்வு மையம் 1974ல் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு மையம் 1981ல் மும்பையில் ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தது. அதில்தான் பெண் ஆய்வுக்கான இந்திய மையம் தொடங்கப்பட்டது. தேசிய அளவில் ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் இதில் இடம்பெற்றிருந்தார்கள்.

1986ல் தேசிய கல்விக் கொள்கையில் பெண் ஆய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. 7வது திட்ட காலத்திலிருந்து பல்கலைகழக மானிய குழு பல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் பெண் ஆய்வை ஊக்கப்படுத்தி வருவதாக சொல்கிறது 12வது திட்ட அறிக்கை. 11வது திட்டத்தின் கீழ் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளாக அவற்றை மேம்படுத்தவும் யோசனைகள் இருந்ததாக சொல்கிறது. இன்றைய சூழலில் இந்தியாவில் பல்கலைகழகங்களிலும் கல்லூரிகளிலும் 159 பெண் கல்வி மையங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்திய கவுன்சில் உதவியுடன் தனித்தும் இயங்குகின்றன. 12வது திட்டம் இந்த மையங்களை மேம்படுத்தவும் விரிவுப்படுத்தவும் திட்டங்களை வைத்திருந்தது.

gender-and-education_pic1

தீவிர அரசியலிலிருந்து பிறக்கும் பிற துறைகளுக்கு உள்ள பிரச்னைகள் பெண் ஆய்வு துறைக்கும் இருந்தது. ஒரு தீவிர அரசியலின் கோட்பாடுகள் பல்கலைகழகத்துக்குள் நிறுவனமயப்படுத்தப்படும் போது அதிலுள்ள முரண்களை பெண் ஆய்வு மையங்களும் பிரதிபலித்தன. இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவில் கூட பெண் ஆய்வு மையங்கள் தங்களுக்கென்ற நெறிமுறைகளையும் உயர் பீட தலைமைகளையும் வகுத்துக்கொள்கிறார்கள் என்கிற விமர்சனம் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் மீறி நடைமுறைகளை கேள்விக்குட்படுத்திக்கொண்டிருக்கிறது பெண்கள் ஆய்வு.

சொல்லப்போனால் சுய விமர்சனமும் இதில் உண்டு. 2006ல் தமிழ்நாட்டில் உள்ள பெண் ஆய்வு பிரிவுகளைப் பற்றி அவை அரசியல் ரீதியாகப் பார்க்கப்படவில்லை என்று எஸ். ஆனந்தியும் பத்மினி சுவாமிநாதனும் சொன்னார்கள். அவர்கள் சுட்டிக்காட்டுவது போலவே பல்கலைகழகங்களில் பிற பாட பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்படாதவர்களே பெரும்பாலும் பெண்கள் ஆய்வு பிரிவில் சேருகிறார்கள். ஆனால் இரண்டு பெண் ஆய்வு பாடப்பிரிவுகள் பற்றிய இன்னும் வெளியிடப்படாத தனது 2016ன் ஆய்வேட்டில் (இரண்டு இப்படி சொல்கிறார் நிதிலா கனகசபை: இந்த பல்கலைகழகங்களில் பெண் ஆய்வு பிரிவில் படிக்கும் மாணவர்கள், படிப்பின் போது மாற்றமடைகிறார்கள், அதோடு நிற்காமல் பெண் ஆய்வை பெண்ணிய அறிஞர்களாக மாற்றுபவர்களாகவும் அவர்கள் உருமாறுகிறார்கள்.

