Advertisment

உயர் கல்விக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடு செல்வது ஏன்?

மிலிந்த் சோஹோனி: இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் சர்வதேச பிரச்சனைகளில் தொடர்பற்று இருக்கின்றன. .

author-image
WebDesk
New Update
Why lakhs of Indians go abroad to study, இந்திய மாணவர்கள், வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள், ஏன் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடு சென்று படிக்கிறார்கள், ரஷ்யா, உக்ரைன், ரஷ்யா உக்ரைன் நெருக்கடி, indian students, higher abroad, migration

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்வதாகவும், இதற்காக 28 பில்லியன் டாலர்கள் அல்லது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை செலவிடுவதாகவும் சமீபத்திய அறிக்கை ஒன்று மதிப்பிடுகிறது. இதில், சுமார் 6 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்கள் செலுத்தும் கட்டணமாகும். .இப்படி இந்திய மாணவர்கள் செலுத்தும் சுமார் ரூ. 45,000 கோடியைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 10 புதிய ஐஐடிகள், ஐஐஎஸ்இஆர்கள் அல்லது ஜேஎன்யுக்கள் அல்லது அதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் நடத்துவதற்கும் முடியும். சமீபத்திய சிஏஜி அறிக்கையின்படி, 2008-2009 காலகட்டத்தில் தொடங்கப்பட்ட எட்டு புதிய ஐஐடிகள் சிறப்பாகச் செயல்படவில்லை. புதிய தனியார் பல்கலைக்கழகங்களின் உறுதியான பிடிமானமும் கூட மேற்கூறப்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் மற்றும் அவர்கள் செலுத்தும் கல்வி கட்டணம் வெளிநாடுகளுக்கு செல்வதையும் தடுக்க முடியவில்லை. ஆக, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும், கடந்த எட்டு ஆண்டுகால தீவிரமான கொள்கை முயற்சிகளுக்குப் பிறகும் கூட, உயர்கல்வியில் சுயசார்பு அல்லது புதுமையான அம்சம் எதுவும் நம்மிடம் இல்லை. அது ஏன்?

Advertisment

முதலாவதாக, இது வேலைவாய்ப்பை பற்றியதாகும். கடந்த சில ஆண்டுகளின் வருமான வரித் துறையின் தரவுகளின்படி, சுமார் 3 கோடி வரி செலுத்துவோர் இருப்பதைக் காண்கிறோம். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு, சம்பளம் பெறுபவர்களின் எண்ணிக்கை இருப்பதாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்கள் வாழ்வில் சராசரியாக 20 வருடங்கள் வரி செலுத்துகின்றனர் என்று வைத்துக் கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன என்று அறிந்து கொள்ளலாம். இந்த எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளும் அடங்கும். வருமான வரித் துறையின் கூடுதல் தகவல்களின் படி இவற்றில், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் (எல்பிஏ) அல்லது அதற்கு மேலும் சம்பளம் பெறும் சுமார் 3 லட்சம் “நல்ல” வேலைகள் மற்றும் ரூ. 10 லட்சம் தொடக்க சம்பளம் வழங்கும் 30,000 உயர் அந்தஸ்து வேலைகள் உள்ளன. ஆண்டுக்கு கூடுதலாக. 3 லட்சம் நல்ல வேலைவாய்ப்புகளில், சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் முக்கியமான ஐடி நிறுவனங்களில் கிடைப்பதாக இருக்கிறது. உயர்ந்த அந்தஸ்து வேலைவாய்ப்புகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைக்கின்றன. இத்தகைய வேலைவாய்ப்புகள் சந்தைப்படுத்தல், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொறியியல் சேவைகளில் இருந்து கிடைக்கின்றன. இந்திய வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் எந்த ஒரு இந்திய நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் என்ற ஆரம்ப சம்பளத்தை வழங்குவதில்லை.

