நாராயணன் திருப்பதி
தண்ணீரை கூட இறக்குமதி செய்யும் 57,50,000 பேரை கொண்ட ஒரு நாடு சிங்கப்பூர். அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 0 %, தொழில்துறையின் பங்கு 26%, சேவைத்துறையின் பங்கு 73.4 %. தொழில் துறையில் கூட உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்து அதனை பொருத்தும் தொழிற்சாலைகள் அதிகம். இயற்கை வளங்களில்லாத நாடு. உற்பத்தி இல்லாத நாடு. அந்த நாட்டின் 85 விழுக்காடு மக்கள் வருமான வரியை செலுத்தியே தீரவேண்டிய சட்டங்கள். குடியரசாக இருந்தாலும் சட்ட திட்டங்கள் கடுமையாக உள்ள நாடு. சாலையில் உமிழ்ந்தால் தண்டனை. பிரம்படி தண்டனை உள்ள நாடு. கருத்து சுதந்திரம் என்பது அறவே இல்லாத நாடு. அரசுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராக கருத்து கூறினால் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யும் சர்வாதிகார சட்டங்கள். ஊடக கருத்து சுதந்திர பட்டியலில் 180 நாடுகளில் 153வது வரிசையில் உள்ள நாடு. மனித உரிமைகள் கேள்விக்குறியே? இந்த நாட்டின் மக்கள் தொகைக்கு அதிக பட்ச தண்டைனயான மரண தண்டனை அதிகமே.
தமிழக பாஜக, மெர்சல் திரைப்படத்தில் வரும் ஒரு சில வசனங்களை எதிர்த்து அவைகளை நீக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தண்ணீரை கூட இறக்குமதி செய்யும் நாடு சிங்கப்பூர் என்கிற ஒரு அடிப்படை விவரத்தை கூட அறியாது ஒரு படத்தை உருவாக்கி, சிங்கப்பூரில் 7 விழுக்காடு வரி ஆனால் இந்தியாவில் 28 விழுக்காடு வரி, ஆனால் அங்கே மருத்துவம் இலவசம், இங்கே இல்லை, என்ற ரீதியில் வசனம் அமைத்திருப்பது தவறே. சிங்கப்பூரில் 85 விழுக்காடு மக்கள் வருமான வரி செலுத்துவதும், வருமானத்தில் 10 விழுக்காடு வரை கட்டாயமாக மருத்துவ காப்பீட்டுக்கு பிடித்தம் செய்யப்படுகிறது என்பதே உண்மை. ஆனால் 128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 விழுக்காடு மக்கள் கூட வருமான வரி செலுத்துவதில்லை என்பதும், ஒரு சில ஆடம்பர பொருட்களுக்கே 28 விழுக்காடு வரி வசூலிக்கப்படுகிறது என்பதும் மறைக்கப்பட்டிருப்பது தவறே.
வயதானோருக்கு மானியம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள அளவிற்கு, அரசு பொது மருத்துவமனைகள் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதே உண்மை. இதில் ஏழை எளிய மக்கள் இலவச மருத்துவத்தை பெறுவது தெரியாதது வியப்பே. இதை ஜிஎஸ்டி யோடு தொடர்புபடுத்தி பொய்யான தகவலை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது தவறே. பாஜக குறித்தோ அல்லது அதன் நிர்வாகிகள் குறித்த விமர்சனங்களுக்கு இந்த எதிர்ப்பு இல்லை என்பதை அனைவரும் உணர்வது நல்லது. ஆனால் எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் ஏதோ பாஜகவிற்கு எதிராக சில கருத்துக்கள் இருந்தது போலவும், அதை நாம் எதிர்த்தது போன்ற மாயையை உருவாக்கி, பாஜகவுக்கும் விஜய்க்குமான மோதலை போல் பிரச்சினையை திசைதிருப்பியது, பாஜகவின் வளர்ச்சியை தடை செய்ய எத்தனிக்கும் முயற்சியே. கருத்து சுதந்திரம் உள்ளது என்பதாலேயே நாட்டின் வளர்ச்சி குறித்த அரசின் திட்டங்களை பொய்யான தகவல்களை சொல்லி விமர்சிப்பது முறையாகாது. பல நூறு கோடி ரூபாய்கள் முதலீடு செய்து எடுக்கப்படும் திரைப்படம் குறித்து விமர்சிக்கலாமா என்று கேட்பவர்கள், பல ஆயிரம் லட்சம் கோடி ரூபாய்கள் தொடர்புடைய ஜிஎஸ்டி பொருளாதார சீர்திருத்தத்தை அந்த திரைப்படத்தின் வசனம் மூலம் விமர்சிப்பது அல்லது தவறான கருத்துக்களை பரப்புவது தேச நலனுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் தான் என்பதை உணர வேண்டும். மேலும், தணிக்கை துறை மத்திய அரசின் வசம் தானே உள்ளது என்று கேட்பது சரி தான். இந்த படத்தில் இந்த வசனங்களை அனுமதித்தவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் கட்டாயம்.
தேசத்தின் பொருளாதார சீர்திருத்தத்தை தவறான தகவலை தங்களுடைய வர்த்தக நோக்கிற்காக மக்கள் மத்தியில் விதைத்தது தவறு தான் என்பதை திரைப்படத்தில் தொடர்புடையவர்கள் உணருவது அவசியம். இண்டு சர்க்கார்’ திரைப்படத்தில் அவசரகால நிலை குறித்து விமர்சனம் செய்யப்பட்டது என்ற காரணத்தினால் அதை தடை செய்த காங்கிரஸ். ராஜிவ் கொலை குறித்த திரைப்படம் என்பதனால் 13 ஆண்டுகள் அதற்கு அனுமதியளிக்காத காங்கிரஸ். மக்கள் தொலைகாட்சி தங்கள் கட்சி குறித்து தவறான தகவலை அளித்ததால் அந்த அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர். டி. பி . சந்திரசேகர் என்பவர் தன் கட்சியில் இருந்து பிரிந்து சென்று புது கட்சியை துவங்கியதால் ஆத்திரம் கொண்டு 2012ல் அவரை 51 இடங்களில் வெட்டி கொலை செய்ததில் பல கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றவாளிகள் என்ற உண்மையை திரைப்படமாக எடுத்ததை கண்டித்து அதை தாயரிக்கும் போதும், வெளியிடும் போதும் தடை செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர்.
தங்கள் கட்சியை, கட்சி தலைவர்களை விமர்சித்ததற்கு வன்முறை கையிலெடுத்த நிலையில், மெர்சல் படத்தில் இந்த தேசத்தின் மிக பெரிய சீர்திருத்தத்தை தவறாக சித்தரிக்கும் சில வசனங்களை நீக்க சொன்னால், அதை கருத்துரிமையை பாதிக்கிறது என்று சொல்வது முறையா? கட்சியின் மீதுள்ள, கட்சி தலைமையின் மீதுள்ள அக்கறையை விட தேசத்தின் மீது இவர்களுக்கு பற்று இல்லை எனபதே மெர்சல் பட விவகாரம் உணர்த்துகிறது.
இந்த திரைப்பட நிறுவனத்தினர் தங்கள் தவறை உணர்ந்து, சம்பந்தப்பட்ட காட்சிகளில் உள்ள வசனத்தை நீக்குவது சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதோடு, அரசியல் கட்சிகளின் இரட்டை வேடத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.
கட்டுரையாளர் நாராயணன் திருப்பதி, தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர்.