இந்த வருடம் மார்ச் மிகவும் பதற்றமாக ஒன்றாக கழிந்தது. பெண் ஆய்வு மையங்களுக்காக 12வது திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, திட்டம் முடிந்த பிறகு தொடருமா என்பது பற்றி இறுதி நிமிடம் வரையில் பல்கலைகழக மானிய குழுவால் உறுதி செய்ய முடியவில்லை. 12வது திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நிலைக்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருந்தது. இப்போது ஒரு வருட நீடிப்புக் கொடுத்திருக்கிறது மானிய குழு. அதனால் இன்னமும் அச்சுறத்தலை எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள் ஊழியர்கள். இந்த நீடிப்பு உத்தரவு வர தாமதமான காரணத்தால் சில பல்கலைகழகங்களில் பெண்கள் ஆய்வு மையம் மூடப்படும் என்று தவறாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது உண்மையில்லை. நிதி ஒதுக்கீடு பிரச்னைகள் எல்லா பல்கலைகழகங்களையும் பாதித்தாலும் குறிப்பாக பெண்கள் ஆய்வு மையங்களை பாதித்தாலும் பல பத்தாண்டுகளின் உழைப்பையும் அரசியலையும் அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிவிட முடியாது.

gender-and-education_pic2
பல்கலைகழகங்களில் பெண் ஆய்வு மையங்களின் இருப்பும் அதோடு சேர்ந்த பெண்ணிய நிலைபெறுதலும் (பெண் ஆய்வு மையம் இருந்தால் நீங்கள் எதாவது ஒரு வகையில் பெண்ணிய அரசியலை ஏற்றுக்கொள்ள வேண்டும்) வ்ல்து சாரி அரசியல் தத்துவவியலாளர்களை பதற்றப்படுத்துகிறது என்பது உண்மைதான். எந்த வடிவத்திலும் வகையிலும் அவர்களுக்கு பெண்ணியம் என்பது வெறுப்புக்குறியதே.

பத்தாவது திட்டத்தின் கீழ் 2003ல் தேசிய ஜனநாயக அரசு, பல்கலைகழகங்களின் பெண் ஆய்வு மையங்களின் பெயரை பெண் மற்றும் குடும்ப ஆய்வு மையங்கள் என்று மாற்ற முனைந்தது. பெண் ஆய்வு நிபுணத்துவங்கள் எல்லாம் குடும்பத்தில் நிலவும் தந்தைமைய-பாலின உறவுகள் மீதான கடுமையான விமர்சனங்களை கொண்டவை என்பதை வைத்து பார்க்கும் போது, அரசின் இந்த முடிவு அவ்வளவு ஒன்றும் அப்பாவித்தனமான முடிவு அல்ல. பெண்ணிய நோக்கங்களை சிதைக்கும், அதன் மைய கருவை மாற்ற முயலும் முடிவு அது.

வலதுசாரி தத்துவவியலாளர்கள் உயர்த்திப் பிடிக்கும் பல முன்முடிவுகளை பெண்ணியம் சவாலுக்குட்படுத்துகிறது. வேலை பிரிவுகளில் பாலின பேதம், ஆண்-பெண் உறவுகளில் அடுக்குநிலைகள், பாலின இருமங்கள் இப்படி பல.

ஆணாக தோன்றுபவர்கள் எல்லாம் ஆண்கள் அல்ல என்பதையும், பிறப்பில் பெண் என்கிற பாலின அடையாளம் கொண்டவர்கள் பெண்ணாக வாழ விருப்பம் இல்லாவிட்டால் அதற்கான அவசியம் இல்லை என்பதையும், பெண் ஆய்வுகள் மூலமாக பெண்ணியம் முன் வைக்குமென்றால் பின் எதுவும் சாத்தியம். இது இன்றைய அரசுக்கு மிக ஆழமான அச்சுறுத்தல்.

இதன் பொருட்டு மட்டுமே பல்கலைக்கழகங்களில் பெண் கல்வி மையங்கள் இருக்க வேண்டிய தேவை மட்டுமல்ல, வளர வேண்டிய தேவையும் இருக்கிறது.

(கட்டுரையாளர் ஷில்பா பாட்கே, மும்பையிலுள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சைன்ஸ் நிறுவனத்தில், ஸ்கூல் ஆப் மீடியா அண்ட் கல்சுரல் ஸ்டடிஸ் ஆசிரியராக உள்ளார்.)

தமிழில் கவிதா முரளிதரன்

×Close
×Close