மத்திய மனித வளம் மற்றும் மேம்பாடு துறையின் (MHRD) தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 45,000 கல்லூரிகளில் இருந்து சுமார் 30 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்திய வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகளின்படி,வேலையற்ற பட்டதாரிகள் ஒரு கோடிப்பேர் வேலை தேடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது ஒவ்வொரு வருடமும் கிடைக்கும் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட 10 மடங்கும், நல்ல வேலைவாய்ப்புகளை விட 30 மடங்கும், உயர் அந்தஸ்து வேலைகளை விடவும் 300 மடங்கும் அதிகமாகும். ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை அரசு நிறுவனங்களால் அல்லது தனியார் நிறுவனங்களால் அர்த்தமுள்ள நேர்காணல் செய்வது சாத்தியமற்றது. பிரபல பிராண்டட் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கான பணியாளர்களை தேர்ந்தெடுக்கின்றன. ஐஐடி மற்றும் ஐஐஎம்கள், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ், கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரி மற்றும் வளர்ந்து வரும் எலைட் தனியார் பல்கலைக்கழகங்கள் போன்ற 800 கல்லூரிகளில் நல்ல வேலைவாய்ப்புகளும் 80-100 உயர் அந்தஸ்து கல்லூரிகளில் உயர் அந்தஸ்து வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. இங்கு தான் நல்ல நிறுவனங்கள் வளாக நேர்காணலில் ஆட்சேர்ப்பு நடத்த வருகின்றன என்றும் அப்போதுதான், தம் விண்ணப்பம் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் ஒரு மாணவனுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. ஆகையால்தான் போட்டித் தேர்வுகள், குறிப்பிட்ட கல்லூரிகளில் சேருவதற்கான மதிப்பெண்கள் பெறுவதற்காக உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் வேலை வாய்ப்பு முகாம்கள் போன்ற பைத்தியக்காரத்தனங்கள் நடக்கின்றன. தேர்ந்தெடுக்கும் விருப்பம் இருந்தால், எந்த ஒரு புத்திசாலியான பெற்றோரும் தன் குழந்தையை இந்த சோதனையில் சிக்க வைக்க விரும்ப மாட்டார்கள். இது மாணவர்கள் மற்றும் மூலதனம் வெளிநாடுகளுக்கு செல்வதை ஓரளவு விளக்குகிறது.

துரதிர்ஷ்டவசமாக, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களும் தங்களுடைய பணியாளர் நியமனத்துக்கு இது போன்ற போட்டித் தேர்வுகளையே நம்பியுள்ளன, உதாரணமாக, ஐஏஎஸ் நியமனம் கூட அப்படித்தான் நடைபெறுகிறது. 100-ல் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பில் அறிவியல், பொருளாதாரம் அல்லது நிர்வாகத் திறன் ஆகியவற்றில் உள்ள திறன்களை தேர்வுகள் மூலம் சோதிக்க முடியுமா? இதற்கான பதில் உறுதியாக இல்லை என்பதுதான். ஜேஇஇ என்பது இந்தியாவின் உயர்கல்வியில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கலாம், ஆனால் பொது களத்தில் இந்தத் தேர்வு குறித்த முறையான பகுப்பாய்வு எதுவும் இல்லை. நமது பிரதமரின் (பரிக்ஷா பே சர்ச்சா) தேர்வு குறித்த விவாத நிகழ்வில் இதுபற்றி மாணவர்கள் அவரது கருத்தைக் கேட்க வேண்டும்.

ஆனால் தவிர இது அறிவைப் பற்றியது. ஏன் இவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான வேலைகள் இருக்கின்றன? என்ற கேள்விக்கு காலாவதியான தொழிலாளர் சட்டங்கள், போதிய முதலீடுகள் மற்றும் அதிகாரத்துவ கொலஸ்ட்ரால் ஆகியவைதான் காரணம் என நமது பொருளாதார வல்லுநர்கள் பதில், சொல்கிறார்கள். அதுவாகக் கூட இருக்கலாம், ஆனால் உயர்கல்வியுடன் ஆழமான தொடர்பை இங்கேயும் கூட அது கொண்டிருக்கிறது. மேலும் அது வேலைக்கான விளக்க குறிப்புடன் தொடங்குகிறது. ஒருவர் வாரம் அல்லது மாதம் முழுவதும் செய்ய வேண்டிய வேலையாக இது இருக்கிறது. உதாரணமாக, மகாராஷ்டிரா மாநில பிராந்திய பேருந்து சேவையான எம்எஸ்ஆர்டிசியில் ஒரு பேருந்து ஓட்டுநரை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது வாராந்திர அட்டவணையானது, சேவையின் எண்ணிக்கை, ரூட் போன்றவை, எம்எஸ்ஆர்டிசியில் உள்ள பிற வேலை விவரங்களுடன் கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும்.



இத்துடன் சேர்த்து எம்எஸ்ஆர்டிசி வழங்கும் செயல்திறன், லாபம் மற்றும் சமூக மதிப்பையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள். நிறுவனத்தின் செயல்திறன் அவ்வப்போது அளவிடப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் வேலை குறித்த விளக்கக் குறிப்புகள் புதுப்பிக்கப்பட வேண்டும். அத்தகைய ஆய்வுகள் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியால் உத்தரவிடப்பட வேண்டும். பிராந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களால் அவை செய்யப்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக எம்எஸ்ஆர்டிசி க்கும், பாசனம், நீர் வழங்கல் அல்லது நகர நிர்வாகங்கள் போன்ற பெரும்பாலான அரசு நிறுவனங்களுக்கும் இது மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அவை இப்போது குறைவான செயல்திறன், அதிகரிக்கும் இழப்புகள் ஆகியவற்றின் கொடிய சுழலில் சிக்கிக் கொண்டுள்ளன. செயல்பாட்டை முடக்கிப் போடக் கூடிய வேலைநிறுத்தத்தை எம்எஸ்ஆர்டிசி எதிர்கொள்ள நேர்கிறது. 93,000 வேலைகள் அபாயகட்டத்தில் உள்ளன. உண்மையில், சுதந்திரத்திற்குப் பிறகு பொதுத் துறையில் பெரும்பாலான வேலை விவரங்கள் தேக்க நிலையிலேயே உள்ளன. இதனால்தான், மாவட்ட பொது சுகாதாரத் துறையில் புள்ளி விவர நிபுணரோ, வேளாண் துறையில் பொருளாதார நிபுணரோ இல்லை. இவை இருந்திருந்தால், தொற்றுநோய் மற்றும் நமது சமூகத்தில் அதன் தாக்கம் பற்றி நாம் நன்றாகப் புரிந்துகொண்டிருப்போம்.

ஆனால் வளர்ந்து வரும் பகுதிகளில் நமது தனித்தன்மை வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. உதாரணமாக, காற்று மாசுபாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். காற்று மாசுபாட்டால் சுமார் 1.7 மில்லியன் இறப்புகள் மற்றும் ரூ.2.6 லட்சம் கோடி மதிப்புள்ள உற்பத்தி இழப்பு ஏற்பட்டது என இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. தொழில்சார் அறிவு மற்றும் வணிக மாதிரிகள் இருந்திருந்தால், காற்று மாசுபாட்டை அளவிடுதல், குறைத்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான ரூ.26,000 கோடி தொழிலாக மற்றும் 26,000 பேருக்கு உயர் அந்தஸ்து கொண்ட வேலை வாய்ப்பை அளிப்பதாக இருந்திருக்கும். இன்னும் கூட, அதுபோன்று நடக்கவில்லை.

இந்தியா முழுவதும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நகர நிர்வாகங்களில், அந்த நகரங்களில் உள்ள பிரச்னைகள் அடிப்படை ஆய்வைத் தொடங்க ரூ.300 கோடி வழங்கும் தேசிய சுத்தமான காற்று திட்டம் உள்ளது. ஆனால் முக்கியமாக என்ன செய்வது என்பது பற்றிய தெளிவான யோசனை இல்லாததால். அதிகாரத்துவ சோம்பேறித்தனம், திறமையின்மை போன்றவற்றால் அந்த திட்டம் வெற்றிபெறவில்லை.

எனவே, உயரடுக்கு மத்திய நிறுவனங்கள், ஐஐடிகள், ஐஐஎஸ்இஆர்கள், ஜேஎன்யு மற்றும் பிறவற்றிற்கு தெளிவான பங்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு நாளின் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, அவற்றை முறைப்படுத்த வேண்டும், மதிப்பீடுகளை, தீர்வுகளை வழங்கும் வகையிலான வணிக மாதிரிகளாகவும், வேலை வரையறைகளாகவும் அவற்றை மாற்ற வேண்டும்.

இதன் பின்னர் இந்தத் தீர்வுகளை வழங்குவதற்கு உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு அவர்கள் ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய தவறிவிட்டார்கள். மாறாக, அறிவின் உலகமயமாக்கலுக்கான துணைக்கருவிகளாகவும், அறிவியலின் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கான மிகவும் சமத்துவமற்ற அமைப்பையும் அவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதன் விளைவாக, இன்றைக்கு உலகம் எதிர்கொள்ளும் கடினமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போதுமான முதன்மை அனுபவம் இல்லாமல் இருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், கற்றுக்கொடுக்கக்கூடிய பேராசிரியர்கள் மிகக் குறைவு.

எனவே, நமது மாணவர்களில் பலர் படிக்கவும், இறுதியில் அங்கு வேலை செய்யவும் வெளிநாட்டை தேர்வு செய்வதில் ஆச்சரியமில்லை. நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அர்த்தமுள்ள வேலையைக் கண்டுபிடிக்க ? தாய்நாட்டுக்கு திரும்பி வந்து குடும்பம் நடத்த? இந்தத் தொழில் வல்லுநர்கள் திரும்பி வருவதற்கு நாட்கள் இருக்கிறதா? இதற்கான பதில் என்பது, நாம் கூட்டாக ஏற்றுக்கொண்ட சமூக யதார்த்தத்தின் சுற்றுச்சூழல் குறிப்பானாக நமது காற்றுத் தரக் குறியீட்டில் உள்ளது.

இந்த கட்டுரை முதன்முதலில் பிப்ரவரி 25ஆம் தேதியிட்ட அச்சு பதிப்பில் ‘The Great Exodus’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையின் எழுத்தாளர் பம்பாய் ஐஐடி-யின் பேராசிரியராவார்.

தமிழில்; ரமணி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ukraine Russia India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment